நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/16. பெரியார் போட்ட பூட்டு

16. பெரியார் போட்ட பூட்டு

“டுமீல், டுமீல்!” என்ன சத்தம் இது ?ன்னு கேட்கிறீங்களா ?.. துப்பாக்கி சுடற சத்தந்தான் “... என்.எஸ்.கே.யைக் குறி பார்த்துச் சுட வேண்டாமா ?... அதுக்கு வேண்டிய ‘பிராக்டி'ஸை அக்கம்பக்கம் பார்த்துச் சேஞ்சிக்கிட்டிருந்தேன்...”

“அப்படியும் போலீசார் சந்தேகப்பட்டு வந்து ஏதாவது கேட்டிருப்பார்களே ?”

“எப்படிக் கேட்பாங்க, எங்க கம்பெனிதான் நாடகக் கம்பெனியாச்சே, ஏதோ ஒத்திகை நடக்குதுன்னு நெனைச்சிட்டிருந்தாங்க...”

“அப்போது நீங்கள் எந்தக் கம்பெனியில் இருந்தீர்கள் ?”

“டி.கே.சம்பங்கியின் கம்பெனியிலே இருந்தேன்...”

“அவர் வேறே கம்பெனி ஆரம்பிச்சிருந்தாரா?”

“ஆமாம், அப்போ யார் கம்பெனி ஆரம்பிச்சாலும் ஒரு நாளைக்குக் கொறைஞ்ச பட்சம் ஆயிரம் ரூபாயாவது வசூலாயிடும்...”

“அந்தக் கம்பெனியிலும்...." “அதே இழந்த காதல் நாடகந்தான்; எனக்கு அதே ‘வில்லன் ஜகதீஷ் வேஷந்தான்....”

“எந்த வில்லனையும் எதையாவது சொல்லிக்’ ‘குபீ’ ரென்று சிரிக்க வைத்துவிடும் என்.எஸ்.கிருஷ்ணனால் உங்களை மட்டும் சிரிக்க வைக்க முடியவில்லை போலிருக்கிறது!”

“ரொம்பப் பேர் அவரை இப்படித்தான் வெறும் சிரிப்பு நடிகருன்னே இன்னும் நெனச்சிக்கிட்டிருக்காங்க...அது தப்பு...அவர் வெறும் சிரிப்பு நடிகர் மட்டும் இல்லே, பெரிய சிந்தனையாளரும் கூட.”

“என்ன, திடீரென்று நீங்கள் அவரைப் பாராட்ட ஆரம்பித்து விட்டீர்கள் ?”

“உண்மை எங்கே இருந்தாலும்...அது என் நண்பன் கிட்டே இருந்தாலும் சரி, விரோதிகிட்டே இருந்தாலும் சரி..அதை என்னாலே பாராட்டாம இருக்க முடியாது. என்.எஸ்.கே.ய்க்கு இன்னிக்குச் சிலை சேஞ்சி வைச்சிருக்காங்க, அந்தச் சிலையை அறிஞர் அண்ணாதுரை திறந்து வைச்சிருக்காருன்னா சும்மாவா திறந்து வைச்சிருக்காங்க?...தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலே, ‘சாமி, பூதம்’னு சொல்லி ஒரு சாமானியனைக்கூட இன்னிக்கு யாராலும் ஏமாத்த முடியலேன்னா, அதுக்குக் காரணமாயிருந்தவங்களிலே என்.எஸ்.கே.யும் ஒருத்தர் இல்லையா ? படிச்சவன் முட்டாளாயிருந்தா அவனைத் திருத்தறது அவ்வளவு கஷ்டமில்லே; யாரும் திருத்திடலாம். படிக்காத முட்டாளை அவ்வளவு சுலபமா யாராலும் திருத்திட முடியாது.அந்தக் கஷ்டமான காரியத்தை எந்த விதமான எதிர்ப்புக்கும் அஞ்சாம இந்த நாட்டிலே சேஞ்சிக்கிட்டு வந்தவங்களை, சேஞ்சிக்கிட்டு வர்றவங்களை விரல் விட்டு எண்ணிடலாம்...அவங்களிலே குறிப்பிடத் தக்கவங்க ரெண்டு பேரு..." “யார் அவர்கள்?”

