நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/15. என்.எஸ்.கே. எதிரியானார்

15. என்.எஸ்.கே. எதிரியானார்

“சில நாடகங்களும் சினிமாப் படங்களும் இந்தக் காலத்திலேதானா வெள்ளி விழாவும் பொன் விழாவும் கொண்டாடுது? அந்தக் காலத்திலேயும் கொண்டாடிக்கிட்டுத்தான் இருந்தது. சேலம் ஓரியண்டல் தியேட்டர்ஸிலே ‘இழந்த காதல்’ நாடகம் ‘நூறாவது நாள் விழா’ கொண்டாடி, அதுக்கு மேலேயும் நடந்துக்கிட்டிருந்தது. அந்த நாடகத்தைப் படமாக்க மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், சாரங்கபாணி அண்ணன் எல்லாரும் வந்து பார்த்தாங்க. அவங்களுக்குக் கதை பிடிச்சிருந்தது; அதிலே நடிச்ச மாரியப்பனைத் தவிர மற்றவங்க எல்லாரையும் பிடிச்சிருந்தது....”

“மாரியப்பனை ஏன் பிடிக்கவில்லை ?”

“அவனைப் பிடிக்காமப் போனதுக்கு காரணம் வேறே ஒண்ணுமில்லே, அவன் அவ்வளவு நல்லா நடிச்சதுதான்!”

“இது என்ன வேடிக்கை?”

“இத்தனைக்கும் அவன் போட்டது பொம்பிளை வேஷம்; ஹீரோயின் பத்மாவா அவன் நடிப்பான். அந்த மாதிரி படத்திலே நடிக்க அப்போ நெஜப் பொம்பிளை கிடைக்கல்லே...”

“அந்த மாரியப்பன் இப்போது எங்கே இருக்கிறார்?”

“தெரியல்லே; அவரோட ஹீரோவா நடிச்ச டி.கே.சம்பங்கி இருக்கிற இடந்தான் தெரியுது; அவர் இருக்கிற இடம் தெரியல்லே..." “கடைசி வரையிலே இழந்த காதலைப் படமாக்க யாருமே துணியவில்லையா ?”

“என்.எஸ்.கே. துணிந்தார்.ஆனா...”

“என்ன ஆனால்...”

“படத்திலேயும் வில்லன் ஜகதீஷா என்னைப் போட்டு எடுக்க அவர் விரும்பல்லே...”

“காரணம் ?”

“அவர் என்ன நினைச்சாரோ, அது எனக்குத் தெரியாது. அந்த வேஷத்திலே எனக்குள்ள புகழை அவர் ‘ராபெரி பண்ணப் பார்க்கிறார்னு நான் நினைச்சேன்!”

“ஒருவன் சேர்த்து வைத்துள்ள பணம், கிணம், நகை நட்டைத்தான் கொள்ளை அடிப்பார்கள்; புகழைக்கூட யாராவது கொள்ளை அடிப்பது உண்டா, என்ன ?”

“கலை உலகத்திலே அது சர்வ சாதாரணம். ஏன்னா, அங்கே ஒருத்தன் பொழைக்கணும்னா அவனுக்கு மூலதனமா வேண்டியிருக்கிறது புகழ்தான்!”

“அதுவும் ஒரு விதத்திலே உண்மைதான். அது இல்லையென்றால் அவனை யார் அழைக்கப் போகிறார்கள் ?..ம், அப்புறம் ?”

“ஆளை மாத்திப் போட்டா ‘பப்ளிக்’ அதை எப்படி வரவேற்குதுன்னு தெரிஞ்சிக்க வேணாமா ? அதுக்காகப் பொன்னுசாமிப் பிள்ளைகிட்டே சொல்லி, எனக்குப் பதிலா அந்த வேஷத்திலே வேறே ஆளைப் போட்டுப் பார்க்கச் சொன்னாங்க..”

“விஷயம் அந்த அளவுக்குப் போய்விட்டதா?”

