நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/18. விதவையின் கண்ணீர்
18. விதவையின் கண்ணீர்
“எதை ஒப்புக்கலேன்னாலும் ஒண்ணை நான் அவசியம் ஒப்புக்கனும் - உள்ளே ஒண்ணு வைச்சிக்கிட்டு வெளியே ஒண்ணு பேச எனக்குத் தெரியாது. அந்த வழக்கத்தையொட்டியே சமீபத்தில் நான் சைதாப்பேட்டையிலே பேசியப்போ சொன்னேன்- ‘யாருக்குப் பின்னாலும் போய் எனக்கு வழக்கமில்லே, எல்லாருக்கும் முன்னாலே போய்தான் வழக்கம்'னு. அப்படியே நான் வாழ்ந்தவன், வாழ்பவன், வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவன். அதை மாத்திக்க அன்னிக்கும் என்னாலே முடியல்லே, இன்னிக்கும் என்னாலே முடியல்லே. அதுக்கு நான் என்ன செய்வேன்? அப்படிச் சொல்றது பலருடைய மனசை உறுத்தவும் சிலருடைய மனசை புண்படுத்தவும் கூடுங்கிறது எனக்குத் தெரியத்தான் தெரிகிறது. இருந்தாலும் சமயத்துக்குத் தகுந்தாப் போல ஆடினா, குழந்தைங்க தள்ளி விடறதுக்குத் தகுந்தாப்போல ஆடற தஞ்சாவூர்ப் பொம்மைக்கும் எனக்கும் என்ன வித்தியாசமிருக்கும் ? நீங்களே சொல்லுங்க, அது ஒரு பொழைப்பா? அந்தப் பொழைப்பு எனக்கு எப்பவுமே பிடிக்கிறதில்லே...”
“பிடித்திருந்தால்தான் சிறையிலிருந்து வந்த சீக்கிரத்தில் நீங்கள் என்னவெல்லாமோ ஆகியிருப்பீர்களே ?" “இப்போ மட்டும் என்ன, நான் கெட்டாப் போயிட்டேன் ? என்னிக்கும் இருக்கிறபடிதான் இன்னிக்கும் இருக்கேன்...
“சரி, கோவையிலிருந்து எங்கே வந்தீர்கள்?”
“நாகப்பட்டினத்துக்கு வந்தேன். அங்கே தண்டபாணி செட்டியார்னு ஒரு தனவந்தர் இருந்தார். அவருடைய உதவியைக் கொண்டு ‘விமலா, அல்லது விதவையின் கண்ணீர்’ என்று ஒரு சீர்திருத்த நாடகத்தைத் தயாரித்தேன். அதுக்குள்ளே ஊர் முழுக்க அதே பேச்சாப் போச்சு! இது என்ன அநியாயம்! இந்த ராதா விமலா அல்லது விதவையின் கண்ணீர்னு நாடகம் நடத்தறதாவது, அதை இந்த ஊர் பார்த்துக்கிட்டிருக்கிறதாவது ? அவன் எல்லாத்துக்கும் துணிஞ்சவன் ஆச்சே! அந்த நாடகத்திலே அவன் தாலியறுத்தவளுக்குத் தாலிகூடக் கட்டி வைப்பானே ? அதை நடத்த விடாம எப்படியாவது தடுக்கணும்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ நாட்டிலே பெரியாருக்கும் அவ்வளவு செல்வாக்கு இல்லே, அவருடைய திராவிடர் கழகத்துக்கும் அவ்வளவு செல்வாக்கு இல்லே. அதாலேச. தடை,கிடை'ன்னு சொன்னதும் அவங்களும் பயந்தாங்க. அவங்களிலே சில பேர் என்கிட்டே வந்து, ‘என்னத்துக்கு வீண் வம்புக்குப் போங்க ? இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தே இந்த ‘மாதிரி நாடகங்களை நடத்தலாமே'ன்னு சொன்னாங்க. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் நான் எப்பவுமே காந்தியாரின் கட்சி. அவன் என்ன சொன்னார் ? ‘வீரன் ஒரே தடவை சாகிறான்; கோழை நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக்கிட்டிருக்கான்'னு சொல்லலையா ?, அதாலே முன்னால் வைத்த காலை நான் பின்னால் வைக்க விரும்பலே, எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் நாடகத்தை எப்படியும் அரங்கேற்றியே தீர்றது'ன்னு ஒரு தேதியைக் குறிப்பிட்டு விளம்பரம் சேஞ்சேன்..." “விளம்பரத்துக்குத் துண்டுப் பிரசுரங்கள் மட்டும் அச்சிட்டுக் கொடுத்திருக்க மாட்டீர்கள்; போஸ்டர்களும் போட்டுச் சுவர்களில் ஒட்டியிருப்பீர்கள், இல்லையா ?”
