நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/20. திருப்பதியில் திருடினேன்!

20. திருப்பதியில் திருடினேன்!

என்னைக் கண்டதும், ‘வாடா, வா உனக்கு ஒரு நல்ல சேதி’ என்றார் கணேசய்யர்.

‘கெட்ட சேதியாயிருந்தாலும் என்னைப் பொறுத்த வரையிலே நல்ல சேதியா ஆக்கிடுவீங்களே, நீங்க!’ என்றேன் நான்.

‘அப்படி நீ தப்பா நினைச்சுடாதே, அது என்னாலே முடியாத காரியண்டா சட்டமே ஒரு மனிதனின் இயற்கையான உணர்ச்சிகளுக்கு ஓரளவு மதிப்பளித்து, அவன் குற்றத்தை மன்னிக்கும் வகையில்தான் செய்யப்பட்டிருக்கிறது. அந்த இயற்கையையும் மீறி அவன் குற்றம் செய்யும் போதுதான் அது அவனைத் தண்டிக்கிறது. அதையேதான் உன் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லார் விஷயத்திலும் நான் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செய்து வருகிறேன். படித்தவர்களுக்கு இந்த முறையில் என்னதான் செய்தாலும் அது பெரிதாகத் தோன்றுவதில்லை; அப்படி என்ன, பிரமாதமாச் செய்து கிழிச்சிட்டான் ‘னு ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். படிக்காதவன் நீ; மனிதாபிமானத்தோடு நான் செய்த சில காரியங்கள் உனக்குப் பெரிதாகப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் சந்தோஷம். இப்போ உன்னை அழைத்த விஷயம் என்னன்னா, இரண்டாவது உலக மகாயுத்தந்தான் மூண்டுவிட்டதே, தஞ்சை மாவட்டம் முழுவதும் போர்ப் பிரசாரம் செய்யும் பொறுப்பைப் பிரிட்டிஷார் என்னிடம் ஒப்படைச்சிருக்காங்க... அந்த வகையிலே நீ எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா ?”

“முடியுமான்னு இன்னொரு தடவை கேட்டுடாதீங்க, என் மனசு தாங்காது. என்னாலே செய்ய முடியும்னு நீங்க நினைக்கிற உதவியை உதவி'ன்னு சொல்றதுகூட எனக்குப் பிடிக்கல்லே, ‘கட்டளை'ன்னு சொல்லுங்க. அந்தக் கட்டளையை வாயாலோ கையாலோ கூட எனக்கு நீங்க இடவேணாம், காலாலே இட்டாலே போதும், தலையாலே செய்யக் காத்திருக்கேன்.’

‘பிரிட்டிஷார் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் எனக்கு இடுவது கட்டளை. நானோ உத்தியோக வர்க்கத்தைச் சேர்ந்தவன்; உன்னிடம் நான் எதிர்ப்பார்ப்பது உதவி. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். உதவியென்றால் வேறு எந்த உதவியும் இல்லை; நாடக உதவிதான்... ஆமாம், உங்கள் கட்சி வெள்ளைக்காரன் கட்சிதானே ?

‘வெறும் வெள்ளைக்காரன் கட்சிகூட இல்லே, வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கிற கட்சின்னு காங்கிரஸ்காரங்க சொல்லிக்கிட்டிருக்காங்களே, நீங்க. கேட்கலையா ?

‘அவர்கள் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும்: தலைவர் ஈ.வே.ரா.வும் தளபதி அண்ணாதுரையும் நீ யுத்தப் பிரசார நாடகம் நடத்துவதற்காக உன்னை எதிர்த்து அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்களே? ஏன் அப்படிக் கேட்கிறேன்னா, என்னாலே உன் பிழைப்பு கெட்டு விடக் கூடாதேன்னுதான்....!”

‘அதெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாங்க, இப்போ அவங்களே அந்தப் பிரசாரம்தான் செஞ்சிக்கிட்டிருக்காங்க!’

‘நீ ஒரு பிரசார நாடகத்துக்கு என்ன எதிர் பார்க்கிறே?

