நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பகைவர்களின் பொறாமை

68. பகைவர்களின் பொறாமை

மக்காவில் துன்புற்றுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மதீனாவுக்குக் குடி பெயர்ந்து வந்து பெருமானார் அவர்களின் முன்னிலையில் சுதந்திரத்தோடு அமைதியாக இருந்தனர்.

ஆனால், அவர்களுக்குப் பகைவர்களே இல்லை என்று கூறி விட முடியாது.

குறைஷிகள் பொதுவாக முஸ்லிம்களிடமும், முக்கியமாகப் பெருமானார் அவர்களிடமும் அளவற்ற பகைமை கொண்டிருந்தார்கள்.

மதீனாவில் இஸ்லாம் வேரூன்றி நிலைபெற்று விட்டால், மக்காவிலிருந்து குடியேறிய முஸ்லிம்கள், தங்களைப் பழிக்குப் பழி வாங்கி விடுவார்களே என்ற அச்சம் குறைஷிகளுக்கு மேலும் பகைமையை உண்டாக்கியது.

மக்காவாசியான அபூஜஹிலின் சிற்றப்பா இப்னு முகைறா என்பவர் மரணத் தறுவாயில், விம்மி விம்மி அழுதார். அப்பொழுது குறைஷிகளின் தலைவர்கள் எல்லோரும் அங்கே கூடியிருந்தனர்.

தம் சிற்றப்பா அழுவதைக கண்ட அபூஜஹில், "சிறிய தந்தையே, மரணத்தைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"அருமை மகனே! மரணத்தைக் கண்டு நான் அழவில்லை முஹம்மதின் மதமானது எங்கும் பரவி, மக்காவானது அவர்கள் வசமாகி விடக் கூடாதே என்றுதான் நான் வருந்தி அழுகின்றேன்" என்றார் இப்னு முகைறா,

அப்பொழுது அங்கே இருந்த அபூஸூப்யான்[1] என்பவர், "நீர் பயப்படவேண்டாம். இஸ்லாமானது பரவுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம். அதற்கு நானே பொறுப்பானவன்!” என்றார்.

இத்தகைய கெட்ட எண்ணம் குறைஷிகளுக்கு இருக்கும் போது, முஸ்லிம்களை எவ்வாறு அமைதியோடு இருக்க விடுவார்கள்?


  1. அபூஸூப்யான் மக்கா வெற்றியின் போது இஸ்லாமாகிப் பிரபல ஸஹாபி (தோழராக) பின்னர் மாறினார்