“ஒருவர் பெரியார்; இன்னொருவர் என்.எஸ்.கே...”

“அந்த அளவுக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து வைத்திருக்கும் அவரையா நீங்கள் சுட்டுத் தள்ள வேண்டுமென்று நினைத்தீர்கள் ?”

“அது வேறே விஷயம், இது வேறே விஷயம்...ஆனா அவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு வித்தியாசம்...”

“அது என்ன வித்தியாசம் ?”

“பெரியார் காசு விஷயத்திலே கருமி, கருத்துக்களை அள்ளிக் கொடுக்கறதிலே வள்ளல்...என்.எஸ்.கே. அதற்கு நேர் விரோதம்...காசையும் அவர் அள்ளிக் கொடுப்பார். கருத்தையும் அள்ளிக் கொடுப்பார்...”

“அப்படிப்பட்டவர் உங்களுடைய புகழைக் கொள்ளையடிக்க விரும்புவானேன்?”

“அதுதான் எனக்குப் புரியல்லே, அதைத் தாங்கத்தான் என்னாலே முடியல்லே...அதுக்காக என்.எஸ்.கே.யைச் சுடறதுக்கு நான் ‘பிளான்’ போட்டுக்கிட்டிருக்கிற விஷயம் எப்படியோ பொன்னுசாமிப் பிள்ளைக்குத் தெரிஞ்சுப் போச்சு...அவர் சும்மா இருப்பாரா?...உடனே ஓடிப்போய் என்.எஸ்.கே.கிட்டே விஷயத்தைச் சொல்லிட்டார்...”

“அப்புறம் ?”

“பிள்ளை பயந்த அளவுக்கு என்.எஸ்.கே. பயந்துடல்லே; காரை எடுத்துகிட்டு நேரா கரூருக்கு வந்தார். அப்போ நானும் சம்பங்கியும் அங்கேதான் நாடகம் போட்டுக்கிட்டிருந்தோம்.என்.எஸ்.கே. வரப்போ நான் மாடி அறையிலே இருந்தேன்..அவர் வந்ததும் என்னையும் அறியாம நான் எழுந்து நின்னேன்...எடுக்கும்போதே அவர், ஏண்டா, உனக்குப் புத்தி இருக்காடா ?ன்னார். அப்போத்தான் என் புத்திமேலேயே எனக்குச் சந்தேகம் வந்தது. இருந்திருந்தா, சுடறவனையே தேடி வர இந்த ஆளைச் சுடறதுக்கு நான் துப்பாக்கி வாங்கியிருப்பேனான்னு யோசிக்க ஆரம்பிச்சேன்... ‘என்னடா யோசிக்கிறே? உனக்குப் புத்தி இருக்கான்னு கேட்கிறேன்’ னார். அவர் மறுபடியும். நான் பேசாம இருந்தேன். பணம், பங்களா, காரு, வயசு கியசு, அது இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்; நடிப்புன்னு வரப்போ, அதை உனக்குச் சொல்லிக் கொடுக்கிற யோக்கியதை, தகுதி எனக்கு இருக்காடா ? கே.பி.காமாட்சியைப் படத்திலே போட்டா, இப்படி நடிக்காதே, அப்படி நடின்னு என்னாலே சொல்ல முடியும்; உன்கிட்டே அப்படிச் சொல்லமுடியுமா ? சொன்னா மரியாதைக் குறைவாயிருக்காதா? அந்த அவமரியாதையை ஒருவேளை பணத்துக்காக நீ வேணும்னா பொறுத்துக்கலாம்; என்னாலே பொறுத்துக்க முடியாது.டா, என்னாலே பொறுத்துக்கவே முடியாது.....அதனாலேதான் உன்னை நான் அந்தப் படத்திலே போடல்லே...இப்போவாச்சும் புரிஞ்சுதா ?ன்னார். அவர் சொன்னதெல்லாம் எனக்கு ஒரே ‘த்ரில்'லாயிருந்தது. ‘புரிஞ்சது'ங்கிறதுக்கு அடையாளமா தலையை மட்டும் ஆட்டி வைச்சேன்...'சரி, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்..இனி நான் சாக ரெடி ...அதுவும் ஒரு நண்பன் கையாலே நான் சந்தோஷமாவே சாவேன் ...ம், எடு துப்பாக்கியை சுடு என்னை! ன்னார். இனிமே சுடறதாயிருந்தா நீங்கதான் என்னைச் சுடனும்னு துப்பாக்கியை எடுத்து அவர்கிட்டே கொடுத்தேன்! ‘அட, புத்திசாலி’ ன்னு அவர் என்னை அப்படியே கட்டித் தழுவிக்கிட்டார்; நானும் அவரைத் தழுவிக்கிட்டேன். அன்னிக்குத்தான் முதல் தடவையா நானும் அழுதேன்; அவரும் அழுதார்.அந்தச் சமயம் பார்த்துப் பொன்னுசாமிப் பிள்ளை சொன்னது வேறே என் மனசை அப்படியே தொட்டு விட்டது...”

