நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/19. கண்கண்ட தெய்வம்

19. கண்கண்ட தெய்வம்

“யார் யாருக்கோ, யார் யரோ ‘கண் கண்ட தெய்வம்’னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரையிலே எனக்குக் கண் கண்ட தெய்வம்’ கணேசய்யர்தான். அவரோ செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ்; நானோ சாதாரண நடிகன். எனக்கும் அவருக்கும் அப்படியொரு அன்புப் பிணைப்பு எப்படி எற்பட்டிருக்க முடியும்னு இன்னும்கூட நான் யோசிச்சுப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்; புரியல்லே, ஜட்ஜுன்னா சாதாரண ஜட்ஜா ? இல்லே; மற்ற ஜட்ஜுகளுக்கு ‘சிம்ம சொப்பன’ மாயிருந்த ஜட்ஜ். அந்த நாளிலே தீர்ப்பு எழுதறதிலே அவர்தான் மன்னன்னு எல்லா வக்கீல்களும் சொல்வாங்க. அவர் விசாரிச்சி ஒரு கொலையாளிக்குத் துக்குத் தண்டனைன்னு தீர்ப்பு எழுதிட்டா, அதை மாற்ற யாராலும் எந்தக் கோர்ட்டாலும் முடியாதாம்.”

“அந்த விஷயத்திலே அவர் பூலோகத்துப் பிரம்ம தேவனாக இருந்திருப்பார் போலிருக்கிறது!”

“ஆமாம், அந்தப் பிரம்மதேவன் நம்ம தலையிலே எழுதியதையும் யாராலும் மாற்றி எழுத முடியாதாமே, அதே மாதிரி இந்தப் பிரம்மதேவன் எழுதிய தீர்ப்பையும் யாராலும் மாற்றி எழுத முடியாதாம். அது மட்டுமா ? நான் நாத்திகன்; அவர் ஆத்திகர். அதுவும் எப்பேர்ப்பட்ட ஆத்திகர்னு நினைக்கிறீங்க? பொல்லாத ஆத்திகர். அந்தக் காலத்து ‘வள்ளித் திருமணம்’ நாடகத்திலே ஒரு சீன் வரும் தேவானையோடு வள்ளியையும் முருகனுக்குச் சேர்த்து வைக்க நாரதர் வருவார். அப்போ நாரதர் மாமா வந்துட்டார், மாமா வேலை செய்ய ன்னு பபூன் வேடிக்கைக்காகச் சொல்வான் எல்லாரும் சிரிப்பாங்க. ஆனா கணேசய்யர் சிரிக்க மாட்டார்; கோவிச்சுக்குவார். சட்டுன்னு சீட்டை விட்டு எழுந்து காவலுக்கு வந்திருக்கும் போலீசாரைக் கூப்பிட்டு, ‘நாரதரையாவது, ‘மாமா'ன்னு இந்த பபூன் பழிக்கிறதாவது? உடனே இவனை அரெஸ்ட் செய்யுங்கள்'ன்னு அங்கேயே ஆர்டர் போட்டுவிடுவார். அவர் எங்கே, நான் எங்கே..... ?

“இத்தனை நன்றியுணர்ச்சியோடு பேசுகிறீர்களே, அப்படி அவர் உங்களுக்கு என்னதான் செய்தார் ? அதைச் சொல்லுங்களேன் ?”

“ஒண்ணா ரெண்டா, எத்தனையோ சேஞ்சார். ஒரு சமயம் ஐந்நூறு ரூபாய் பாக்கிக்காக ஒரு புண்ணியவான் என்னை அரெஸ்ட் செய்ய போலீஸ் வாரண்டோடு, வந்துட்டான். அப்போ என் கையிலே அஞ்சி ரூபாகூடக் கிடையாது. ஐந்நூறு ரூபாய்க்கு நான் எங்கே போவேன்? ஒருத்தனா ? அவனுக்குப் பயந்து எங்கேயாவது ஓடி ஒளிய? ஒரு நாடகக் கம்பெனியே ஓடி ஒளியணும்னா அது முடிகிற காரியமா? திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் சமயத்துக்குக் கடவுளைக்கூடத் துணைக்கு அழைக்கக் கூடாதேன்னு திருதிருன்னு விழிச்சிக்கிட்டிருந்தேன். அப்போ அய்யர் கார் அந்தப் பக்கமா வந்ததுன்னு யாரோ சொன்னாங்க...”

