நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பகைவர்கள் மீண்டும் தயாராகுதல்

81. பகைவர்கள் மீண்டும் தயாராகுதல்

அரபு நாட்டில் ஒரு கொலையின் காரணமாக, பல ஆண்டுகள் வரை நீடித்து நிற்கக் கூடிய சண்டை தோன்றிவிடும். அதனால் எத்தனையோ குடும்பங்கள் நாசமாகும்.

தோல்வியுற்றவர் பழி வாங்குதைத் தம் முக்கிய கடமையாகக் கருதுவார். பழி வாங்காமல் அவர் உயிர் வாழ்வது அரிது.

முன்னர், இப்னுல் ஹல்ரமி என்பவர் கொலையுண்ட போது அதற்குப் பழி வாங்குவதற்காக மக்கா நகரம் முழுவதுமே புறப்பட்டுச் சென்றது. அது ‘பத்ரு' யுத்தத்தில் வந்து முடிந்தது. ஆனால், அதில் உண்டான சேதமோ, அவர்களுக்குள் எரிந்து கொண்டிருந்த பகைத் தீயை மேலும் அதிகமாக வளர்த்து விட்டது.

மக்காவிலிருந்த குறைஷி பிரபுக்களில் முக்கியமானவர்கள் எல்லாம் அந்தச் சண்டையில் மாண்டுவிட்டதால், ஒவ்வொரு வீட்டிலும் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

பத்ருச் சண்டையின் போது, சரக்குகளை ஷாம் தேசத்துக்குக் கொண்டு சென்று அங்கு விற்பனை செய்து, அதிக இலாபத்தைச் சம்பாதித்து திரும்பிய குறைஷி வர்த்தகக் கூட்டத்தினர் அவரவருக்கு உரிய மூலதனத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, இலாபம் அனைத்தையும் பொது நிதியாக வைத்தனர்.

பத்ருச் சண்டையில் மாண்டவர்களின் இறுதிச் சடங்குகள் யாவும் முடிந்த பிறகு, குறைஷிகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஆயத்தமாயினர்.

குறைஷிகளில் முக்கியமானவர்கள் சிலரும், அபூஜஹிலுடைய மகன் இக்ரிமாவும், பத்ருப் போரில் தங்களுடைய நெருங்கிய உறவினர்களை இழந்திருப்பவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு அபூஸூப்யானிடம் தூது சென்றனர்.

அவரிடம், “முஹம்மது நம் இனத்தவரைக் கருவறுத்து விட்டார். ஆகவே, பழி வாங்குவதற்கு இதுதான் சந்தர்ப்பம், வியாபாரத்தில் கிடைத்த இலாபத் தொகையை இதற்குச் செலவு செய்ய வேண்டும் என்று நாங்கள் அபிப்ராயப்படுகிறோம்” என்று சொன்னார்கள்.

அபூஸூப்யானும் அவர்களின் கருத்தை மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.

முஸ்லிம்களும் பலம் வாய்ந்தவர்கள்தாம் என்பதைப் பத்ருப் போரின் போது குறைஷிகள் நன்கறிந்தார்கள். ஆகையால், தகுந்த ஆயத்தத்தோடு போய்த் தாக்க வேண்டும் என்று கருதி, வேண்டிய ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்தார்கள். குறைஷிகளில் பிரபலமான இரண்டு கவிஞர்களைக் கொண்டு அரபியர்களின் ஊக்கத்தைக் கிளப்பி விடக் கருதி, சுற்றுப்புறங்களுக்கு அவர்களை அனுப்பி, கவிதைகளால் மக்களைத் தூண்டச் செய்தனர்.

அக்காலத்தில், போர் வீரர்களைத் தூண்டுவதற்காகப் பெண்களும் போர்க்களத்துக்குப் போவது உண்டு. போர் முனைக்குப் பெண்கள் வந்து விட்டால், எங்கே தங்களைக் கேவலமாக எண்ணி விடுவார்களோ என்று கருதி, அரபி வீரர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் போர் புரிவார்கள்.

மக்காவில் தங்கள் மக்களை இழந்திருந்த பெண்கள் பலர், பழிவாங்கிய பின்னரே, அமைதியுடன் இருப்பது எனச் சபதம் மேற்கொண்டு, போர் வீரர்களோடு போர்க்களத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

பெருமானார் அவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ் அவர்கள் முஸ்லிமாகி, மக்காவிலே இருந்தார்கள். ஆகவே, மக்காவில் நிகழும் செய்திகளை எல்லாம் அவ்வப்போது விவரமாக எழுதி, ஒரு தூதுவர் மூலமாகப் பெருமானார் அவர்களுக்கு அனுப்பினார்கள்.

பெருமானார் அவர்கள், செய்தியை அறிந்ததும் ஹிஜ்ரி மூன்றாவது வருடம், ஷவ்வால் மாதத்தில், குறைஷிகளின் வருகையை அறிந்து வருமாறு இரண்டு உளவாளிகளை அனுப்பினார்கள். அவர்கள் போய் வந்து, ‘குறைஷிகள் ஏராளமான படையுடன் மதீனாவுக்கு அருகில் வந்து விட்டதாக' அறிவித்தனர். படைகளின் எண்ணிக்கையையும் அறிந்து வந்து தெரிவித்தார்கள்.

குறைஷிகளின் படையெடுப்பு நெருங்கியதை அறிந்த முஸ்லிம்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.

எதிரிகளின் வருகையைக் கண்காணிப்பதற்காகப் பள்ளிவாசலின் வாயிலில் ஆயுத பாணிகளாக இருவர் காத்துக் கொண்டிருந்தனர்.