“பின்னே, நாடகம் பழைய நாடகமாயிருந்தாலும் பரவாயில்லே, புதிய நாடகமாச்சே ? நிறையப் போஸ்டர்கள் போட்டு ஒட்டினேன்...”
“அந்தப் போஸ்டர்களில் யாரும் சாணி அடிக்கவில்லையா? வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொண்டு வந்து துப்பவில்லையா ?”
“அந்த மாதிரி ரசிகருங்கெல்லாம் அந்தக் காலத்திலே கிடையாது; அவங்களை ஊக்குவிக்கிற நடிகருங்களும் அப்போ இல்லே...”
“நல்ல வேளை, அப்புறம்?”
“விளம்பரத்தைக் கண்டதும் அவ்வளவு திமிரா அந்தப் பயலுக்கு ?’ ன்னு ஊர்ப் பெரிய மனுஷருங்க சில பேரு கூடினாங்க. ‘இந்த நாடகத்தை எப்படியாவது தடை செய்தே தீரனும் கிற முடிவுக்கு வந்தாங்க. என்னை மிரட்டி, கிரட்டிப் பணிய வைக்க முடியாதுன்னும் அவங்களுக்குத் தெரியும். அதாலே, இன்ன தேதியிலே, இந்த இடத்திலே எம்.ஆர். ராதா நடத்தவிருக்கும் விமலா அல்லது விதவையின் கண்ணிர்ங்கிற நாடகம் சாஸ்திரத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் விரோதமான நாடகம். அதை அவர் நடத்தினா சமூகத்தின் அமைதி குலையும்; சனாதனிகனின் மனம் புண்படும். அதாலே கோர்ட்டார் தயவு செய்து அந்த நாடகத்தைத் தடை செய்யணும்னு நாகப்பட்டினம் கோர்ட்டிலே ‘பெட்டிஷன்’ கொடுத்தாங்க. அப்போ அங்கே ஜட்ஜாயிருந்தவர் கணேசய்யர். அய்யர்னா அவங்களிலும் சிலர் ஆசாரம் கீசாரம் ஒண்ணும் இல்லாம இருப்பாங்க, அந்த ரகத்தைச் சேர்ந்த அய்யர் இல்லே அவர். ஒரு பிராமணனுக்கு எத்தனை அனுஷ்டானங்கள் உண்டோ, அத்தனையையும் ஒண்ணு விடாமச் சேஞ்சி வந்தவர். பொழுது விடிஞ்சா வீட்டுக்குப் பால் கறக்க வந்து நிற்கும் பசுவுக்குத் தினம் ஒரு பிடி புல்லோ, ஒரு அகத்திக் கீரை கட்டோ தின்னக் கொடுக்காமல் இருக்க மாட்டார். நெற்றியிலே விபூதி, சந்தனம், குங்குமம் இல்லாத நாளைப் பார்க்கவே முடியாது. வேலை நேரம் போக, பாக்கி நேரமெல்லாம் அவருடைய வாய் ஏதோ ஒரு தோத்திரத்தைச் சதா முணுமுணுத்துக்கிட்டே இருக்கும். வழியிலே யாராவது ரெண்டு பேர் ஒருத்தனை ஒருத்தன் திட்டிக்கிட்டு வம்புக்கு நின்னா, அதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்; அந்த இடத்தில ஒரு நிமிஷம்கூட நிற்கவும் மாட்டார். ‘போங்கடா, போங்கடா, ன்னு அவனுங்களை விரட்டிக்கிட்டே ‘சிவசிவா'ன்னு காதைப் பொத்திக்கிட்டு ‘மடமட'ன்னு வீட்டுக்குப் போயிடுவார். அப்படிப்பட்டவர் அவங்க கொடுத்த ‘பெட்டிஷ’ னை வாங்கி வைச்சிக்கிட்டு என்ன செய்தார்னா, ‘அந்த நாடகத்தை நானே பார்க்கணும்னார். அந்த அனாசாரத்தை நீங்க எதுக்குப் பார்க்கணும் ? விமலா அல்லது விதவையின் கண்ணீர்னு சொல்றப் போவே அதிலே என்ன இருக்குங்கிறதுதான் எல்லாருக்கும் தெரியுதே ? அதைப் பார்க்காமலேயே நீங்க தடை விதிக்க வேண்டியதுதானே ? ன்னு ‘பெட்டிஷன் கொடுத்தவங்க வக்கீல் வைச்சி வாதாடிப் பார்த்தாங்க. அவர் கேட்கல்லே, ‘தருமத்தின்படி மட்டுமல்ல. சட்டத்தின்படியும் நடக்க நான் கடமைப்பட்டவன். நாடகத்தைப் பார்க்காமல் நான் எந்த முடிவுக்கும் வரமாட்டேன்’னு அவர் கண்டிப்பாச் சொல்லிவிட்டு, என் நாடகத்தைப் பார்க்க வந்தார்...”