“எந்த அய்யர் கார் ?”

“ஜட்ஜ் கணேசய்யர் கார்தான். அந்தக் கார் வந்து யார்கிட்டே என்ன சொல்லிச்சோ, என்ன கொடுத்ததோ, அது இன்னிக்கு வரையிலே எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு மட்டும் தெரியும் - ஐந்நூறு ரூபாய் கடன்காரன் அதுக்கப்புறம் என்னைக் கண்ட போதெல்லாம் சலாம்தான் போட்டுக்கிட்டிருந்தானே தவிர, ஒரு சல்லிக்காசுகூடச் கேட்கல்லே!”

“அப்புறம் ?" “ஒரு காதல் விவகாரம். நான் காதலிச்ச ஒரு பெண்னைப் பார்த்து ஒரு சக நடிகர் சிரிச்சார். அது எனக்குப் பிடிக்கல்லே, அதுக்காக வந்த ஆத்திரத்தையும் அப்போதிருந்த வயசு வேகத்திலே என்னாலே அடக்க முடியல்லே. கையிலே எதுக்கோ வாங்கி வைச்சிருதத திராவகத்தை அவர் மேலே கொட்டிட்டேன். இப்போ நடந்த எம்.ஜி.ஆர். கேசிலேகூட அந்த நடிகரையும் ஒரு சாட்சியாச் சேர்ந்திருந்தாங்க. அவர் எனக்கு விரோதமாச் சாட்சி சொல்லமாட்டேன்னு சொல்லிட்டார்...”

“ஏன்?”

“இப்போ அவரும் நானும் நண்பர்கள்.”

“அது எப்படி நண்பர்களானீர்கள் ?”

“அதுவும் இதுவரையிலே புரியாத ஒரு புதிராய்த்தான் இருக்கு.”

“என்னிக்கும் விரோதின்னு எனக்கு இது வரையிலே யாரும் இருந்தது கிடையாது; அதே மாதிரி என்னிக்கும் நண்பன்'ன்னும் எனக்கு இது வரையிலே யாரும் இருந்தது கிடையாது. சுருக்கமாச் சொல்றேன். என்னதான் தலைகீழ நின்னாலும் மனுஷன் தெய்வமாக முடியுமா ? மனுஷன் மனுஷனாத்தானே இருக்க முடியும்? அது மட்டுமா ? ஒரு மனுஷன் சேஞ்ச தப்புக்கு அவன் மனசு அவனுக்குக் கொடுக்கிற தண்டனைக்கு மேலே வேறே யாரும், எந்தக் கோர்ட்டும் கொடுத்துட முடியாதுங்கிறது என் அனுபவத்திலே நான் கண்ட உண்மை.”

“அது சரி, இந்த விஷயத்தில் கணேசய்யர் உங்களுக்கு எப்படி உதவினார் ?”

“அதுவும் எனக்குத் தெரியாது. அந்தக் கேஸ் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போச்சு. அந்தப் பக்கமா கணேசய்யர்கூட வரல்லே, அவர் காரிலே வேறே யாரோ வந்து, யாரையோ பார்த்து ஏதோ சொன்னாங்களாம்; நான் ரிலீஸாயிட்டேன்" “ஆச்சரியமாயிருக்கிறதே?”

