நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/27. இரு கெட்டிக்காரர்கள் கதை

27. இரு கெட்டிக்காரர்கள் கதை

“நாடகம் சிலருக்குக் கலையாயிருக்கும் ; சிலருக்குத் தொழிலாயிருக்கும். எனக்கோ கலையாகவும் தொழிலாகவும் மட்டுமில்லே, தொண்டாகவும் இருந்தது, தொண்டுன்னா நான் வேறே எந்தத் தொண்டையும் சொல்லல்லே, சமூகச் சீர்திருத்தத் தொண்டைத்தான் சொல்றேன்,”

“பெரியார் சீடராயிற்றே, வேறு என்ன தொண்டைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள் ?”

“பெரியார் சீடனாயிருந்தாலும் அந்தத் தொண்டுக்கு முதலில் எனக்கு வழி காட்டியவர் பேரறிஞர் அண்ணாங்கிறதை நான் இன்னும் மறக்கல்லே, என்னிக்கும் மறக்க மாட்டேன்...”

“அது எப்படி”

“அவர்தான் திருச்சி திராவிடக் கழக மாநாட்டிலே என் நாடகம் நடப்பதற்கு முதல்லே ஏற்பாடு செய்தவர்...”

“அண்ணா ரகசியமாகக் குடிப்பதுண்டு என்று சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா?”

“பொய். அவருக்கும் அந்தப்பழக்கம் கிடையாது; பெரியாருக்கும் அந்தப் பழக்கம் கிடையாது. பெரியாராவது வாலிபராயிருந்தப்போ, சில குடிகார நண்பர்களோடு கூடிக் குலாவியதுண்டாம். அவர்களிலே சிலர் இவர் வாயிலே பலவந்தமாகப் பிராந்தியையோ, விஸ்கியையோ ஊத்தி வைக்கக்கூட முயன்றதுண்டாம், அதற்கு டிமிக்கி கொடுத்துட்டு இவர் வீட்டுக்கு வந்தா இவருடைய சம்சாரம். சம்சாரம்னா இப்போ இருக்கிற மணியம்மை இல்லே, நாகம்மை... வாயை ஊதச் சொல்லி மோப்பம் பிடிச்சிப் பார்ப்பாராம். அந்த ஒரு விஷயத்திலே மட்டும் பெரியார் கூட எல்லாரையும் போலப் பெண்டாட்டிக்குப் பயந்தவராயிருந் திருக்கார்ன்னா, பார்த்துக்கங்களேன்! எனக்குத் தெரிஞ்ச வரையிலே அண்ணா அந்த வம்புக்கே போக மாட்டார். ‘துஷ்டரைக் கண்டா துார ஒரு அடி'ம்பாங்களே, அந்த மாதிரி குடிச்சிட்டு வரவன் தன் நண்பனாயிருந்தாலும் அந்தச் சமயம் அவர் அவனை விட்டு ஒதுங்கிவிடுவார்...”

“அப்படியானால் அவர் இருந்திருந்தால் மதுவிலக்கை ஒத்திவைத்திருக்கமாட்டார் என்று இப்போது சிலர் நினைப்பதுபோல் நீங்களும் நினைக்கிறீர்களா ?”

“என்னாலே அப்படி நினைக்க முடியல்லே. ஏன்னா, வசதியுள்ளவன் பெர்மிட் வாங்கிக் குடிக்கிறது, அதுக்கு வழியில்லாதவன் அவன் வாயைப் பார்த்து ஏங்கறதும் வார்னிஷ் குடிச்சிச் சாகறது'மாயிருக்கிறதை அவராலும் ரொம்ப நாள் பார்த்துக்கிட்டிருந்திருக்க முடியாது. அதாலே ‘மதுவிலக்கைக் கொண்டு வந்தா இந்தியா பூராவும் கொண்டு வாங்க, இல்லேன்னா ஒத்தி வைச்சிடுவேன்’னு அவரும். முதல்வர் கருணாநிதியைப்போலவே எச்சரித்திருப்பார், ஒத்திவைத்தும் இருப்பார்...”

“ம், பிறகு... ?”

“சினிமா, நாடகம், சங்கீதம், கச்சேரி, நாட்டியம்னாத்தான் அந்த நாளிலே டிக்கெட் போட்டு விற்பாங்க, ஜனங்களும் காசு கொடுத்து வாங்கிட்டுப் போய்ப் பார்ப்பாங்க. அந்த வழக்கத்தையொட்டி மாநாடுகளுக்கும் முதல்லே டிக்கெட் போட்டு வித்தவங்க திராவிடக் கழகத்தார்தான்.”

