நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/28. தி.மு.கவும் நானும்

28. தி.மு.கவும் நானும்

“அறுபத்திரண்டு எலெக்ஷன்னு நினைக்கிறேன்; ஜெமினி வாசன் ஒரு நாள் என் தோட்டத்துக்கு டெலிபோன் செய்து,'ஒரு காரியமா உங்களைப் பார்க்கணும். நான் உங்க தோட்டத்துக்கு வரட்டுமா, நீங்க என் வீட்டுக்கு வர்றீங்களா ?'ன்னார். நானே வரேன்'ன்னு போனேன். அப்போ காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தார். அதிலே நீங்களும் நடிக்கணும்னார். ‘நடிக்கிறேன்; என் கருத்தைச் சொல்ல இடம் கொடுப்பீங்களா ?'ன்னு கேட்டேன். காமராஜைக் கேட்டுச் சொல்லணும்'னார். ‘கேளுங்கன்னேன். கேட்டார்; அது முடியாது'ன்னு அவர் சொல்லிட்டார். உங்க கருத்துக்கு ஒத்தாப்போல என்னாலும் பேசி நடிக்க முடியாது'!ன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன்.”

“ஏன், அப்படிச் சொல்லிவிட்டு வந்து விட்டீர்கள்? அப்போது பெரியார் காங்கிரலை ஆதரித்தும், தி.மு.கவை எதிர்த்தும் தானே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்?”

“அது என்னவோ உண்மைதான். ஆனா, என் சமாசாரம் வேறே. அப்போ நான் பெரியாருக்காகத்தான் தி.மு.கவைத் திட்டறாப் போல நடிச்சிக்கிட்டிருந்தேனே தவிர, உண்மையா திட்ட என் மனம் இடம் கொடுக்கல்லே. காரணம், அவங்களிலே பலர் எனக்கு அன்னிக்கும் நண்பருங்க இன்னிக்கும் நண்பருங்க. தி.க வை விட்டுத் தி.மு.க பிரிஞ்சப்புறம் கூட நான் வழக்கம்போல அண்ணா வீட்டிலே தங்குவேன்; சாப்பிடுவேன். அதே மாதிரி ப.உ.சண்முகம் வீட்டிலும் தங்குவேன்; சாப்பிடுவேன். கட்சி வேறே, நட்பு வேறே இல்லீங்களா ?”

“ஆமாம், குளித்தலைத் தொகுதியிலே கலைஞர் கருணாநிதி நின்றபோது அவரை எதிர்த்து உங்களை நிற்கச் சொன்னாராமே பெரியார், அது உண்மைதானா?”

“உண்மைதான். அவர் மட்டுமில்லே, ‘விடுதலை’ வீரமணியும் மணியம்மையும் கூட எப்படியாவது அவரைத் தோற்கடிக்கணும்னு என்னை எதிர்த்து நிற்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. தேர்தலுக்கு ஆகிற செலவைக்கூட அவங்களே செய்யறேன்னு சொன்னாங்க. ‘மாட்டேன்"னு சொல்லிட்டேன்.”

“ஏன் 7.

“கலைஞரைப் போல ஒரு தலைவர் இந்த நாட்டுக்கு வேணும்னு நான் அப்பவே நினைச்சதுண்டு.”

“அண்ணா இருக்கும்போதேயா?”

“ஆமாம். அண்ணா நல்லவர், அவர் மனசும் நல்ல மனசு. ஆனா அவராலே எப்பவும் எதிலும் அவ்வளவு உறுதியாயிருக்க முடியறதில்லே...”

“கருணாநிதி... ?”

“பிடிச்சா, குரங்குப் பிடிதான்; விடவே மாட்டார். சில சமயம் சில விஷயங்களிலே அவர் விட்டுக் கொடுக்கிறாப்போல விட்டுக் கொடுப்பார். கடைசியிலே தான் நினைச்சதை எப்படியும் செய்து முடிப்பார். அப்படி ஒரு உறுதி அவருக்கு அப்பவே உண்டு. ஒரு சமயம் எம்.ஜி.ராமச்சந்திரன் ரசிகர் மன்றத்தாரெல்லாம் சேர்ந்து ‘எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாடு'ன்னு ஒரு பெரிய மாநாடே நடத்த ஏற்பாடு செஞ்சாங்க. அந்த மாநாட்டாலே அப்போ தி.மு.கவின் வளர்ச்சி கொஞ்சம் பாதிக்கப்படும் போல இருந்தது. அதைத் தடுக்கமுடியாத தர்ம சங்கடம் அண்ணாவுக்கு. பார்த்தார் கருணாநிதி; தானே தன் சகாக்களான சி.பி.சிற்றரசு, ப.உ.ச., மதுரை முத்து இவங்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு நின்னு, அந்த மாநாட்டை நடக்க விடாம தடுத்துட்டார்.”