“எதிரிகள் அயர்ந்து போயிருப்பார்களே ?”
“அதுதான் இல்லே, அதுக்குப் பதிலா ‘இதோடு ராதா குளோஸ்’னு அவங்க பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா, சனாதனியான ஜட்ஜ் கணேசய்யருக்கு அந்த நாடகம் கொஞ்சங்கூடப் பிடிக்காது, அதாலே அவர் உடனே தடை போட்டுடுவார்’னு அவங்க நினைச்சாங்க. நினைச்சபடி நடக்கல்லே; ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இருந்து நாடகத்தைப் பார்த்த கணேசய்யர் எழுந்து’ மேடைக்கு வந்தார். மொதல்லே என் கைகள் ரெண்டையும் பிடிச்சிக் ‘குலுக்குக் குலுக்கு'ன்னு குலுக்கினார். ‘சாட்சாத் மார்க்கண்டேயன் மாதிரி என்னிக்கும் நீங்க சிரஞ்சீவியா இருக்கணும்'னார். ‘இந்த மாதிரி நாடகம் இங்கே நடந்தா மட்டும் போதாது, இந்தியா முழுவதும் நடக்கணும்னார். ‘கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கணவனை இழந்த ஒரு பெண் அவனுக்காகத் தான் சாகும் வரை கைம் பெண்ணாக இருக்கவேண்டும் என்று சாஸ்திரத்தின் பேராலோ, சம்பிரதாயத்தின் பேராலோ சொல்வது, வற்புறுத்துவது கணவன் இறந்ததும் அவனுடன் அவன் மனைவியும் உயிருடன் உடன் கட்டை ஏறிச் சாக வேண்டும் என்று ஒரு காலத்தில் இந்த நாட்டில் இருந்து வந்த கொடுமையை விட மிகக் கொடுமையானது. ஏனென்றால், இறந்த கணவனுடன் உடனே உடன்கட்டை ஏறிவிடும் ஒரு பெண்ணின் சோகக் கதை அத்துடன் முடிந்துவிடுகிறது; கைம்பெண்ணாக இருப்பளின் கதை அப்படியலல, ‘பூ வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக் கூடாது, சுப காரியங்கள் எதிலும் கலந்துகொள்ளக் கூடாது-ஏன், அவளுடைய தலைமுடியைக் கூட விட்டு வைக்கக் கூடாது என்பது போன்ற பல கொடுமைகளுக்கு அவள் சாகும் வரை உள்ளாக நேரும் தொடர் கதையாகி விடுகிறது. ஆண்டவன் ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி-அறிவு ஏற்காத இந்த விஷயத்தை வைத்து இப்படி ஒரு நாடகத்தைத் துணிந்து தயாரித்து, துணிந்து மேடை யேற்றிய நண்பர் ராதாவை நான் வாயார, மனமார வாழ்த்துகிறேன். அவரும் அவருடைய இந்த நாடகமும் எல்லா வகையிலும் வெற்றி பெற என் ஆசிகள்'னு ரொம்ப உணர்ச்சியோடு, கண்ணில் அப்பப்போ அவரையும் மீறிக் கசிந்த நீரை அடிக்கொருதரம் கைக்குட்டையாலே தொடைச்சிக்கிட்டே அவர் பேசி முடிச்சார். அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்... ?”
“கேட்க வேண்டுமா ? சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்ததுபோல் இருந்திருக்கும்!” .
“பெட்டிஷன் போட்டவர்களுக்கு ?...”
“எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல் இருந்திருக்கும்!”
“அப்புறம் ‘தடை என்ன ஆச்சு?'ன்னு கேட்கிறீங்களா? நல்ல வேளையாக அது கோர்ட்டுக்கு மேலே கோர்ட்டுன்னு போய்க்கிட்டிருக்கல்லே; நானும் என் நாடகமும்தான் ஊருக்கு ஊர் போய்க் கிட்டிருந்தோம். அப்பத்தான் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார்’ இவர் எங்கள் கழக நடிகர், இவருடைய நாடகம் எங்கள் கழக நாடகம்'னு....”
“பெரியார்.. ?”
“அவரும் ‘திராவிடர் கழக மாநாடு நூறு நடத்தறதும் ஒண்ணு, ராதா நாடகம் ஒண்னு நடத்தறதும் ஒண்ணு'ன்னு அண்ணா சொன்னதை அப்பத்தான் அப்படியே ஆமோதிச்சார். இதிலே எனக்கு ஒரு தனி சந்தோஷம் ஏன்னா, ராஜாஜியும் சரி, பெரியாரும் சரி-பிறத்தியாரை அவ்வளவு சுலபமாப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டாங்க. அதிலும் அவ்வளவு சிக்கனம் அவங்க ரெண்டு பேரும்!"