நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/13. பொள்ளாச்சி ஞானம்

13. பொள்ளாச்சி ஞானம்

“டைரக்டா் பிரகாஷின் புண்ணியத்தால் கால் ஒடிந்து நான் ஒன்றரை வருஷம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அதைப் பற்றி ‘ஹிந்து’ பேப்பர்கூட அப்போ கண்டிச்சி எழுதியிருந்தது. அதுக்கப்புறம் நானும் பிரகாஷைப் பார்க்கல்லே, பிரகாஷூம் என்னைப் பார்க்கல்லே...”

“மறுபடியும் நாடகக் கம்பெனிக்கு வந்துவிட்டீர்களா ?

“இல்லே, சினிமா எப்போ வந்ததோ அப்பொவே பல நாடகக் கம்பெனிங்க கலைஞ்சி போச்சு. சினிமாவிலே ‘சான்ஸ்’ கெடைச்ச நடிகருங்க சினிமாவிலே நடிச்சாங்க, கெடைக்காதவங்க அங்கங்கே ‘ஸ்பெஷல் நாடகம் போட்டுக்கிட்டிருந்தாங்க...”

“நவாப் ராஜமாணிக்கம், டி.கே. எஸ். பிரதர்ஸ் போன்ற கம்பெனிகள்...”

“தொடர்ந்து நடந்துக்கிட்டுத்தான் இருந்தன. அவங்களைக் கண்டா எனக்கு அலர்ஜி: என்னைக் கண்டா அவங்களுக்கு அலர்ஜி!”

“அப்புறம்

“நானே படாதிபதியானேன்!”

“அதுக்குள்ளேயா?”

“ஏன், ஆகக் கூடாதா?”

“ஆகலாம்; பணம்... ?" “ஒரு படத்துக்கு அஞ்சி லட்சம் பத்து லட்சம்னு வேண்டியிருக்கிற இந்தக் காலத்திலேயே எத்தனையோ பேரு கையிலே ஒரு பைசா இல்லாம படாதிபதியாயிடறாங்க...”

“ஐந்து லட்சம் பத்து லட்சத்தில் ஒரு படத்தையே எடுத்து முடிப்பதா? இந்தக் காலத்திலா ? அது எப்படி முடியும்? அந்தத் தொகை ஓரிரு நடிகர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கவே போதாது என்கிறார்களே ?”

“அப்படித்தான் நானும் கேள்விப் படறேன். ஆனா அந்த மாதிரி நடிகருங்களை வைச்சிச் சிலபேரு பணம், போட்டும் படம் எடுக்கிறாங்க, சில பேரு பணம் போடாமலும் எடுக்கிறாங்க...”

“அது எப்படி ?”

“சிதம்பர ரகசியம் மாதிரி அது ஒரு சினிமா ரகசியம். அந்த ரகசியமெல்லாம் எனக்குத் தெரியாது; ஆனா ஒண்ணு மட்டும் தெரியும்....”

“என்ன ?”

“செட்லே சில பசங்க இருப்பானுங்க. ஷாட்டுக்கு ஷாட் லைட்-அப் பண்ணணுமில்லே, அப்போ கொஞ்ச நேரம் இடைவெளி இருக்கும். அந்த நேரத்திலே நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி நான் வெளியே போட்டுக் கொஞ்சம் காற்றாட உட்காருவேன். அந்தச் சமயத்திலே, ‘சோடா வேணுமா, தண்ணி வேணுமா, காப்பி வேணுமா ?ன்னு கேட்டுக்கிட்டு அந்தப் பசங்க வருவானுங்க. ஏதாவது வேணும்னு சொன்னா கொண்டுவந்து கொடுப்பானுங்க. இப்படி ரெண்டு மூணு நாள் நடக்கும். நாலாவது நாள் அவனுங்களிலே ஒருத்தன் தலையைச் சொறிஞ்சிக்கிட்டே வந்து நிற்பான். ‘அஞ்சி, பத்துக்கு அடி போடப் போறானாக்கும்?’னு நெனைச்சி, ‘என்ன சங்கதி?'ம்பேன், அவன் அஞ்சும் கேட்கமாட்டான், பத்தும் கேட்கமாட்டான். அதுக்குப் பதிலா அஞ்சி லட்சம் பத்து லட்சம் வாங்கறதாச் சொல்லும் ஒரு பெரிய ஸ்டார் பெயரைச் சொல்லி, அவரை வைச்சி நானும் ஒரு படம் எடுக்கப் போறேன். அதிலே நீங்களும் நடிக்கணும்பான்!”

