நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/அன்னிய நாட்டில் சூழ்ச்சி
முஸ்லிம்கள் படும் துன்பங்களைக் காணச் சகியாத பெருமானார் அவர்கள், மக்காவை விட்டு அபிசீனியா நாட்டுக்குப் போய் குடியேறுமாறு கட்டளை இட்டார்கள்.
அவ்வாறே அவர்கள் அபிசீனியாவுக்குச் சென்று குடி புகுந்தார்கள்.
அப்பொழுது அந்த நாட்டை நஜ்ஜாஷ் என்ற கிறிஸ்துவ அரசர் ஆட்சி புரிந்து வந்தார்.
முஸ்லிம்கள் மக்காவிலிருந்து வெளியேறி அபிசீனியாவுக்குச் சென்றதை அறிந்த குறைஷிகள் அப்பொழுதும் விட்டுவிடவில்லை.
அபிசீனியா அரசருக்கும், அங்கு செல்வாக்குள்ள சில பாதிரியார்களுக்கும் விலைமதிப்புள்ள பல பரிசுகளை சில தூதர்கள் மூலம் அனுப்பி, அரசரிடம் கோள் மூட்டி, முஸ்லிம்களைத் திரும்ப அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்தார்கள் குறைஷிகள்.
குறைஷிகளின் தூதர்கள் அரசரிடம் பரிசுகளை அளித்து,
“எங்கள் மக்கா நகரத்தில், சிலர் புதிய மதத்தை உண்டாக்க முற்பட்டார்கள். அதனால், நாங்கள் அவர்களைக் கண்டித்தோம். அவர்கள் இப்பொழுது இங்கே வந்திருக்கின்றனர். அவர்களை சபைக்கு வரவழைத்து விசாரித்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரினார்கள்.
பாதிரிகளிடமும் பரிசுப் பொருள்களைக் கொடுத்துத் தங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
மறுநாள் அரசர், குடிபெயர்ந்து வந்துள்ள முஸ்லிம்களை சபைக்கு வரவழைத்து,” நீங்கள் கிறிஸ்துவ மதத்துக்கும், விக்கிரக வழிபாட்டுக்கும் விரோதமாக வேறு எந்த மாதிரியான புதிய மதத்தை உண்டாக்கி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
குடியேறி வந்தவர்களின் சார்பாக, அபூதாலிப் அவர்களின் குமாரரும், அலி அவர்களின் சகோதரருமான ஜஃபர் எழுந்து, “மேன்மை மிக்க அரசர் அவர்களே! எங்களுடைய நிலைமையைச் சற்று கருணையோடு கேட்பீர்களாக. நாங்கள் மூட நம்பிக்கையிலும், அநாகரிகத்திலும் மூழ்கி இருந்தோம்; மரம், கல், உலோகத்தினால் உருவாக்கப்பட்ட விக்கிரகங்களை வணங்கி வந்தோம். செத்த பிராணிகளை உணவாக உண்டு கொண்டிருந்தோம். பெண்களைக் கொல்வதைப் பெருமையாக எண்ணி வந்தோம். அன்பு, உபசரிப்பு, மனிதாபிமானம் இவை எங்களிடம் அறவே கிடையாது. அவதூறான சொற்களையே எப்போதும் பேசிக் கொண்டிருந்தோம். எந்தவிதமான சட்ட திட்டங்களுக்கும் நாங்கள் உட்பட்டு நடக்காமல், பலாத்காரமும் வன்முறைச் செயல்களுமே அறிந்திருந்தோம். சுருக்கமாகச் சொன்னால், மிருகங்களைப் போலவே நாங்கள் காலம் கழித்தோம்; அத்தகைய தாழ்ந்த நிலையிலிருந்த எங்களிடம் கருணை கொண்டு எங்களுக்கு நல்வழி காட்டுவதற்காக, இறைவன் எங்களிலிருந்தே ஒருவரை அனுப்பினான். அவர்கள் பெயர் முஹம்மது. அவர்கள் ஹலரத் அப்துல்லாஹ்வின் குமாரர்; அப்துல் முத்தலிபின் பேரர்; அபூதாலிபின் சகோதரர் குமாரர். அவர்களுடைய உயர்குடிப் பிறப்பையும், உள்ளத் தூய்மையையும், சத்தியத்தையும், நல்ல நடத்தையையும், மனித இனத்தின் மீது அவர்களுக்கு உள்ள கருணையையும் நாங்கள் நன்கு அறிந்தோம். 'ஆண்டவன் ஒருவனே என்றும், அவனுக்கு இணையாக மற்ற எதையும் கருதக் கூடாது’ என்றும் வற்புறுத்திக் கூறியதோடு தாம் ஆண்டவனுடைய நபி என்பதை ஏற்கும்படியும் அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறினார்கள். விக்கிரக வணக்கம் கூடாது எனக் கண்டித்தார்கள்.