“ஒரு நாட்டின் தலைவருக்கு அப்படி ஓர் உறுதி இருக்க வேண்டுமென்று நீங்கள் அப்போதே நினைத்தீர்கள் போலிருக்கிறது ?”

“ஆமாம். நான் நினைச்சதிலே தப்பில்லேன்னு இப்போ அவர் நடத்தற ஆட்சியிலேருந்து தெரியுதா, இல்லையா ? அப்படிப்பட்டவரை நான் எப்படி எதிர்த்து நிற்பேன்? யார் என்ன வேனுமானாலும் நினைச்சிக்கட்டும்’னு சென்னைக்கு வந்துட்டேன்.”

“எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாடு தடுத்து நிறுத்தப்பட்டதற்காக அண்ணா வருத்தப்படவில்லையா ?”

“அவர் ஏன் வருத்தப்படறார் ? அவருக்கு இருந்த வருத்தம் வேறே....”

“அது என்ன வருத்தம்?”

“அரசியல் உலகத்திலே நிமிர்ந்து நிற்கிறாப்போல கலை உலகத்திலே “நம்மவங்க நிமிர்ந்து நிற்க முடியலையேன்னு அவர் என்கிட்டே அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார்.”

“நம்மவங்க என்றால்"? “நண்பர் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாராயணசாமி இவங்களையெல்லாம் அவர் அப்படிக் குறிப்பிடறது வழக்கம்.”

“அவர்கள் மேல் அத்தனை அன்பா அவருக்கு ?”

“இருக்காதா? மத்தவங்க கழகத்தை வைச்சி வளர்ந்தா, அவங்க தங்களை வைச்சிக் கழகத்தை வளர்த்தவங்களாச்சே?

“ஓகோ!" “இன்னொரு சமயம் ஈரோடிலே இருக்கிற சம்பத் வீட்டிலே தி.மு.க.கமிட்டிக் கூட்டம் நடந்தப்போ நான் அங்கே இருந்தேன். கமிட்டிக் கூட்டம்னா கழகப் பெரும் புள்ளிகளிலேயே ஒரு சில குறிப்பிட்ட புள்ளிங்கதான் அதிலே கலந்துக்கும். அத்தனை ரகசியமா அது நடக்கும். அந்த இடத்திலே ‘தி.க வைச் சேர்ந்த நான் இருக்கலாமா ?'ன்னு யாரோ கேட்டாங்க. அண்ணா சொன்னார், ராதா அப்படிப்பட்டவர் இல்லே, அவர் அங்கே நடப்பதை இங்கே வந்து சொல்ல மாட்டார்; இங்கே நடப்பதை அங்கே போய்ச் சொல்ல மாட்டார்’னு. அந்த நம்பிக்கைக்கு பங்கம் வரும்படியா இன்னிக்கி வரையிலே நான் நடந்துக்கல்லே.”

“சரி, விடுங்கள். இப்போதுதான் அவர்கள் எல்லாருமே ஒன்றாய்ப் போய்விட்டார்களே ?”

“அதிலும் எனக்கு சந்தோஷம்தான். அதாலேதான் அந்தக் குளித்தலை சமாசாரத்தைக் கூட இப்போ நான் வெளியே சொல்றேன்... இப்படி நான் கழகத்திலும் நாடகத்திலுமா இருந்தப்போ, ராமானுஜத்தைச் சந்தித்தேன்...’

“எந்த ராமானுஜத்தை... ?”

“அவரை உங்களுக்குத் தெரியாதா? வாசன் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர். சர்.சி.பி.ராமசாமி அய்யருக்கெல்லாம் ரொம்ப வேண்டியவர்....”

“அப்படியா, அவரை உங்களுக்குத் தெரியும் போலிருக்கிறது ?”