“அவர்கள்தான் மேடைப் பேச்சை வெறும் பேச்சாக நினைத்துப் பேசுவதில்லையே? மேடைக் கச்சேரியாகவே அல்லவா நினைத்துப் பேசினார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள் ?”

“அவங்க எப்படிப் பேசறாங்களோ என்னவோ, மக்கள் அவங்க பேசறதை அப்பவே காசு கொடுத்துக் கேட்கவும் தயாராயிருந்தாங்க. அதை வைச்சி, ‘திருச்சி மாநாட்டிலே நாடகம் நடத்தறதைப் பத்தி எனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லே, நல்லா நடத்தறேன்.” “அந்த நாடகத்திலே என்னைப் பொறுத்த வரையிலே நான் சும்மா நடிக்கத் தயார், என்னைப் போலவே என் கம்பெனி ஆட்களும் சும்மா நடிக்கணும்னு என்னாலே எப்படிச் சொல்ல முடியும்?'னேன். ‘நீங்க சும்மா நாடகம் நடத்தனும்னு நானும் சொல்ல வரல்லே. ஆனா, காசைப் பொறுத்த வரையிலே பெரியார் குணம் எப்படிங்கிறதை நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலையிலே இருக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன். அதாலே, ஒரு நாடகம் நடத்த குறைந்த பட்சம் நீங்க என்ன எதிர்ப்பார்க்கிறீங்கன்னு சொன்னா. அதை நான் பெரியார்கிட்டே சொல்லி, அதுக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யறேன்'னார். சாதாரணமா நான் ஒரு நாடகத்துக்கு ஆயிரம் ரூபா வாங்கறேன்; நீங்க ஐந்நூறாவது வாங்கிக் கொடுக்க முடியுமா ?ன்னேன், ‘வாங்கித் தரேன்'ன்னார். அதன்படி, திருச்சி மாநாட்டிலே முதல் முதலா என் நாடகம் நடந்தது. அண்ணா சொன்னபடி, அவராலே பெரியார்கிட்டேயிருந்து எனக்கு ஐந்நூறு ரூபாவாங்கிக் கொடுக்கமுடியல்லே. ஏன்னா, பெரியார் முந்நூறு ரூபாயை எடுத்து அவர்கிட்டே கொடுத்து, ‘எல்லாம் அது போதும், போன்னு சொல்லிட்டார். அண்ணாவாலே அப்படிச் சொல்ல முடியல்லே ‘கொடுத்த வாக்கைக் காப்பாத்தணுமே'ங்கிறதுக்காக அவர் மாநாட்டுக்கு வந்திருந்த தன் நண்பர்களிடமெல்லாம் தலைக்குக் கொஞ்சங் கொஞ்சமா வாங்கி, இருநூறு ரூபா சேர்த்து, முந்நூறை ஐந்நூறாக்கி எங்கிட்டே கொடுத்தார்..." “அதற்குப் பிறகு மாநாட்டிலே நாடகம் என்றால் நீங்கள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்து விட்டீர்களா?”

“அப்படியொண்ணும் நடக்கல்லே, நாடகம் ஒண்ணுக்கு ஆயிரம் ரூபான்னு, அதே பெரியாரிடம் எத்தனையோ மாநாட்டிலே, எத்தனையோ நாடகம் நடத்தி, நான் எத்தனையோ ஆயிரம் ரூபா வாங்கியிருக்கேன்.”

“அந்த மாநாடுகளில் நீங்கள் மறக்க முடியாத மாநாடு ஏதாவது உண்டா?”

“உண்டு; அதுதான் கே.வி.கே.சாமி துத்துக்குடியிலே நடத்திய மாநாடு...”

“எந்த கே.வி.கே. சாமி ?”

“அப்படிக் கேட்க வேண்டிய நிலையிலேதான் இன்னிக்கு அவர் பேரு இருக்கு. எத்தனையோ தொண்டருங்க, ‘நான் கட்சிக்காக உயிரைக் கொடுக்கிறேன், உயிரைக் கொடுக்கிறே'ம்பாங்க. அப்படிச் சொல்றதோடு நிற்காம, நிஜமாவே கட்சிக்காக உயிரைக் கொடுத்தவர் அவர்...”

“அது எப்படி ?”

“கட்சி மாச்சரியத்தாலே யாரோ சில புண்ணியவானுங்க சேர்ந்து ஒரு நாள் ராத்திரி அவர் சைக்கிளிலே வந்துகிட்டிருந்தப்போ அவரை மடக்கி, வேல் கம்பாலே குத்தி, கத்தியாலே வெட்டிக் கொன்னுட்டாங்க...”

“ஐயோ, பாவம்!”