“அவர் என்ன சொன்னார் ?" “வில்லன் ஜகதீஷ் வேஷம் அப்படியொன்றும் சாதாரண வேஷமில்லே; ரொம்பக் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய வேஷம். அந்தக் கஷ்டத்தை ஒரு நாளைப் போல உனக்கு மட்டுமே கொடுத்துக்கிட்டிருப்பானேன்னுதான் ரெண்டு ஆளுங்களை நான் மாத்திப் போட்டுப் பார்த்தேன். ஜனங்க விரும்பல்லே, விட்டுட்டேன்னார் அவர். அப்போத்தான் ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சிக்காமலேயே இந்த உலகத்திலே பல தப்புங்க நடக்குதுங்கிற விஷயம் எனக்கு விளங்குச்சி!”

“அந்த மட்டும் எல்லாம் நல்லபடியாக முடிந்ததே, அதைச் சொல்லுங்கள்!”

“கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, இந்த உலகத்தில் நடக்கிறதிலே எது நல்லது, எது கெட்டதுங்கிறதைச் சொல்றது அவ்வளவு சுலபமில்லே...ஒருத்தனுக்கு நல்லதாப் படறது இன்னொருத்தனுக்குக் கெடுதலாப்படறது; ஒருத்தனுக்குக் கெடுதலாப் படறது இன்னெருத்தனுக்கு நல்லதாப் படறது..அதெல்லாம் பெரிய விஷயம்னு பெரியவங்க சொல்வாங்க... அதாலே, அதைப் பெரியவங்கக்கிட்டேயே விட்டுட்டு நம்ம விஷயத்துக்கு வருவோம்...அப்போ நாடக உலகத்திலே நான் ரொம்ப ‘டாப் ரேங்க்'கிலே இருந்ததாலே, ஐம்பதாயிரம் ரூபாயோடு வந்து என்னோடே ஒருத்தர் பார்ட்னராச் சேர்ந்தார்..எதுக்கு, நாடகக் கம்பெனி நடத்தத்தான்!”

“அதற்குள்ளே முப்பதாயிரம் ரூபாயில் படமே எடுக்கிற காலம் மாறிப் போய்விட்டதா ?”

“அது எப்பவோ மாறிப் போச்சு ...அதாலே ஐம்பதாயிரம் ரூபாயிலே நாங்க பொள்ளாச்சியில் ஒரு பெரிய நாடகக் கம்பெனியை உருவாக்கினோம். எங்கெங்கேயோ போய்க் கடைசியிலே ஈரோடுக்கு வந்து சேர்ந்தது..." “அப்போது சிவாஜி கணேசன் எங்கே இருந்தார்?”