“தெரியும். அவர் என்னைப் பார்த்ததும், ‘ரத்தக் கண்ணிiர் சினிமாவுக்கு அப்புறம் உங்களை சினிமாவிலேயே பார்க்க முடியலையே ?'ன்னார். ‘நாடகத்திலேதான் பார்க்கிறீங்களே, அது போதாதா ?ன்னேன். ‘உங்க பிரச்சாரத்துக்கு நாடகத்தைவிட சினிமா பவர்புல்லாச்சே?'ன்னார்; ‘பவர்புல்தான்; என் இஷ்டத்துக்கு எங்கே அதிலே பேச விடறாங்க ?'ன்னேன். ‘அதுக்கு நீங்க சொந்தப்படம் எடுக்கணும்'னார்; ‘பணம் ?'னேன். ‘நான் வேணும்னா என்னால் முடிஞ்ச வரையிலே உதவறேன்'ன்னார். அதுக்கு மேலே என் கம்பெனி மானேஜர் சாமண்ணாவை விட்டு அவரோடு பேரம் பேசச் சொன்னேன். எல்லாம் பேசி முடிச்சாச்சி. தேனாம்பேட்டை போயஸ் ரோட்டிலே கம்பெனிக்குன்னு ஒரு வீட்டைப் பிடிச்சி, ‘எம்.ஆர்.ஆர்.புரெடக்ஷன்ஸ்’னு சொந்தமாகவே ஒரு பிலிம் கம்பெனி ஆரம்பிச்சேன். காமராஜ்தான் திறந்து வைச்சார். கிருஷ்ணன் பஞ்சுவின் டைரக்ஷன்லே ‘ஆளப் பிறந்தவன்'னு படம் எடுக்கிறதா திட்டம் போட்டோம். எனக்கென்னவோ ஒரு நாடகக்காரர் எடுக்கிற படத்துக்கு நாடகத்திலே அனுபவமுள்ள இன்னொரு நாடகக்காரர் டைரக்டராயிருப்பது தான் நல்லதுன்னு பட்டது; கிருஷ்ணன் பஞ்சுவை நீக்கிவிட்டு ஏ.பி.நாகராஜனை டைரக்டராப் போட்டேன். சீனிவாசராகவனின் ரேவதி ஸ்டுடியோவிலே படப் பிடிப்பை ஆரம்பிச்சோம். அப்போ ‘ரத்தக் கண்ணீர் பெருமாள் முதலியா'ரும் வந்து எனக்குப் பண உதவி செய்தார்.”

“அவருக்கும் உங்களுக்கும் ஏதோ தகராறுன்னு வெளியே சொல்லிக்கிட்டிருந்தாங்களே ?”

“அது உண்மையில்லேங்கிறது உங்களுக்கெல்லாம் தெரியட்டும்னுதானே இப்போ நான் அதைச் சொல்றேன் ? அந்தச் சமயத்திலே சீனிவாச ராகவன் என்னையும் பாகவதரையும் போட்டு, ராஜா சாண்டோ நடிச்ச பழைய ‘வசந்த சேனா'வை மறுபடியும் புதுசா எடுக்க நினைச்சார். நினைச்சபடியே எடுக்கவும் எடுத்தார். படத்தை எடுத்து முடிக்கிறதுக்குள்ளே பாகவதரின் கண் போயிடிச்சி; பாதியிலே நின்னுடிச்சி.”

“பாவம், சீனிவாச ராகவன் ஒலிப்பதிவில் மட்டுமல்ல, வேறு எத்தனையோ வகைகளில் அவர் வியக்கத்தக்க திறமை பெற்றிருந்தார். அப்படியிருந்தும் இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ஏற்பட்டே அவ்வளவு சீக்கிரத்தில் அவர் மறைந்து போனார்!" “எனக்கும் அதிலே வருந்தந்தான்; என்ன செய்வது ? ‘வசந்த சேனா'வின் கதை அப்படி முடிஞ்சப்புறம் ஏ.பி.என். ‘ஆளப்பிறந்தவன்’ டைரக்சனோடு, என்னை வைச்சித் தானும் ஒரு படம் எடுக்க முடிவு செய்தார். அதுவே ‘நல்ல இடத்துச் சம்பந்தம்’. அந்தப் படத்திலே எனக்கு ஈடு கொடுத்து நடித்தவர் சவுகார் ஜானகி. அவரை என்னிக்கும் என்னாலே மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையே மூன்று வருஷ காலத்துக்கு மேல் கலையுலகத் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்திலே அவருடைய காருக்கு ஒரு காலன் பெட்ரோல் சும்மாப் போடறேன்னு நான் சொன்னாக்கூட அவர் அதை ஏத்துக்கமாட்டார். ‘நான் விரும்பறது. உங்களுடைய நடிப்புக் கலையை, ஓசிப் பெட்ரோலை இல்லே'ன்னு சொல்லிவிடுவார்.”

“படித்தவர் அல்லவா ?”

“படிச்சவங்களிலும் அப்படி எங்கேயோ ஒருத்தர்தானே இருக்காங்க?”

“ஆமாமாம், அப்புறம் ?”

“ஆளப்பிறந்தவன் வர்றதுக்கு முந்தி நல்ல இடத்துச் சம்பந்தம் வந்து நல்லா xட ஆரம்பிச்சிடிச்சி. அதுக்கு மேலே கேட்கனுமா ? ஏகப்பட்ட சான்ஸ் எனக்கு. அந்தக் கெடுபிடியிலே சொந்தப் படத்தை என்னாலே கவனிச்சி எடுக்க முடியல்லே, நிறுத்திட்டேன்...”

“கம்பெனி... ?”

“அதோடு க்ளோஸ்!”

“செலவு செய்தது... ?”

“ரெண்டரை லட்சம்!”

“பணம் கொடுத்து உதவியவர்களெல்லாம் என்ன ஆனார்கள் ?”

“திருப்பிக் கொடுத்துட்டேன்."