‘உங்க இஷ்டங்க, என்ன கொடுத்தாலும் வாங்கிக்கிறேனுங்க.' ‘நீ நடத்தப்போற பிரசார நாடகம் எனக்காக இல்லே; பிரிட்டிஷ்காரருக்காக. என்ன வேணும்னு சொல்லு: நான் அவர்களுக்கு எழுதணும்...’

“நூறோ, அம்பதோ கொடுங்களேன்!’

‘அடப்பாவி நாடகத்திலே என்னவெல்லாமோ பேசிச் சக்கைப்போடு போடறே, சொந்த விஷயத்திலே இத்தனை அசடாயிருக்கியே? கொஞ்சம் சமர்த்தா இருக்கப் பாருடா! சம்சாரி நீ; கொஞ்சம் பணம் பண்ணி வைத்துக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் உனக்கு. நான் ஆயிரம், ஆயிரத்தைந்நூறு ஆகுமாம்னு எழுதி வைக்கிறேன். அதாவது, இரண்டு மணி நேர நாடகம்னா ரூபா ஆயிரம்; மூணு மணி நேரம் தொடர்ந்து நடத்தணும்னா ரூபா ஆயிரத்து ஐந்நூறு. அதுக்குக் குறைஞ்சா கட்டுப்படியாகாதாம். அதுகூட துரைமார்கள் சண்டையிலே மாட்டிக் கொண்டிருக்கிறதாலே இந்த சலுகையாம்; இல்லேன்னா இதுக்கு மேலேயும் ஆகுமாம்னு மேலும் ஒரு போடு போட்டு வைக்கிறேன். அவர்களில் யாராவது வந்து உன்னைத் தனியாச் சந்தித்துக் கேட்டா நீயும் அப்படியே சொல்லு, என்ன ?

‘அய்யர் இப்படிக் கேட்டா நான் என்னத்தைச் சொல்வேன்? ‘தெய்வம் வெளியே இல்லே, நமக்குள்ளேதான் இருக்கு'ன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கேன். இன்னிக்குத்தான் அந்தத் தெய்வத்தை நான் நேருக்கு நேராப் பார்க்கிறேன்’னு சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

‘சரி, போய் வா! இனிமே நீ எங்கெங்கே, எப்போப்போ நாடகம் போடணும்னு கடிதங்களும் செக்குகளும் தொடர்ந்து உனக்கு வந்துகிட்டிருக்கும். அந்தக் கடிதத்திலே உள்ளபடி நீ நாடகம் போடணும். சமயத்திலே நானும் எங்கேயாவது வந்து பார்ப்பேன்; அங்கங்கே உள்ள அதிகாரிகளும் வந்து பார்ப்பார்கள். போய் வர்றியா?

‘சரிங்க'ன்னு தலையை ஆட்டிவிட்டுத் திரும்பினேன். ‘நில்லுடா, வரேன்’னு அய்யர் உள்ளே போனார். கையிலே பெரிய பெரிய லட்டு வடையோடு திரும்பி வந்து, ‘உனக்கு ஏழுமலையானைப் பிடிக்கலேன்னாலும் அவனுடைய பிரசாதங்களைப் பிடிக்குமோ இல்லையோ?'ன்னார். ‘உங்க கையாலே எனக்கு விஷத்தைக் கொடுத்தாலும் பிடிக்கும்’ னேன் நான். ‘பொழைச்சிக்குவேடா’ ன்னு சிரிச்சுக்கிட்டே பிரசாதத்தைக் கொடுத்தார்; வாங்கிக்கிட்டுத் திரும்பினேன். அப்போ நான் திருப்பதியிலே திருடின சமாசாரம் ஒண்ணு நினைவுக்கு வந்தது. அதையும் அய்யர்கிட்டே சொல்லி விட்டுப் போயிடலாம்னு திரும்பினேன்...”

“என்னதான் நல்லவராயிருந்தாலும் ஒரு ஜட்ஜ்கிட்டே எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாதுங்கிறது, இல்லையா?”

“எனக்கு அப்போ இருந்த சந்தோஷம் அப்படி! இப்போ நீங்க சொன்ன நியாயம் எனக்கும் அப்போ திடீர்னு தோணவே, ‘இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்னு பேசாம வந்துட்டேன்!” என்று ராதா சற்று நிறுத்தி, “எனக்கு ஒரு சந்தேகம்...” என்று இழுத்தார்.