“அப்படிப்பட்ட தியாகிதான் அந்தத் துரத்துக்குடி மாநாட்டுக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செஞ்சிக்கிட்டிருந்தார். அப்போ நான் மதுரையிலே இருந்தேன். அங்கேயிருந்து அந்த மாநாட்டுக்கு ஒரு பட்டாளமே கிளம்பிடுச்சி. ரயில் கொள்ளாத கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பார்த்த உற்சாகத்திலே, இந்த ரயில் எஞ்ஜினுக்கு முன்னாலே கழகக் கொடியைக் கட்டினா என்ன?ன்னு எனக்குத் தோணிச்சி, அப்போ தளபதி அண்ணாவாயிருந்தாலும், நானும் ஒரு விதத்திலே அவருக்கு உதவித் தளபதியாயிருந்து வந்தேன். அதாவது, நான் ஏதாவது செய்ன்னா தொண்டருங்க உடனே செய்யத் தயாராயிருந்தாங்க. அந்த ரயிலிலோ தளபதி அண்ணா வரல்லே. அவருக்குப் பதிலா, என்ஜினுக்கு முன்னாலே கட்டுங்கடா, கழகக் கொடியை'ன்னு நானே ஆர்டர் போட்டேன். அப்படியே கட்டினாங்க. அதைத் தடுக்காத கார்டு வண்டி புறப்படற சமயத்திலே, பெட்டிக்குப் பெட்டி தொத்திக்கிட்டு நிற்கிற தொண்டருங்க அத்தனை பேரும் வண்டியை விட்டுக் கீழே இறங்கினாத்தான் பச்சைக் கொடி காட்டுவேன்’னு அடம்பிடிக்க ஆரம்பிச்சார். ‘அப்படியா சமாசாரம்?’னு நான் முதல்லே வண்டியை விட்டுக் கீழே இறங்கி, ‘அய்யா சொல்றாரு, அங்கே இங்கே தொத்திக்கிட்டிருக்கிறவனுங்கெல்லாம் இறங்கிப் பிளாட்பாரத்திலே நில்லுங்கடா, வண்டி பாசானதும் ஏறுங்கடா'ன்னேன். அப்படியே இறங்கினாங்க. கார்டு பச்சைக் கொடி காட்டினார். வண்டி நகர்ந்தது; பிளாட்பாரத்திலே நின்ன அத்தனை பேரும் மறுபடியும் தொத்திக்கிட்டாங்க!”

“கார்டுக்கு எரிச்சலாயிருந்திருக்குமே ?”

“இருந்து என்ன செய்யறது? கதர்ச் சட்டையாயிருந்தாலும் கொஞ்சம் மிரட்டிப் பார்த்திருப்பார்; கறுப்புச் சட்டையாச்சே!”

“சரி, அப்புறம் ?”

“இத்தனை அமர்க்களமா நடந்த அந்தத் தூத்துக்குடி மாநாட்டுக்குத் தளபதி அண்ணா வரல்லே...”

“ஏன் ?”

“கருத்து மோதல்தான் காரணம்.”

“பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அப்போதே கருத்து மோதல் இருந்ததா?" “இல்லேன்னா ஏன் வராம இருந்திருக்கப் போறார்? இது எனக்குப் பிடிக்கல்லே. ‘என்னதான் கெட்டிக் காரராயிருந்தாலும் ஒரு மாநாட்டுக்குத் தலைவர் வராம இருக்கலாம்; தளபதி வராம இருக்கலாமா?ன்னு நினைச்சேன். அப்போ பெரியார் சொன்ன ‘கெட்டிக்காரன் கதை ஒண்ணு என் நினைவுக்கு வந்தது.”

“அது என்ன கதை?”

