நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/சிந்தனைச் சிறப்பு
ஆண்டவன் ஒருவனே என்பதை மறந்து, மக்கள் விக்கிரக வழிபாடு செய்வதை எண்ணி, எண்ணிப் பெருமானார் அவர்கள் வருந்துவார்கள்.
அரேபியா முழுவதும் அக்காலத்தில், விக்கிரக ஆராதனை அதிகமாகப் பரவியிருந்தது. கஃபாவில் மட்டுமே 360 விக்கிரகங்கள் நிறைந்திருந்தன.
பெருமானார் அவர்கள் ஒருநாளும் விக்கிரகங்களுக்குத் தலை தாழ்த்தியது இல்லை. தவிர, அரேபியர்களிடம் இருந்த அறிவற்ற சடங்குகள், விழாக்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதும் இல்லை.
தங்கள் நாட்டின் அநாகரீகமும், உலகின் கேவல நிலைமையும் பெருமானார் அவர்கள் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருந்தன. பெண்களின் தாழ்ந்த நிலையும், பச்சிளம் குழந்தைகளை உயிருடன் புதைத்து விடும் பரிதாபமான செய்கையும் பெருமானாருக்கு மனவேதனையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
இவற்றை எல்லாம் எவ்வாறு நீக்கலாம் எனத் தனித்திருந்து சிந்திப்பார்கள்.
தன்னந் தனியாக இருந்து, சிந்தனையில் ஆழ்ந்து இருப்பது பெருமானார் அவர்களுக்கு மிகவும் பிரியமாகும்.
சில சமயங்களில், நாயகம் அவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு, மக்காவுக்கு அருகிலுள்ள ‘ஹிரா என்னும் குகையில் போய் இருந்து விடுவார்கள்.
குகையிலிருந்தபடியே ஆண்டவனைப் பற்றிய சிந்தனையிலும், வணக்கத்திலும் ஈடுபட்டவாறே காலத்தைக் கழிப்பார்கள்.
அப்பொழுது, அங்கே, வழி தெரியாமல் வந்து சேருகின்ற பயணிகளுக்கு வழி காட்டுவதோடு, தேவையான உதவிகளையும் செய்வார்கள்.
தங்கள் நாட்டவரைக் கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு உயர்த்துமாறு ஆண்டவனிடம் கண்ணீர் மல்க, தலை தாழ்த்தி வேண்டிக் கொள்வார்கள்.
இவ்வாறு பெருமானார் அவர்கள் ஹிரா குகையிலிருந்து ஆண்டவனைத் தியானித்து வரும் பொழுது மறைபொருளான பல விஷயங்கள் புலப்பட்டன. அசரீரி வாக்குகள் வெளியாயின. கனவிலும் நனவிலும் பல விதத் தோற்றங்கள் தோன்றலாயின. கனவில் கண்டவை அனைத்தும் உண்மையாகவே ஆயின.