நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/சிதறிய படைகள் ஒன்று திரண்டன

169. சிதறிய படைகள் ஒன்று திரண்டன

ஹூனைன் யுத்த களத்தில், பெருமானார் அவர்கள், அன்ஸாரிகளையும், முஹாஜிர்களையும் அழைக்குமாறு அப்பாஸ் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

ஹலரத் அப்பாஸ் உரத்த தொனியில் அவர்களை அழைக்கவே, சிதறி நின்ற முஸ்லிம் வீரர்கள் அனைவரும் திரண்டு வெகு விரைவில் பெருமானார் அவர்கள் பக்கம் கூடிவிட்டார்கள். குதிரைகள் மிரண்டு போய், திருப்ப முடியாமல் இருந்ததால், சில குதிரை வீரர்கள் குதிரைகளிலிருந்து குதித்து ஓடி வந்தார்கள். அனைவரும் திரண்டதுதான் தாமதம், சண்டையின் போக்கே மாறிவிட்டது.

முஸ்லிம் சேனையின் ஆவேசத்தைக் கண்டதும், ஹவாஸின் கோத்திரத்தாருக்கும், அவர்களுடைய கூட்டாளிகளான தகீப் கோத்திரத்தாருக்கும் நடுக்கம் உண்டாகி விட்டது. அவர்களில் பலர் களத்தை விட்டே ஓடிவிட்டார்கள். ஒரு சிலரே வெகு நேரம் வரை போரிட்டார்கள். அவர்களில் கொடி பிடித்துக் கொண்டிருந்தவர் வெட்டுண்டு கீழே விழவும், எஞ்சியிருந்த சிலரும் ஓட்டம் பிடித்தார்கள். பின் வாங்கி ஓடியவர்களில் சிலர் அவுத்தாஸ், தாயிப், நக்லா ஆகிய இடங்களுக்கு ஓடிவிட்டார்கள்.

ஹவாஸின் கூட்டத்தார் போர் முனைக்கு வரும் போது, தங்கள் மனைவி, மக்களையும் கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள், தங்கள் அருகில் இருந்தால் ரோஷத்தோடு போரிடுவார்கள், பின்வாங்கி ஒடமாட்டார்கள் என்பது அவர்கள் கருத்து. ஆனால், ஓடக் கூடிய சந்தர்ப்பம் வந்ததும், களத்தில் தங்கள் மனைவி, மக்களையும் நிராதரவாக விட்டு விட்டு ஓடி விட்டார்கள்.

ஹவாஸின் கூட்டத்தாரில் ஆறாயிரம் பேர், முஸ்லிம்களால் சிறைப் பிடிக்கப்பட்டார்கள். தவிர, 24,000 ஒட்டகங்கள், 40,000 ஆடுகள், 4,000 வெள்ளிக் காசுகள் முஸ்லிம்களிடம் சிக்கின.

களத்தில் பிடிபட்ட கைதிகளையும், பொருட்களையும் அல்ஜிஃரானா என்னும் இடத்தில் பாதுகாத்து வைக்குமாறு பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

சிறை பிடிக்கப்பட்டவர்களில் பெருமானார். அவர்களின் வளர்ப்புத் தாயான ஹலீமா நாச்சியாரிடம், பெருமானாருடன் பாலுண்டு வளர்ந்த ஷைமா என்ற பெண்மணியும் இருந்தார்.

ஷைமாவைப் பெருமானார் அவர்களின் முன்னே கொண்டு வந்தனர். உடனே பெருமானார் அவர்கள், தங்களுடைய மேலாடையைக் கீழே விரித்து, அதில் அவர்களை உட்காரும்படி செய்தார்கள். தங்கள் சகோதரியைப் போல் அன்புடன் உபசரித்து, அவர்களுக்குச் சில ஒட்டகங்களையும், ஆடுகளையும் பரிசாகக் கொடுத்து, பாதுகாப்புடன் ஊருக்கு அனுப்பிவைத்தார்கள்.