“அதைக் கேட்டதும் நீங்கள் மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விடுவீர்களா?’ ‘

“இந்த அதிர்ச்சிக்கெல்லாம் கீழே விழற ஆளா நான்?... ‘படம் பூஜை போடறதோடு நிற்குமா, அதுக்கு மேலேயும் வளருமா ?'ன்னு கேட்பேன். அவன் சிரிப்பான். சிரிச்சிட்டு, ‘என்ன அண்ணே, அப்படிக் கேட்டுட்டீங்க பணத்துக்குச் சரியான ஆளைப் பிடிச்சிருக்கேன்!. அண்ணே!'ம்பான். ‘எப்படிப் பிடிச்சே ‘ம்பேன். அதெல்லாம் தொழில் ரகசியம் அண்ணே, சொன்னா உங்களுக்குப் பிடிக்காது'ம் பான். ‘அப்படியா ? அப்போ உன் படத்திலே நடிக்கவும் எனக்குப்பிடிக்காது, போடா!'ன்னு சொல்லிவிடுவேன்...”

“அந்தத் தொழில் ரகசியம் தான் ‘சினிமா ரகசியம்’ போல் இருக்கிறது:”

“என்ன ரகசியமோ, எனக்குத் தெரிஞ்சவரையிலே இப்போ சினிமா ரகசியம் ஒரு சாண் துணியிலே இருக்கு. அந்தத் துணியும் ‘சென்ஸார் போர்டு'ன்னு ஒண்ணு இருந்து தொலையுதேன்னு இருக்கு; இல்லேன்னா....”

“சினிமாக் கலையின் முன்னேற்றத்தையல்லவா அது காட்டுவதாகச் சொல்கிறார்கள் ?”

“அப்படியா ? வேறே எதையோ இல்லே அது காட்டறாப்போல இருக்கு!”

“சரி, அதை விடுங்கள்; நீங்கள் படாதிபதியான, கதையைச் சொல்லுங்கள் ?”

“படாதிபதின்னா நான் மட்டும் படாதிபதியாயிடல்லே; என்னோட பாலையா, கேசவன்நாயர், ராதாபாய், பத்மன்செல்லப்பன் எல்லாரும் இருந்தாங்க. எங்க கையிலே தொழில்தான் இருந்தது; பணம் இல்லே. அதுக்காக ரெண்டு பேரைப் பிடிச்சோம். ஒருத்தர் கொஞ்சம் கை கொடுத்தார்; இன்னொருத்தர் கை கொடுக்கிறேன்னு சொல்லிக் கையை விட்டுட்டார். அது மாடர்ன் தியேட்டர்ஸ் கட்டி முடிக்கப்பட்டிருந்த சமயம். அங்கேயே ஷூட்டிங்கை ஆரம்பிச்சோம்...”

“படத்தின் பேரைச் சொல்லவில்லையே ?” “பம்பாய் மெயில்.” “மெயில் என்றால் ஒரு வேகம் இருந்திருக்குமே?” “பெயரில்தான் அது மெயிலாயிருந்தது; படப்பிடிப்பில் பாசஞ்சராயிருந்தது!” -.

“அதனாலென்ன, எப்படியும் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்குமே!”

“சேர்ந்திடுச்சி, சேர்ந்திடுச்சி! ஆனா, அதோட எங்களுக்குச் சொந்தமாப் படம் எடுக்கிற ஆசையே போயிடுச்சி!”

