நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/குற்றத்தை உணர்ந்து மன்றாடுதல்

162. குற்றத்தை உணர்ந்து மன்றாடுதல்

முன் ஒரு சமயம், பெருமானார் அவர்களின் மகள் ஸைனப் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் செல்வதற்காக ஒட்டகத்தின் மீது ஏறிய போது, அல் ஹுவைரிது, ஹப்பார் என்ற இருவர் ஈட்டியின் பின்புறத்தால், அவர்களைத் தாக்கினர். அதனால், அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே விழும்படியாயிற்று. அப்பொழுது அவர்கள் கருக் கொண்டிருந்ததால், அக்கரு சிதைந்தது. இறுதியில் அவர்களின் மரணத்துக்கும், அதுவே காரணமாகவும் அமைந்தது.

அக்கொடிய குற்றத்தை நினைத்துப் பயந்த ஹப்பார், வேற்று நாட்டுக்கு ஓடிவிட்டார். சில நாட்களுக்குப் பின்னர், பெருமானார் அவர்களின் முன்னே வந்து, "இறை தூதரே! நான் செய்த குற்றங்களையும், உங்களுக்குச் செய்த கொடுமைகளையும் எண்ணி, அஞ்சி, அயல்நாட்டுக்கு ஓடினேன். ஆனால், தங்களுடைய கருணையும், தயாள சிந்தையும், பகைவர்களை மன்னிக்கும் பான்மையும் என் நினைவுக்கு வந்து, திரும்பியுள்ளேன். நான் குற்றம் புரிந்தவன்தான். எனினும், என்னை மன்னித்து விடுமாறு மன்றாடுகிறேன்” என்றார். அவர் செய்த குற்றமோ மிகவும் கடுமையானதுதான். அவரைக் கண்டால் கொன்று விட வேண்டும் என்று முன்னரே கட்டளையிடப்பட்டிருந்தது. எனினும் அவர் மனந்திருந்தி மன்னிப்புக் கோரியதும், பெருமானார் அவருக்கும் மன்னிப்பு வழங்கினார்கள்.