“நீங்ககூடக் கேட்டிருப்பீங்களே, அவர் அடிக்கடி சொல்வார் - ‘எனக்குக் கெட்டிக்காரனுங்க வேணாம், முட்டாளுங்கதான் வேணும்'னு. ஒரு நாள் அவர் அப்படிச் சொன்னப்போ, ‘ஏன் அப்படிச் சொல்றீங்க?'ன்னு அவரை ஒருத்தர் கேட்டார். அதுக்குப் பெரியார் சொன்னார்: ‘எனக்குப் பா.வே.மாணிக்க நாயக்கர்னு ஒரு நண்பர்; என்ஜினியர். அவரை வைச்சி நான் ஒரு சமயம் ஈரோடிலே வீடு ஒண்ணு கட்டினேன். சுற்றுச் சுவரெல்லாம் எழுப்பியாச்சு. இனிமே மரம் வந்துதான் மேலே வேலையை ஆரம்பிக்கனும், நாளைக்கு நீங்க மரம் வாங்கி வையுங்க, நான் வரேன்னு: சொல்லிட்டு அவர் வீட்டுக்குப் போயிட்டார். மறுநாள் வந்து, “என்ன, மரம் வாங்க ஆள் போயாச்சா ?'ன்னார். ‘போயாச்சு, நல்ல கெட்டிக்காரத் தச்சனுங்களர்ப் பார்த்து ரெண்டு பேரை அனுப்பி வைச்சிருக்கேன்னேன். ‘கெட்டிக்காரனுங்களையா அனுப்பினிங்க? அப்போ மரம் வந்து சேராது'ன்னார். ‘ஏன்?'னு: கேட்டேன். அதை நான் ஏன் சொல்லனும், நீங்களாகவே தெரிஞ்சிக்குவீங்கன்னார். . ‘சரி'ன்னு அந்தக் கெட்டிக்காரனுங்க வர வரையிலே காத்திருந்தோம். காலையிலே போன அவனுங்க, சாயங்காலம் மூணு மணிக்கு மேலே வந்தானுங்க. வந்தவனுங்க மரத்தோடும் வரல்லே, வெறுங்கையோடு வந்து நின்னானுங்க. ‘எங்கே மரம்'னேன். ‘இந்தக் கொட்டாப்புளி பிடிக்கத் தெரியாத பயலைக் கேளுங்க, நான் நல்ல மரமா பொறுக்கி எடுத்தா, இவன்தான் அதை வேணாம்னு சொல்லிட்டான்'னான் ஒருத்தன்; இன்னொருத்தனோ, ‘இந்தத் தொரப்பணம் போடத் தெரியாத பயலைக் கேளுங்க, நான் நல்ல மரமா எடுத்துக் காட்டினா, இவன்தான் அதை வேணாம்னு சொல்லிட்டான்'னான்: ஆக, மாணிக்க நாயக்கர் சொன்னது சரியாப் போச்சு. ரெண்டு பேரும் ‘யார் கெட்டிக்காரன்'கிறதிலே போட்டி போட்டுக்கிட்டதுதான் மிச்சம், காரியம் நடக்கல்லே. நாயக்கர் சொன்னார், ‘இனிமேலாவது தெரிஞ்சுக்குங்க, வழி காட்டத்தான் கெட்டிக்காரன் வேணும்; அந்த வழிப்படி காரியம் நடக்கணும்னா முட்டாளுங்கதான் வேணும்'னு. அது எனக்கு ரொம்பச் சரியாப் பட்டது. அன்னியிலேருந்துதான் எனக்குக் கெட்டிக்காரனுங்க வேணாம், முட்டாளுங்களே போதும்னு நான் சொல்லிக்கிட்டு வரேன்'ன்னார். எப்படியிருக்கிறது, கதை?”

“பிரமாதம்!”

“இந்தக் கதையை நினைவிலே வைச்சிக்கிட்டு அன்னிக்கு நடந்த மாநாட்டிலே நான் பேரறிஞர் அண்ணாவைக் கொஞ்சம் தாக்கிப் பேசிட்டேன். அவர் மேடையிலே இல்லாத சமயத்திலே மட்டுமில்லே, இருக்கிற சமயத்திலும் நான் சில சமயம் அவரைத் தாக்குவதுண்டு. என்னதான் தாக்கினாலும் அவருக்கு என் மேலே கோபம் வராது. சிரிப்புத்தான் வரும். கலைஞர் கருணாநிதி அன்னிக்கு நான் மாநாட்டிலே பேசிய பேச்சைக் கண்டிச்சி, ‘தூத்துக்குடி மாநாட்டிலே நடிகவேள் நஞ்சு கலந்தார்'னு ‘திராவிட நாடு’ ஏட்டிலே எழுதினார். நான் அதைப் பார்த்துக் கோபப்படல்லே, சந்தோஷப்பட்டேன். ஏன்னா, அதை அவர் எழுதி எத்தனையோ வருஷமாச்சு. இன்னும் அந்த வார்த்தை என் நெஞ்சிலே அப்படியே இருக்கு. காரணம்? தமிழை அவ்வளவு அழகா அவர் கையாள்ற முறைதான். எதிரிகளையும் மகிழ வைக்கிற விதத்திலே தமிழைக் கையாளும் அவருக்குத் ‘தமிழவேள்’னு பட்டம் கொடுத்தா என்னய்யா? அதைக்கூடச் சிலர் பொறுத்துக்க மாட்டேங்கிறாங்களே, அவங்களை நினைச்சாத்தான் எனக்குச் சங்கடமாயிருக்கு."