“ஆமாம்; சேலத்திலேயிருந்து நாங்க பொள்ளாச்சிக்கு வந்தோம். அங்கே என் வேஷத்தைப் பாலையாவைப் போடச் சொன்னாங்க, போட்டார். மக்கள் அவரை ஏற்கல்லே.... ஏற்கல்லேன்னா, தப்பு அவர் மேலேன்னோ, அவர் நடிப்பு மேலேன்னோ நான் சொல்ல மாட்டேன். ஏன்னா, அவரைப் பொறுத்தவரையிலே அவர் நல்ல நடிகர்; எந்த வேஷத்தைக் கொடுத்தாலும் அதை ஏத்து நல்லா நடிக்கக் கூடியவர். ஜனங்களுக்கு என்னவோ ஜகதீஷ் வேஷத்திலே அவரைப் பார்க்கப் பிடிக்கல்லே; ‘கொண்டா ராதாவை'ன்னு ஒரே கூச்சல் போட ஆரம்பிச்சிட்டாங்க. அந்தக் கூச்சலை அடக்கப் பி.ஜி வெங்கடேசனைப் பிடிச்சாங்க.பாவம், அவன் அல்பாயுசிலே செத்துட்டான்..நல்லாப் பாடுவான். அவனை விட்டுப் பாடச் சொல்லிக் கலாட்டாவை ஒரு வழியாச் சமாளிச்சாங்க...”

“நீங்கள் ?”

“நான் ஒண்ணும் பண்ணல்லே, மேலே என்ன நடக்குதுன்னு கவனிச்சிக்கிட்டு இருந்தேன்.கம்பெனி கோயமுத்துருக்கு வந்தது. அங்கே பி.ஏ.ராஜூ செட்டியார்னு பேர் போன ஒரு தங்க வைர நகைக் கடை வியாபாரி இல்லையா ?. அவருக்குச் சொந்தமா ‘டைமண்ட் டாக்கீஸ்'னு ஒண்ணு இருக்குது. அந்த டாக்கீஸ் அப்போ அவர் மகன் குப்புசாமிச் செட்டியார் மேற்பார்வையிலே நடந்துகிட்டிருந்தது. நான் ஏதோ ஒரு வகையிலே அவருக்கு இருநூறு ரூபா பாக்கி...”

“அதை அவர் அப்போது திருப்பிக் கொடுத்தால்தான் ஆயிற்று என்று ஒற்றைக் காலில் நின்றாரா ?”

“அப்படி ஒண்ணும் நிற்கல்லே; ‘நாடகம் நடந்து முடியட்டும், அப்புறம் கேட்டு வாங்கிக்கலாம்’னு அவர் இருந்திருப்பார் போலிருக்கு...நாடகம் நடந்தது; இங்கேயும் ‘இழந்த காதல்’ தான்...ஆனா எனக்குப் பதிலா இங்கே பாலையாவை வில்லன் ஜகதீஷாப் போடாம, பவுநீர்னு வேறே ஒரு நடிகரைப் போட்டுப் பார்த்தாங்க... இங்கே நடந்த கலாட்டா பொள்ளாச்சியிலே நடந்த கலாட்டாவைத் துக்கி அடிச்சிடிச்சி..நாடகம் பார்க்க வந்திருந்த மகா ஜனங்க அத்தனை பேரும் நாற்காலிகளைத் துக்கிக் கீழே போட்டு ஒடைச்சித் தூள் தூளாக்க ஆரம்பிச்சிட்டாங்க..அதோட விடல்லே, ஒரே ஒரு சீனிலாவது ராதா தலையைக் காட்டினாத்தான் சும்மா விடுவோம். இல்லேன்னா விட மாட்டோம்னு கத்தினாங்க. பொன்னுசாமிப் பிள்ளைக்கு ஒண்ணும் புரியல்லே; ‘யாரைப் போட்டாலும் பாழும் ஜனங்க ராதாவைக் கொண்டாங்கிறாங்களே, என்.எஸ்.கே.ய்க்கு நான் என்ன பதில் சொல்வேன்?"கிற கவலை அவருக்கு; குப்புசாமிச் செட்டியாருக்கோ ‘புதுசா வாங்கிப் போட்ட நாற்காலிகளெல்லாம் தூள் தூளாகிறதே’ங்கிற கவலை.. என்ன செய்வார், பாவம்!..'கிடக்கிறார் பொன்னுசாமிப் பிள்ளை'ன்னு என்கிட்டே வந்தார். ஜனங்க சொல்றாப்போல ஒரே ஒரு சீனிலாவது வந்து நீ நடிச்சிடப்பா!’ ன்னார். நான் அதுதான் சமயம்னு, ‘ஒரு நிபந்தனை'ன்னேன்; என்ன நிபந்தனை?'ன்னார். ‘நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய இருநூறு ரூபாயை ரைட்ஆப் பண்ணிடணும்’ னேன். ‘சரி'ன்னார். அதுக்கு மேலேதான் நான் போய் அந்த ஒரு சவுக்கடி சீன்லே மட்டும் நடிச்சிட்டு வந்தேன். ஜனங்களுக்குப் பரம திருப்தி, ராதாவுக்கு ஜே ன்னு கத்திக்கிட்டே கலைஞ்சிப் போயிட்டாங்க...”