எங்க நாடகக் கம்பெனியிலேதான் இருந்தார்.... ‘கொள்ளைக்குப் போனாலும் கூட்டு உதவாது'ங்கிறாங்களே, அது எங்க பார்ட்னர்ஷிப் விஷயத்திலே படு உண்மையாப் போச்சு...”

“இப்போது அப்படிச் சொல்லாதீர்கள்!.. இது கூட்டுறவு யுகம், எல்லாவற்றையுமே கூட்டுறவில் செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...!”

“ஆமாம்; தனியார் கொள்ளை வேறே, கூட்டுறவுக் கொள்ளை வேறேயாக்கும் ?...'பப்ளிக்"கைப் பொறுத்த வரையிலே எல்லாக் கொள்ளையும் ஒரே கொள்ளை தான் ..அதை விடுங்க...அதுக்கு ஏத்தாப்போல அப்போ எங்க நாடகக் கம்பெனி நஷ்டத்திலே நடந்துக்கிட்டிருந்தது... ‘என்னாலேதான் நஷ்டம்’, னார் பார்ட்னர்; இல்லே, உன்னாலேதான் நஷ்டம்'ன்னேன் நான். அவர் சொன்னதை நான் ஒப்புக்கல்லே, நான் சொன்னதை அவர் ஒப்புக்கல்லே... ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்... பிரிஞ்சிட்டோம்னா கம்பெனி அவர் கைக்குப் போயிடல்லே, என் கையிலேதான் இருந்தது. ஈரோடை விட்டுக் கோபிச்செட்டிப்பாளையத்துக்குப் போய் நாடகம் நடத்தினா, வசூல் கொஞ்சம் நல்லாயிருக்கும்னு தோணுச்சி. ஆனா எப்படிப் போறது... ?”

“ஏன், அதற்குள்ளே அடுத்த ஊருக்கு நாடகச் சtrமான்களை எடுத்துக்கொண்டு போகவே கையில் காசில்லாமல் போச்சா ?”

“அது மட்டுமில்லே, கொட்டகைக்காரருக்கு வேறே இருநூறு ரூபா பாக்கியிருந்தது...”

“கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்திலேதானே இருந்தது?...அங்கே போய்க் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே ?”

“சொன்னேன்; அவர் கேட்கல்லே..." “யார் அந்தக் கொட்டகைக்காரர்?”

“இன்னிக்கு என் வணக்கத்துக்குக்குரிய பெரியாராயிருக்கும் ஈ.வெ.ரா. அவர்கள்தான் அந்தக் கொட்டகைக்காரர்!”

“அப்படியா? அவர் என்ன சொன்னார் ?”

“முதலில் ரூபாய் இருநூற்றையும் எண்ணிக் கீழே வை; அப்புறம் மற்றதைப் பற்றிப் பேசுன்னார்...”

“நீங்கள் என்ன சொன்னீர்கள் ?”

“நான் சாதாரண நடிகன், நீங்கள் சமூகத்தையே சீர்திருத்த வந்திருக்கும் தலைவர்னு ஆரம்பிச்சேன்... அவ்வளவுதான்: ‘அது வேறே கதை, இது வேறே கதை. கொண்டா பூட்டை!ன்னார் பக்கத்தில இருந்த ஆளிடம். ‘அடியேன் சாமி!ன்னு அவன் ஒரு பூட்டுக்கு ரெண்டு பூட்டாக் கொண்டு வந்து கொடுத்தான். அத்தனை சாமான்களையும் உள்ளே எடுத்துப் போட்டுப் பூட்டி, “என்னிக்கு இரு நூறு ரூபாயைக் கொண்டு வந்து கொடுக்கிறியோ, அன்னிக்கு உன் ‘சாமான்களை நீ எடுத்துக்கிட்டுப் போ'ன்னு சொல்லிட்டார். அதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியாம, நான் வெறுங்கையோடே கோபிச்செட்டிப்பாளையத்தை நோக்கி நடந்தேன்."