“உண்மையே பேசுமாறும், சொன்ன சொல்லைக் காப்பாற்றும்படியும், இரக்கம் உள்ளவர்களாக இருக்குமாறும், மற்றவர்களுக்கு உரிய கடமைகளைச் சரிவரச் செய்து நிறைவேற்றும்படியும் எங்களுக்குக் கற்பித்தார்கள்.
“பெண்களை இழிவு படுத்திக் கேவலமாக நடத்தக் கூடாது; அநாதைகளின் பொருள்களை அபகரிக்கக் கூடாது என்றும் பாவச் செயல்களிலிருந்து விலகி, ஆண்டவன் ஒருவனையே வணங்கும்படியும், அவன் வழியில் ஏழைகளுக்கு உதவி புரியும்படியும் கட்டளையிட்டார்கள். இவையே எங்கள் பெருமானார் அவர்களின் அறிவுரைகள்!
“அவர்களை மதித்து, அவர்களிடம் விசுவாசம் கொண்டு அவர்களுடைய அறிவுரைகளை நாங்கள் கடைப்பிடித்தோம். இவற்றின் காரணமாக, எங்கள் நகரத்துச் சமூகத்தினர் எங்களைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல; இழைத்த துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் அளவே இல்லை. அதனால், நாங்கள் வீடு வாசல்களைத் துறந்து, மனைவி மக்களைப் பிரிந்து, பொருள்களையும் இழந்து, நிர்க்கதியான-நிராதவரான நிலையில், உங்களுடைய பரந்த மனப்பான்மையையும், உயர்வான போக்கையும் அறிந்து, உங்கள் நாட்டில் அடைக்கலம் ஆனோம்.
ஆகையால், மேன்மைக் குணம் உடைய தாங்கள், எங்களுக்கு ஆதரவு காட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறினார்.
ஜஃபர் கூறிய அவ்வுரைகள் அரசனின் உள்ளத்தை நெகிழச் செய்தது. மேலும், அரபு நாட்டில் தோன்றிய நபி பெருமானார் அவர்களின் அறிவுரைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் அவருக்கு உண்டாயிற்று.
அரசர், ஜஃபரிடம், “உங்களுடைய நபி அவர்களுக்கு வெளியான வேதத்திலிருந்து சில பகுதிகளைக் கூறும்” என்று கேட்டார்.
திருக்குர் ஆனில், ஹலரத் ஈஸா அலைஹிஸ்லலாம் அவர்களின் பிறப்பைப் பற்றிய “ஸூரத்து மர்யம்” என்ற அதிகாரத்தின் ஆரம்ப வாக்கியங்களை எடுத்து ஓதினார் ஜஃபர்.
சொற்களின் கம்பீரமும், அவற்றின் உண்மையான கருத்துகளும், மொழியின் அழகும், கருத்துச் செறிவும் அரசரின் உள்ளத்தை ஈர்த்தது.
உடனே அரசர்,"கடவுள் மீது சத்தியமாக இம்மொழியும், இன்ஜீலும் (ஈஸா நபி அவர்களுக்கு வெளியான வேதமும்) ஒரே தீபத்திலிருந்து வெளியான ஒளிகளே!” என உரக்கக் கூறினார்.
குறைஷித் தூதர்களிடம் முஸ்லிம்களை ஒப்படைக்க மறுத்து விட்டார் அரசர்.