“சட்டி சுட்டா கையை நாமா விடுகிறோம் ? அதுதான் தானாகவே விட்டுவிடுகிறதே, அப்புறம் ?”

“மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்டா கொஞ்ச நாள் இருந்தேன். அங்கேதான், சந்தனத்தேவன், ‘சத்தியராணி எல்லாம் எடுத்தாங்க, அங்கேயும் ஒரு சங்கடம் வந்து சேர்ந்தது...!”

“அது என்ன சங்கட்ம்...”

“பொள்ளாச்சி ஞானம்னு ஒரு பொண்ணு...”

“அது யார் அந்தப் பொள்ளாச்சி ஞானம் ?”

“அதுதான் பி.எஸ். ஞானம்னு சொல்லுவாங்களே, அது. அந்தப் பொண்ணு அப்போ மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலே நடிச்சிக்கிட்டிருந்தது. அதுக்கு அங்கே ஏகக் கட்டுக் காவல் ... யாராவது ஒரு வார்த்தை அந்தப் பொண்ணுகிட்டே பேசினாப் போதும், ‘அங்கே உனக்கென்ன பேச்சு? இங்கே உனக்கென்ன பேச்சு?ன்னு சீறி விழுவாங்க...' அட, கடவுளே இந்தப் பெண்களிடம் அப்படி என்னதான் இருக்குமோ, தெரியவில்லையே?”

“என்ன இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சித்தான் இருக்கு. ஆனாலும் சிலருக்கு அதிலே ஏதோ ஒரு தீராத மயக்கம். அந்த மயக்கத்தைத் தெளியவைக்கணும்னு நான் நெனச்சேன். அதுக்கு என்ன வழி ?ன்னு யோசிச்சப்போ, ‘வள்ளுவன் வழி'தான் சரின்னு பட்டது...”

“அது என்ன வள்ளுவன் வழி ?”

“வாயாலே ஏன் பேசறே, கண்ணே போதுமே காரியத்தை முடிக்கன்னு அவன் சொல்லல்லையா?... அட, எங்கப்பா! இந்தக் காதல் விவகாரத்திலே தாடியும் ஜடாமுடியும் வைச்சிக்கிட்டு அவன் போட்டிருக்கிற போடு டைட் பாண்ட் டி ஷர்ட் பயலுங்ககூடப் போடமுடியாது போல இருக்கே ... அவள் வழியையே நானும் ‘பாலோ'பண்ணேன்... அதோடே நாடகத்திலும் அந்தப் பொண்ணை நடிக்கவிட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சி.... கண்ணாலேயே காரியத்தை ஒரு தினுசா முடிச்சி, பொம்மியை மதுரை வீரன் சிறை எடுத்தாப்போல, ஒரு நாள் ராத்திரிக்கு ராத்திரியா ஞானத்தை மாடர்ன் தியேட்டர்ஸிலேயிருந்து சிறை எடுத்து வந்து பொள்ளாச்சியிலே சேர்த்தேன். அதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு யோசனை பண்ணிக்கிட்டிருந்தப்போ யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை வந்தார். ‘என்ன சங்கதி ?'ன்னேன். ‘ஒரு ரவுடிப் பய காண்ட்ராக்டர்கிட்டே மாட்டிக்கிட்டேன். அவன் பேசிய பணத்தையும் ஒழுங்காகக் கொடுக்கமாட்டேங்கிறான், கம்பெனியையும் வேறே ஊருக்குப் போக விட மாட்டேங்கிறான்னார். ‘ஏன், உங்க சமாதான வழியைக் கையாண்டு பார்க்கிறதுதானே ?'ன்னேன். ‘அந்த வழியெல்லாம் இப்போ எங்கே செல்லுது? உலகம் முழுக்க சமாதானம், சமாதானம்னு சொல்லிக்கிட்டே சண்டை போடறதுதானே சமாதானமா இருந்துகிட்டிருக்கு! ‘ன்னார். ‘வந்தீங்களா வழிக்கு, வாங்க போவோம்’னு அவரோடே புறப்பட்டேன்."