நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/23. சர்.ஆர்.எஸ்.சர்மா

23. சர்.ஆர்.எஸ்.சர்மா

“திருவாரூரிலே பிரசித்தி பெற்ற பிராமணர்களிலே ஒருத்தர் சர்.ஆர்.எஸ்.சர்மா. அந்த நாள் ‘ஜர்னலிஸ்ட்'டா யிருந்த அவர் கல்கத்தாவிலே ஏதோ ஒரு பத்திரிக்கையை நடத்தி வந்தார். இந்த நாளிலே சிலர் அடிக்கடி உலகச் சுற்றுப் பிரயாணம் செய்யறதைப் பார்த்துட்டுப் பலர் ஆச்சரியப்படறாங்க, இல்லையா? அந்த ஆச்சரியத்துக்கு இடமில்லாம அந்த நாளிலேயே அடிக்கடி உலகச் சுற்றுப் பிரயாணம் செய்துகிட்டிருந்தவர் அவர். இன்னிக்கு ‘லண்டன்’ என்பார்; நாளைக்கு ‘அமெரிக்கா’ என்பார். இப்படி எப்போ பார்த்தாலும் எங்கேயாவது போய்க்கிட்டே இருப்பார்...”

“நல்ல பண வசதி இருந்திருக்கும் போலிருக்கிறது....”

“அப்படி எந்த வசதியும் இருந்ததாக்கூடத் தெரியல்லே. ஆனா, எங்கிருந்தோ, எப்படியோ அவருக்கு அடிக்கடி பணம் வந்துகிட்டே இருந்தது. வர பணத்தைத் தானே வைச்சுக்கவும் மாட்டார். எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடுவார். அப்படிக் கொடுக்கிறப்போ அவர் ஆரியர்னும் பார்ப்பது கிடையாது. திராவிடர்னும் பார்ப்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனா அவர் ஆரியர்களுக்குக் கொடுத்ததைவிட திராவிடர்களுக்குக் கொடுத்ததுதான் அதிகம். இதிலே அவருக்கு ஒரு திருப்தி என்னன்னா, உலகம் பூரா சோஷலிசம் பரவுதோ இல்லையோ, தன்னைச் சுற்றி சோஷலிசம்’ பரவினால் போதுங்கிறதுதான்!" தேவலையே, என்ன வத்தாலும் தானே வாங்கிப் போட்டுக் கொண்டு, யாராவது ஒரு பிச்சைக்காரன் வந்து ஒரு காசு பிச்சை கேட்டால்கூட, ‘இதெல்லாம் தனிப்பட்டவர்கள் தீர்க்கக்கூடிய பிரச்சனையா? அரசாங்கத்தார் பார்த்துத் தீர்க்க வேண்டிய பிரச்சனை!” என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் தர்க்க வாதம் பேசித் தட்டிக் கழிப்பதைவிட, இது எவ்வளவோ மேலானதாயிருக்கிறதே?”

“அந்த ஒரு விஷயத்தாலேதான் எனக்கும் அவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவர் தலைமையிலே ஒரு சமயம் நான் திருவாரூரிலே ஒரு நாடகம் போட்டேன்...”

“என்ன நாடகம்?”

“விமலா அல்லது விதவையின் கண்ணீர்....”

“சர்மாவுக்கு அந்த நாடகம் பிடித்திருந்ததா ?”

“நல்லா கேட்டீங்க! என்னைக் கேட்டா அந்த நாடக சப்ஜெக்ட் அந்தக் காலத்திலேயே எல்லாருக்கும் பிடிச்சிருந்ததுன்னே சொல்வேன். ஆனா, அதை வெளியே சொல்ற துணிவு, ஒப்புக்கிற தைரியம்தான் பலருக்கு அப்பவும் இல்லே, இப்பவும் இல்லே. அதாலேதான் இத்தனை வருஷப் பிரச்சாரத்துக்குப் பிறகும் விதவைங்க பகிரங்கமா மறுமணம் செஞ்சிக்கிறது இந்த நாட்டிலே இன்னும் அபூர்வமாயிருக்கு. தப்பித் தவறி யாராவது செஞ்சிக்கிட்டா அது அதிசயமாக் கூட இருக்கு”

“அதற்கு யார் என்ன செய்ய முடியும்? இத்தனைக்கும் அந்தச் சீர்திருத்தமெல்லாம் இன்று பிரசாரத்தோடு மட்டும் நிற்கவில்லை; அவற்றுக்கு வேண்டிய சட்ட திட்டங்களையும் செய்து வைத்திருக்கிறார்கள். அதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் பயந்து பயந்து சாகிறவர்களைக் கடவுளே வந்தாலும் இனிக் காப்பாற்ற முடியாது.”