“இதெல்லாம் என்.எஸ்.கே.யின் மனத்தை மாற்றியிருக்குமே?”

“அதான் இல்லே, அப்பவும் அவர் தன் பிடிவாதத்தை விடாம கே.பி. காமாட்சியை எனக்குப் பதிலாப் போட்டு ‘இழந்த காதல்’ படத்தை எடுத்தார்....”

“எங்கே ?”

“கோயமுத்துார் சென்ரல் ஸ்டுடியோவிலே. அப்போ யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை கம்பெனி சிங்காநல்லூரிலே நாடகம் நடத்திக்கிட்டிருந்தது; நானும் நடிச்சிக்கிட்டிருந்தேன். திடீரென்று ஒரு ஜப்தி...”

“எதற்கு?”

“நாடகக் கம்பெனிக்காரனுக்கு ஜப்தி வருதுன்னா, அது மளிகைக் கடைக்காரன் கிட்டேயிருந்துதான் வரும். ஏன்னா, அவன் கிட்டே வாங்கித் தின்கிற கடனையே அவனாலே சில சமயம் கொடுக்க முடியறதில்லே...”

“அப்புறம்?”

“அடுத்த நாள் காலையிலே அந்தக் கடைக்காரன் கோர்ட் அமீனாவோடு வந்து நாடகச் சாமான்களை யெல்லாம் ஜப்தி செய்யப் போறாங்கிற விஷயம் எங்களுக்குத் தெரிஞ்சிப் போச்சு.. பிள்ளை வழக்கம் போலக் கையைப் பிசைஞ்சிட்டு நின்றார். அப்போ சகஸ்ரநாமம், என்.எஸ்.கே கிட்டே வேலையாயிருந்தார். அவருடைய காருங்கெல்லாம் அப்போ சகஸ்ரநாமம் இன்சார்ஜிலேதான் இருந்தது. நான் போய் சகஸ்ரநாமம் கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே என்.எஸ்.கே. காரிலே ஒண்ணை எடுத்துக்கிட்டுச் சிங்காநல்லூருக்கு வந்தார். ரெண்டு பேருமாச் சேர்ந்து எல்லாச் சாமானையும் ராத்திரிக்கு ராத்திரியா கொஞ்சங் கொஞ்சமாக் காரிலே கொண்டுபோய்ப் பொள்ளாச்சியிலே சேர்த்தோம்”,

“சகஸ்ரநாமத்தை உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?”

“தெரியுமாவது, நல்லாத் தெரியும். நானும் அவரும் சாயந்திரமானா வாலிபால் ஆடுவோம். பழகறதுக்கு ரொம்ப நல்ல மனுஷர். யாருக்கு எந்த ஆபத்து வந்தாலும் தன்னாலே முடிஞ்ச வரையிலே கை கொடுத்து உதவற சுபாவம் அவருடையது.”

“அப்படித்தான் நானும் அவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்..ம்,பிறகு.?”

‘பொள்ளாச்சியிலே எனக்கும் பிள்ளைக்கும் மறுபடியும் தகராறு வந்துடிச்சி, பிரிஞ்சிட்டோம்...”

“அதோடு அவரையும் மறந்து, என்.எஸ்.கே.யையும் மறந்துவிட்டீர்களா ?” -

“மறப்பேனா ? யாரை மறந்தாலும் மறப்பேன்; யாரை மன்னிச்சாலும் மன்னிப்பேன், என் புகழிலே ஒருத்தன் ‘ராபெரி பண்ண வரான்னா அவனை நான் மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்..”

“அதற்காக... ?”

“என்ன நடந்தாலும் சரி, ‘என்.எஸ்.கே. யைச் சுட்டுத் தள்றதே சரி'ன்னு அன்னிக்கே உளுந்தூர்ப்பேட்டைக்குப் போய் ஒரு ஆசாமியைப் பிடிச்சித் துப்பாக்கி ஒண்ணு வாங்கினேன்!"