நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/22. நண்பர் ஜீவானந்தம்

22. நண்பர் ஜீவானந்தம்

“உங்கள் நாடகத்துக்கு அரசாங்கத்தார் தடை விதிப்பதும, அந்தத் தடையை மீறி நீங்கள் நாடகம் நடத்துவதும்தான் எப்போதும் சர்வசாதாரணமாயிருந்து வந்திருக்கிறதே, நீங்கள் என்ன செய்தீர்கள்? தடையை மீறிப் ‘போர்வாள்’ நாடகத்தை நடத்தினீர்களா ?”

“இல்லே, அதிலே வேடிக்கை என்னன்னா, அந்தத் தடையைப் போட்டவங்க பிரிட்டிஷ் சர்க்கார் கூட இல்லே, அப்போ சென்னையிலே நடந்துகிட்டிருந்த பிரகாசம் சர்க்கார்தான் போட்டது.”

“அவருடைய ஆந்திராவுக்கும் சேர்த்துத்தானே உங்கள் ‘போர்வாள்’ நாடகத்தில் நீங்கள் ‘திராவிட நாடு’ கேட்டுக் கொண்டிருந்தீர்கள்? அதற்கு அவர் ஏன் தடை விதிக்க வேண்டும்?”

“யாருக்குத் தெரியும், நாங்களும் அப்போதைக்கு அதை மீற விரும்பாம, வேறே நாடகங்களை நடத்த ஆரம்பிச்சோம். ஏன்னா, அப்போ நாட்டு நிலவரம் நல்லாயில்லே. எங்கே பார்த்தாலும் ஒரே கம்யூனிஸ்ட் கலாட்டா, குழப்பம் பொன் மலையிலே கம்யூனிஸ்ட்டுகளைச் சுட்டுத் தள்றாங்கன்னு ஒரே புரளி, பீதி! பிரகாசம் வேறே ஒரு கம்யூனிஸ்ட்டைக்கூட வெளியே விடாம பிடிச்சி உள்ளே தள்ளிக்கிட்டே இருந்தார். அந்தச் சமயத்திலே என்கிட்டேகூட ஒருத்தர் வந்து, ‘நீங்க டிராமா தொடங்கறதுக்கு முந்தி ஒரு திரை விடறீங்களே, அந்தத் திரையைக்கூடக் கழற்றிச் சுருட்டிக் கொஞ்ச நாள் உள்ளே வைச்சுடுங்க. இல்லேன்னா, உங்களையும் கம்யூனிஸ்ட்டுன்னு பிரகாசம்காரு உள்ளே போட்டுட்டாலும் போட்டுடுவார்'ன்னார்.”

“அப்படி என்ன இருந்தது அந்தத் திரையிலே.”

“திராவிட நாடு திராவிடருக்கேன்னு இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லே ‘உலகப் பாட்டாளி மக்களே, ஒன்றுபடுங்கள்’னு இருந்தது.”

“கம்யூனிஸ்ட் கட்சியிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டா, என்ன ?”

“இல்லாதவன் யாராயிருந்தாலும் அவனுக்கு அந்த நாளில் அதிலே ஒர் ஈடுபாடு இருக்கத்தான் இருந்தது.”

“சரி, அப்புறம்.. ?”

“கம்யூனிஸ்ட் தலைவர்களெல்லாம் வழக்கம்போல அண்டர்கிரவுண்டு'க்குள்ளே போக ஆரம்பிச்சுட்டாங்க. அவர்களிலே ஒருத்தர் ஜீவானந்தம். அவரை ஒரு பிராமண நண்பர் என்கிட்டே அழைச்சிக்கிட்டு வந்து...”

“யார் அந்தப் பிராமண நண்பர் ?” “அவருடைய பெயரை இப்போ வெளியே சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். சொன்னா, அதாலே நல்லதுக்குப் பதிலா அவருக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் ஏற்படும்...”

“சரி, விடுங்கள். பிறகு.... ?”

“அவர் ஜீவானந்தத்தை அழைச்சிக்கிட்டு வந்து ‘நீங்கதான் இவருக்கு அடைக்கலம் கொடுக்கணும்'னார். ‘சரின்னு அவரை மேக்கப் ரூமுக்கு அனுப்பி, மொதல்லே தலையை மொட்டை அடிக்கச் சொன்னேன். அப்புறம் நெற்றியிலும் கைகளிலும் பட்டைப் பட்டையா விபூதியைப் பூசி, தியேட்டர் முதல் வரிசையிலேயே அவ்ரை உட்கார வைத்து, தைரியமா நாடகம் பார்க்கச் சொன்னேன்.”