“நம்ம ஜனங்களுடைய மனோபாவம் அப்படி. இதே விஷயத்தைத்தான் அன்னிக்கு சர்மாஜியும் வேறே ஒரு விதத்திலே எடுத்துச் சொன்னார். ‘ராதா நாடகம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் அவருடைய ரத்தக் கண்ணீர் நாடகத்தை நான் மிஸ் பண்ணுவதே கிடையாது. அதிலே ஒரு சீன் வரும். அந்த சீன் எப்பவோ பார்த்தது, இன்னும் என் நினைவிலே அப்படியே இருக்கு. குஷ்டரோகியான பின் காந்தாவால் விரட்டப்பட்டு அவர் வீதிக்கு வருவார். அந்த வீதியிலே ஒரு பக்கம் இந்து கோயில்; அதிலே ஒரு அர்ச்சகர். இன்னொரு பக்கம் மாதா கோயில்; அதிலே ஒரு பாதிரியார். இந்து கோயில் அர்ச்சகர் குஷ்ட ரோகியைக் கண்டதும், ‘மாபாவிகிட்ட வராதேடா, எட்டிப் போடா!'ன்னு விரட்டு வார்; பாதிரியாரோ, “வா தம்பி, வா உன் பாவத்தை மன்னித்து உன்னை ரட்சிக்க எங்கள் இயேசு இருக்கிறார். வா தம்பி, வா’ என்று அன்புடன் குஷ்டரோகியை அழைத்து அடைக்கலம் தருவார். இந்த ஒரு சின்னஞ்சிறு காட்சியில், இந்து மதம் நாளுக்கு நாள் ஏன் ஷீணிக்கிறது, கிறிஸ்துவ மதம் ஏன் நாளுக்கு நாள் வளருகிறது என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்லாமல் சொல்லி விடுகிறார் ராதா!--இந்த மாதிரி பல விஷயங்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சீன்கள் சில இந்த நாடகத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றையெல்லாம் இங்கே விரிவாக எடுத்துக் கூறும் அளவுக்கு இப்போது எனக்கு நேரமில்லை. இன்றிரவே இங்கிருந்து நான் புறப்பட்டு நாளை சென்னைக்குப்போய், அங்கிருந்து அமெரிக்காவுக்குப் போக வேண்டியவனாயிருக்கிறேன். ஆகவே, இந்த நாடகத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறி என் பேச்சை முடித்துக் கொள்கிறேன். இதிலே நாம் பார்த்த விதவையின் துயரம் பிராமணாள் வீட்டிலே மட்டுமில்லே, சூத்திராள் வீட்டிலும் இருக்கு. அதாலே இது எல்லாருக்கும் பொது. எல்லாரும் சேர்ந்து ஒழிக்க வேண்டிய அநீதி, கொடுமை! நான் வரேன், நமஸ்காரம்’னு சொல்லி, அவர் மேடையை விட்டு இறங்கியதுதான் தாமதம், ஆடிட்டோரியத்தின் ஒரு மூலையிலிருந்து ஒரே ஆரவாரம்'வாபஸ் வாங்கு, சூத்திராள்னு சொன்னதை வாபஸ் வாங்கு'ன்னு ஒரே கூச்சல், கலாட்டா! சர்மாவுக்கோ மீண்டும் மேடை ஏறி அதை வாபஸ் வாங்கி விட்டுப் போகும் அளவுக்கு நேரமில்லே. பழக்க தோஷம், வாய் தவறி வந்துவிட்டது. நான் வேணும்னா, சூத்திரான்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்னு ஒரு கடிதமே எழுதி வீட்டிலே கொடுத்துட்டுப் போறேன். நாளைக்கு நீ அதை வாங்கி வந்து மேடையிலே படிச்சிடு'ன்னு சொல்லிட்டு, அவர் அவசர அவசரமாக காரிலே ஏறி வீட்டுக்குப் போயிட்டார்....?”

“அப்புறம்.. ?”

“நான் மேடை ஏறி, சர்மா சொன்னதை அப்படியே சொல்லி, அன்றைய நாடகத்தை ஒரு வழியா நடத்தி முடிச்சேன். மறுநாள் சி.பி.சிற்றரசு தலைமையிலே நாடகம். சர்மா எழுதிக் கொடுத்துவிட்டுப் போன மன்னிப்புக் கடிதத்தை அவரிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அவர் படிச்சார். அவ்வளவுதான்; ஆடிட்டோரியம் பூராவும் ஒரே கரகோஷம்! முன் வரிசையிலே உட்கார்ந்திருந்த ரெண்டு திராவிடர் கழகத் தலைவருங்க சட்டுன்னு எழுந்து, ‘அந்தக் கடிதத்தை இங்கே படிச்சா மட்டும் போதாது; இப்படிக் கொடு. நான் என் பத்திரிகையிலே போடறேன்!"னு போட்டி போட்டு வாங்கிட்டுக்போனாங்க..”

“போட்டாங்களா ?”

“எங்கே போட்டாங்க ? சர்மாவைப் பொறுத்த வரையிலே அவர் சொன்னதைச் செய்துட்டார்; இவங்க செய்யல்லே...”

‘காரணம் ?

“யாருக்குத் தெரியும்?”

“அந்தத் தலைவர்கள் யாரென்றாவது... ?”

“ஏற்கனவே என்னைப் பொல்லாதவங்கிறாங்க; அதையும் சொன்னா இன்னும் பொல்லாதவன் என்பாங்க; வேண்டாம்.”

“அவர்களைச் சொல்கிறீர்களே, நம் சினிமா ரசிகர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள்? சினிமாவில் ஒருவன் நல்லவனாக நடித்தால், அவன் வாழ்க்கையிலும் நல்லவனாக இருப்பான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; உங்களைப் போன்ற நடிகர்கள் வேண்டுமானால் அதை உங்கள் நடிப்பின் வெற்றியாக நினைக்கலாம்; நாங்களோ அதைச் சமூகத்தின் கொடுமையாக நினைக்கிறோம். இதைப் பற்றி உங்கள் கருத்து... ?”

“தர்ம சங்கடமான கேள்வி நடிகருங்க நினைக்கிறதி லேயும் தப்பில்லே, நீங்க நினைக்கிறதிலேயும் தப்பில்லேங் கிறதுதான் என் கருத்து:”

இருவரும் ஒருவரையொருவர் ஒரு கணம் பார்க்கிறோம். மறு கணம் சிரித்துச் சமாளிக்கிறோம். இந்தப் பேட்டியில்தான் இப்படி எத்தனை நாட்கள்!