“என்ன சந்தேகம்?” என்றேன்.

“இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் நான் வெளியே சொல்றதாலே அய்யருடைய பெருமை குறையுமா?”

“ஏன், அவர் இன்னும் ஜீவியவந்தராயிருக்கிறாரா?”

“எங்கே இருக்கிறார் ? அப்படிப்பட்ட அபூர்வ மனுஷருங்களெல்லாம் தான் இந்த உலகத்தை விட்டுப் பொழுதோடு போயிடறாங்களே! “ +

“போயிருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களெல்லாம் அவருடைய பெருமைக்கு எந்தவிதமான இழுக்கையும் தேடி வைக்காது. அப்படி ஓர் உத்தமரை இப்போதெல்லாம் எங்கே பார்க்க முடிகிறது?” என்றேன் நான்.

“என் கவலை இதுதான். இதனாலே என்பெருமை குலைந்தாலும் அவருடைய பெருமை குலையக் கூடாது குலைவதாயிருந்தால் இந்த விஷயங்களைத் தயவு செய்து நீங்கள் வெளியிடக் கூடாது....”

“அந்தக் கவலை எங்களுக்கும் இருக்காதா? கிட்டத்தட்ட ‘சத்திய சோதனை’ போல், உள்ளது உள்ளபடி வந்து கொண்டிருக்கும் இந்த வரலாற்றுத் தொடரில் இதை மட்டும் மறைப்பானேன்? வெளியிட்டே விடுவோம்...”

“சரி, செய்யுங்கள்.”

“அப்புறம்.... ?”

“அப்புறம் என்ன, என்னைப் பிடித்த வறுமையே என்னை விட்டு ஒழிந்தது. பட்டி தொட்டியெல்லாம், மூலை முடுக்கெல்லாம் கழகப் பிரசார நாடகத்தோடு யுத்தப் பிரசார நாடகங்களும் கலந்து நடந்தன. பெயர், புகழ், பணம், செல்வாக்கு அத்தனையும் என்னைத் தேடி ஓடி வந்து குவிந்தன. மதுரை சவுந்தர பாண்டிய நாடார், தூத்துக்குடி தனுஷ்கோடி நாடார், விருதுநகர் வி.வி. ராமசாமி நாடார் போன்ற பல பெரிய புள்ளிகள் எனக்கு அறிமுகமானார்கள், அந்தரங்க நண்பர்களானார்கள். கழகத்தையும் என்னையும் கட்டி வளர்த்தார்கள்...”

“அதென்ன, எல்லாம் ஒரே நாடார்களாகவே இருக்கிறார்கள் ?”

“அந்த நாளில் மேல் சாதிக்காரர்கள் அரிசனங்களுக்கு இழைத்து வந்த கொடுமையை விட நாடார்களுக்கு இழைத்து வந்த கொடுமைதான் அதிகம். அதனாலேயே திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கு அவங்க பங்கே அப்போ அதிகமாயிருந்தது. காளிமார்க் சோடா கம்பெனி பரமசிவ நாடார் இருக்காருங்களே, அவர் அப்போ என் பேரிலே ‘எம்.ஆர்.ராதா சோடா'ன்னு ஒரு தனி சோடாவே போட்டு அந்தப் பக்கத்திலே விற்க ஆரம்பிச்சார்!" “அது வியாபார நோக்கமாயிருக்கும்; திராவிடர் கழகத்தார் அத்தனைபேரும் ‘எம்.ஆர்.ராதா சோடா கொடு'ன்னு கேட்டு வாங்கிக் குடித்திருப்பார்களே ?”

“அதுக்கு என்னைவிட எத்தனையோ பெரிய பெரிய தலைவர்களெல்லாம் இருந்தாங்களே ?”

“சரி. அந்தத் திருப்பதி விஷயம்...”

“அதுதான், அங்கே ஏதோ திருடின விஷயம்...”

“ஓ, அதைக் கேட்கிறீங்களா ? அடுத்த வாரம் வாங்க, சொல்றேன்"