“அப்போது உங்களுக்கு இருந்த தைரியம் அவருக்கு இருந்ததா?”

“அந்த விஷயத்திலே நானும் அவருக்குத் தோற்றவன் இல்லே, அவரும் எனக்குத் தோற்றவர் இல்லே. ஆனாலும் அப்போ இருந்த சந்தர்ப்பம் அப்படி என்னதான் தைரியசாலிகளாயிருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் தைரியம் சொல்லிக்க வேண்டியிருந்தது; சொல்லிக்கிட்டோம் அவ்வளவுதான், ஆனா...”

“ஆனால் என்ன ?”

“திராவிடர் கழகத்தார் சிலருக்கு இது பிடிக்கல்லே: உனக்கு ஏன் வீண் வம்பு ? அண்டர்கிரவுண்டுக்காரனை அரெஸ்ட் செய்ய வரப்போ உன்னையும சேர்த்து இல்லே அரெஸ்ட் செய்வாங்க?'ன்னு எனக்குப் புத்திமதி சொன்னாங்க...”

“நீங்கள் என்ன சொன்னீர்கள் ?”

“உங்கள் புத்திமதிக்கு நன்றி. ஆனா, இது கட்சியைப் பொறுத்த விஷயம் இல்லே, நட்பைப் பொறுத்த விஷயம். ‘ஆபத்துக்கு உதவுவான். நண்பன்’னு ‘தூக்குத் துாக்கி” நாடகத்திலே சொல்லிட்டு, வாழ்க்கையிலே அதைத் துக்கி எறிஞ்சிடறது அவ்வளவு சரியா எனக்குப் படலே, நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டேன்!”

“என்ன இருந்தாலும் நாடகம் முடியும் வரைதானே அவரை உங்களாலே அப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும்? அதற்கு மேலே.. ?”

“குட்டி போட்ட பூனை கதை தான். ஆண் பூனை எங்கே வந்து தான் போட்ட குட்டிகளைக் கடித்துப் போட்டு விடுமோன்னு பயந்து, அப்பப்போ அது இடம் மாற்றி வைச்சிக்கிட்டிருக்கும் பாருங்க, அந்த மாதிரி நானும் நண்பர் ஜீவானந்தத்தை இடம் மாற்றி, இடம் மாற்றி வைச்சிக்கிட்டே இருந்தேன். எங்கே வைச்சிக்கிட்டிருந்தாலும் அவரைத் தேடி அவர் கட்சிக்காரங்க சில பேரு வந்துகிட்டே இருப்பாங்க..”

“ஆமாம். அண்டர்கிரவுண்டிலே இருக்கும்போதுகூட அவர்கள் கட்சி வேலை நிற்காதே!”

“அப்படி வரவங்க பேச்சுக்குப் பேச்சு ‘காம்ரேட், காம்ரேட்’னு சொல்றது எனக்கு என்னவோ போலிருக்கும். நான் ஒரு நாள் ஜீவானந்தத்தைக் கேட்டேன். ‘காம்ரேட்டுன்னா என்னய்யா, அர்த்தம் ?னு. அவர் ‘தோழர்'ன்னார். ‘அப்போ தோழர்ன்னு சொல்லிட்டுப் போறதுதானே'ன்னேன். ‘அந்த உரிமை உங்களுக்கு வேணும்னா இருக்கலாம். எங்களுக்கு இல்லேன்னார். அப்பத்தான் நான் ஒரு சாதாரண விஷயத்திலேகூட அந்தக் கட்சி எவ்வளவு கட்டுப்பாடோடு இருக்குதுங்கிற விஷயம் எனக்குப் புரிஞ்சது...”

“கட்டுப்பாட்டை மட்டும் அது காட்டவில்லை: என்னதான் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டுக் கட்சியல்ல, அயல் நாட்டுக் கட்சி என்பதையும் அது காட்டவில்லையா ?”