“அதைவிட ஆச்சரியம் இன்னொண்ணு இருக்கு. அதையும் சொல்லிடறேன். அந்த நாளிலே திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலம் எங்கே நடந்தாலும் நான்தான் ஊர்வலத்துக்கு முன்னாலே குதிரை மேலே உட்கார்ந்து கொடி பிடிச்சிக்கிட்டுப் போவேன். அப்போ மாநாடாயிருந்தாலும் சரி, ஊர்வலமாயிருந்தாலும் சரி, அல்லது நாடகமாகவே இருந்தாலும் சரி, எதுவுமே கலகம் கலாட்டா இல்லாம நடக்காது. அதுக்கெல்லாம் காரணம் யாராயிருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க ? காங்கிரஸ் காரருங்க தான்! ஏன்னா, இன்னிக்கு எப்படியிருந்தாலும் அன்னிக்கு அவங்கதானே திராவிடர் கழகத்துக்கு எதிர்க்கட்சி ? கட்சி - எதிர்க்கட்சின்னு இருந்தா கலகம், கலாட்டா இல்லாம எப்படி இருக்கும்? கலகம், கலாட்டா இல்லேன்னா கட்சி எப்படி வளரும், தலைவருங்கதான் எப்படி வளருவாங்க ? பாவம், தொண்டர்கள் அவங்கதான் எந்தத் தலைவர் எப்போப்போ என்னென்ன சொல்றாரோ, அதை அப்படியே நம்பி, ஏதோ ஒரு வெறியிலே அவங்க சொல்றபடியே சேஞ்சிட்டு, ஒண்ணு சாவாங்க. இல்லேன்னா, குடும்பத்தை நடுத்தெருவிலே விட்டுட்டு ஜெயிலுக்குப் போவாங்க. அந்த மாதிரி வெறி பிடிச்ச காங்கிரஸ் தொண்டர் ஒருத்தர் அன்னிக்கு என் குதிரைக்குப் பின்னாலே வந்துகிட்டிருந்தார். வந்தவர் சும்மாவும் வரல்லே, ஒரு குச்சியை எடுத்து அந்தக் குதிரைக்குப் பின்னாலே குத்தத் தகாத இடத்திலே குத்திக்கிட்டே வந்தார். அப்படிக் குத்தினா, அது மிரண்டு முன்னங்கால்கள் ரெண்டையும் தூக்கும், நான் குப்புற விழுவேன், அதுவே எனக்குக் குழி பறிச்சிடுங்கிறது அவர் எண்ணம். பைத்தியக்காரர், இந்தக் குதிரை ஒட்டற வித்தையிலே நான் அவரைவிட கெட்டிக்காரன்கிறது அவருக்குத் தெரியாது. கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கிற விதத்திலே பிடிச்சா, குதிரை முன்னங் கால்களைத் தூக்கறதுக்குப் பதிலா பின்னங்காலைத் தூக்கி உதைக்கும். அந்த வித்தையை எடுத்ததும் செய்துட வேணாம்னு, ‘மரியாதையா எட்டிப் போய்யா! இல்லேன்னா குதிரை உதைக்கும். பல்லெல்லாம் ஒண்ணு விடாமப் போனாலும் போகும்’னு அவரை ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா எச்சரிச்சிப் பார்த்தேன்....”

“கேட்டாரா ?”

“எங்கே கேட்டார் ? அவர் பாட்டுக்கு அவர் கற்ற வித்தையைக் காட்டிக்கிட்டே வந்தார். என்னைக் கவிழ்க்க எதுக்கும் ஒரு எல்லை உண்டு இல்லே, என் பொறுமை அந்த எல்லையைத் தாண்டிடிச்சு. நான் கற்ற வித்தையை நான் காட்டினேன் - அவ்வளவுதான், குதிரை எட்டி ஒரே உதைதான் உதைத்தது. அந்த உதை படாத இடத்திலே பட்டு ஆளே அவுட் டாயிட்டார்!”

“அவுட்டாயிட்டார் என்றால்......?

“செத்தே போயிட்டாருங்க! “

“அட, பாவமே!”