“அதையும் காட்டத்தான் காட்டுது. இருந்தாலும் கட்சி அயல்நாட்டுக் கட்சியாயிருந்தாலும் ஜீவானந்தம் அயல் நாட்டு மனுஷன் இல்லே பாருங்க, அதாலே நான் அவரைத் தொடர்ந்து ஆதரிச்சி வந்தேன். அந்தச் சமயத்திலேதான் யாரோ ஒரு வாத்தியாரம்மாவுக்கு அவர் அடிக்கடி கடிதம் எழுதி என்கிட்டே கொடுத்தனுப்புவார். ‘ஏதோ கட்சி சம்பந்தப்பட்ட கடிதமாக்கும்’னு நினைச்சி, நான் அதைப் பத்திரமாகக் கொண்டு போய் அந்த அம்மாகிட்டே கொடுப்பேன். அவங்க அதை வாங்கிப் படிச்சிப் பார்த்துட்டுப் பதில் கடிதம் எழுதிக் கொடுப்பாங்க. அதையும் பத்திரமா எடுத்துக்கிட்டு வந்து ஜீவானந்தம்கிட்டே கொடுப்பேன். கடிதம்தான் இப்படி அடிக்கடி கை மாறிக்கிட்டிருந்ததே தவிர, அந்தக் கடிதங்களாலே நான் வரும்னு எதிர்பார்த்த புரட்சி அவ்வளவு சீக்கிரம் வரதாத் தெரியல்லே; அது எப்போ வரும்? ம்னு ஒரு நாள் ஜீவாவைக் கேட்டேன். எது?ன்னார். புரட்சி'ன்னேன். அவர் சிரிச்சார், ‘ஏன் சிரிக்கிறீங்க?'னனேன். ‘நாட்டிலே புரட்சி நடந்தால்தான் புரட்சியா? வாழ்க்கையிலே புரட்சி நடந்தா அது புரட்சியில்லையா ?’ ன்னார். ‘நாட்டிலே புரட்சி நடக்காம வாழ்க்கையிலே எப்படிப் புரட்சி நடக்கும்?'ன்னேன். ‘பொறுத்துப் பார்'ன்னார். பொறுத்துப் பார்த்தேன். அதுக்குள்ளே ஆவடியிலே ஒரு கலாட்டா; அங்கே ஏதோ ஒரு திருட்டுக் கூட்டம் முகாம் போட்டிருக்குன்னு போலீசார் அவங்களைச் சுற்றி வளைச்சிப் பிடிக்கப் போனாங்க. அப்போ நான் ஜீவாவை அங்கிருந்த ஒரு வீட்டிலே ஒளிச்சி வைச்சிருந்தேன். அவர் போலீசாரைக் கண்டதும் எங்கிட்டே கூடச் சொல்லிக்காம அந்த வீட்டிலிருந்து எப்படியோ தப்பி, எங்கேயோ தலைமறைவாப் போயிட்டார்...”

அதற்குப் பிறகு நீங்கள் அவரைப் பார்க்கவே இல்லையா ?”

‘தடையெல்லாம் நீங்கி அவர் வெளியே வந்தப்புறம்தான் பார்த்தேன்...”

“புரட்சி... ?”

“அவர் சொன்னாப்போல நாட்டிலே புரட்சி நடக்கலேன்னாலும் அவருடைய வாழ்க்கையிலே புரட்சி நடந்துவிட்டது:”

“அது என்ன புரட்சி ?" “அதுதான் அவர் கலியாணம் செய்துகிட்ட புரட்சி ! அண்டர்கிரவுண்டிலே இருந்தப்போ யாரோ ஒரு வாத்தியாரம்மாவுக்கும் அவருக்கும் இடையே நான் கடிதம் கொண்டு போய்க் கொடுக்கிற ஆளா இருந்துகிட்டிருந்தேனே, அது கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்க இல்லையாம்; காதல் சம்பந்தப்பட்ட கடிதங்களாம்...”

“ஓ, அவர் காதலி பத்மாவதியம்மாளுக்கு நீங்கள்தான் ‘காதல் விடு தூதாயிருந்தீர்களா ?”

“ஆமாங்க.”

“தேவலையே நாடக நடிகரான உங்களை வைத்தே அவர்கள் தங்கள் காதல் நாடகத்தை நடத்தியிருக்கிறார்களே?”

“அதை வைத்துத்தான் அந்த மனுஷர் ‘நாட்டிலே நடந்தாத்தான் புரட்சியா, வாழ்க்கையிலே நடந்தாப் புரட்சியில்லையா ?'ன்னு அன்னிக்கு என்னைக் கேட்டிருக்கார். அப்போ அது எனக்குப் புரியல்லே, இப்போ புரிஞ்சிப் போச்சு!”

“அதோடு அவரை நீங்கள் விட்டு விட்டீர்களா ?”

“எங்கே விட்டேன் ? அவரும் என்னை விடல்லே, நானும் அவரை விடல்லே. என்னிக்கு அவர் திருவொற்றியூரிலே சிலையா நின்னாரோ அன்னிக்குத்தான் அவருக்கும் எனக்கும் இடையே இருந்த தொடர்பு எங்களை விட்டது.!"