“எனக்கும் பாவமாத்தான் இருந்தது. அந்த மாதிரி ஒருவிபத்து ஒரு தலைவருக்கு நேர்ந்திருந்தாக் கூட அதுக்காக நான் அவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஏன்னா, அவங்க விஷயம் வேறே; அவங்களுக்கு எது நடந்தாலும் அதாலே அவங்க குடும்பம் நடுத்தெருவிலே நின்னுடாது. தொண்டனுங்க விஷயம் அப்படியில்லே, கொடி பிடிக்கிறதையும், ‘வாழ்க, ஒழிக'ன்னு கத்தறதையும் தவிர வேறே என்னத்தைக் கண்டாங்க அவங்க ?”

“ஏன் காணவில்லை ? போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு, ஜெயில், தூக்கு..." “ஆமாமாம், அதெலலாம் வேறே இருக்கவே இருக்கு. அந்த அப்பாவித் தொண்டராலே நீங்க கடைசியாச் சொன்ன அந்தத் தூக்குத் தண்டனையே அப்போ எனக்குக் கிடைச்சிடும்போல இருந்தது...”

“ஏன், அது தற்செயலாக நேர்ந்த விபத்துதானே ?”

“விபத்துத்தான்! எதிர்க் கட்சிக்காரன் அவ்வளவு சுலபமா அதை விட்டுடுவானா ? அதை வைத்து என்னைக் கொலைக் குற்றவாளியாக்கப் பார்த்தான்...

“அப்போதும் கணேசய்யர் கார்தான் அந்தப் பக்கம் வந்து...”

“ஆமாம், அதுதான் வந்தது; எனக்கு விடுதலையும் வாங்கித் தந்தது.”

“பிறகு.... ?”

“பிறகு என்ன ? பாவிகளை மன்னித்து ரட்சிக்க இயேசுபிரான் இந்த உலகத்தில் பிறந்ததுபோல அவர் என்னை மன்னித்து ரட்சிக்கப் பிறந்திருப்பதாகவே நான் நினைச்சேன்; வழிபட்டேன். அந்தச் சமயத்திலேதான் ரெண்டாவது உலக மகா யுத்தம் வந்தது. எங்கே பார்த்தாலும் விறகுப் பஞ்சம். அந்தச் சமயம் பார்த்து ஒரு சாயபுகாண்ட்ராக்ட்டர் எங்களைக் கும்பகோணத்துக்குக் கூப்பிட்டார்; போனோம். அங்கே நாங்கள் தங்குவதற்காக அவர் பார்த்து வைத்திருந்த வீடு ஒரு பிராமணர் வீடு. அவர் எங்களைப் பார்த்ததும் ‘விரட்டு, விரட்டு'ன்னு விரட்ட ஆரம்பிச்சார். ‘ராட்சசப் பசங்க'ன்னு கத்தினார். அன்னிக்கு அங்கே ஒரு ‘தேவாசுர யுத்த'மே நடந்தது. நாங்க எதுக்கும் சளைக்கல்லே, அவர் வீட்டை விட்டும் போகல்லே. அதோடு நிற்காம அந்த வீட்டு உத்தரங்களையே அங்கிருந்து ஒண்னும் இங்கிருந்து ஒண்னுமா எடுத்து, உடைச்சி விறகாக்கி அடுப்பெரிய விட்டோம்...”

“அநியாயமாகவல்லவா இருக்கிறது. இது ?”

‘இல்லேன்னா. எங்க வயிறு எரியறேங்கிறதே!”

“அதற்காக... ?

“நாங்க செய்ததும் தப்புத்தான், என்ன செய்யறது? அப்போ காலம் அப்படியிருந்தது. “

“சரி, அப்புறம் ?”

“எதிர்பாராத விதமா கணேசய்யர்கிட்டேயிருந்து ஒரு ஆள் வந்து, ‘அய்யர் உங்களை உடனே அழைச்சிக்கிட்டு வரச் சொன்னாருன்னு சொன்னான். அவ்வளவுதான்; அந்தக் ‘கண் கண்ட தெய்வ'த்தைக் காண அப்பவே நான் அவனோடே புறப்பட்டுப் போனேன்."