நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பலமான எதிரி ஒருவர் மாண்டார்.

110. பலமான எதிரி ஒருவர் மாண்டார்

குறைஷிகளின் பிரபலமான தளபதிகளான அபூ ஸூப்யான், காலித் இப்னு வலித், அம்ருப்னுல் ஆஸ், ஸிரரர் இப்னுல் கத்தாப், ஸூபைரா ஆகிய ஐவரும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் தலைமை ஏற்றுப் போர் புரிந்தார்கள்.

அவர்களால் அகழைக் கடக்க இயலவில்லை. படைகளை எல்லாம் ஒரே பக்கமாகத் திரட்டி, அகழில் அகலக் குறைவான பகுதியைத் தாக்கி, அதைக் கடந்து, முஸ்லிம்களுடன் சண்டை செய்வது எனத் தீர்மானித்தார்கள்.

அரபி தேசத்தில் பிரபல போர் வீரர்களான நெளபல், ஹுபைரா, அம்ரு, லிரார் ஆகிய நால்வரும் குதிரைகளின் மீது இருந்து அகழைத் தாண்டி விட்டனர். அவர்களில் அம்ரு இப்னு அப்தூத் மிகவும் பிரபலமானவர். அவரை அரபி தேசத்தார் ஆயிரம் குதிரை வீரர்களுக்கு சமானமாகக் கருதியிருந்தார்கள்.

முன்னர், பத்ருச் சண்டையில் காயம் அடைந்து, மக்காவுக்கு திரும்பிப் போகும் போது 'முஸ்லிம்களைப் பழி வாங்கும் வரை, தம் தலையில் எண்ணெய் தடவுவதில்லை' எனச் சபதம் செய்திருந்தார். அவருக்கு வயது அப்போது தொண்ணூறு. அத்தகையவர் எல்லோர்க்கும் முன்னே சென்று, “என்னுடன் சண்டை செய்வதற்கு யாராவது முன் வருவார்களா?" என்று கூறினார்.

“நான் வருகிறேன்” என்றார்கள் அலீ.

ஆனால், அவர்கள் போவதைப் பெருமானார் தடுத்து விட்டார்கள்.

முன்போலவே அம்ரு இரண்டாவது முறையும் கூவினார்.

அலீ அவர்களைத் தவிர வேறு எவரும் பதில் அளிக்கவில்லை.

மூன்றாவது முறையும் அம்ரு கூவினார்.

அப்போது பெருமானார் அவர்கள், அலீ அவர்களுக்கு விடை கொடுத்து, தங்கள் கையிலிருந்த வாளையும் கொடுத்துத் தலைப்பாகையையும் கட்டி விட்டார்கள்.

உலகில் எவரேனும் மூன்று கோரிக்கைகளைத் தம்மிடம் வேண்டிக் கொண்டால், அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றி வைப்பதாக அம்ரு முன்னர் ஒருமுறை வாக்களித்திருந்தார். அந்த வாக்குறுதி பற்றி அம்ருக்கும், அலி அவர்களுக்கும் உரையாடல் நிகழ்ந்தது.

“நீர் இஸ்லாத்தைத் தழுவுமாறு, உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அலீ அவர்கள். “அது இயலாத காரியம்” எனப் பதில் அளித்தார் அம்ரு.

“சண்டையிலிருந்து திரும்பிப் போய்விடும்” என்றார் அலி அவர்கள்.

“குறைஷிப் பெண்களிடமிருந்து ஏளனச் சொற்களைத் கேட்க முடியாது” என்று பதில் கூறினார் அம்ரு.

“என்னுடன் சண்டை செய்ய வாரும்” என்றார் அலி அவர்கள்.

அதைக் கேட்டதும் அம்ரு சிரித்துக் கொண்டே, “இந்த வானத்தின் கீழ், இத்தகைய கோரிக்கையை என்னிடம் எவரேனும் விடுப்பார்கள் என்று நான் எண்ணவே இல்லை” என்றார்.

ஹலரத் அலிக்குக் குதிரை கிடையாததால், தாம் மட்டும் குதிரையின் மீது இருந்து கொண்டு அவர்களுடன் சண்டையிடுவது தம் கெளரவத்துக்கு இழுக்கு என்று எண்ணிக் குதிரையை விட்டுக் கீழே இறங்கி, வாளினால் முதலாவது குதிரையின் காலை வெட்டினார் அம்ரு.

அதன் பின், அவர்களுடைய பெயர் என்னவென்று கேட்டார்.

அலி அவர்கள், தங்கள் பெயரைக் கூறினார்கள். “உம்முடன் சண்டை செய்ய எனக்கு விருப்பம் இல்லை” என்றார் அம்ரு.

“நான் உம்மோடு சண்டை செய்ய விரும்புகிறேன்” என்றார்கள் அலி.

அதைக் கேட்டதும் அம்ருவுக்குக் கோபம் தாளவில்லை. வாளை உருவி, அவர்களுக்கு நேராக வீசினார்.

தங்களுடைய கேடயத்தினால், அலி அவர்கள் அதைத் தடுத்தார்கள். ஆனால், அவ்வாள் கேடயத்தையும் உடைத்துக்கொண்டு அவர்கள் நெற்றியில் பட்டது. அதனால் சிறு காயம் உண்டாயிற்று. அந்தத் தாக்குதலை அடுத்து, தங்கள் வாளை அம்ரு மீது வீசவே, அது அவருடைய உடலில் கீழே இறங்கிவிட்டது. உடனே அலி அவர்கள் “அல்லாஹூ அக்பர்” என முழங்கினார்கள். அம்ரு திடீரென்று சாய்ந்து விட்டார்.

அதைக் கண்டதும் குறைஷி வீரர்கள் எல்லோரும் அலி அவர்களைச் சூழ்ந்து தாக்கினார்கள். ஆனால், ஒருவர் பின் ஒருவராக, அலியின் வாளுக்கு அவர்கள் இரையானார்கள்.

அதன் பின்னர், குறைஷிகள் முஸ்லிம்கள் இருக்கும் இடத்தைந் நோக்கிக் கற்களையும் அம்புகளையும் விடாமல் எறிந்து கொண்டிருந்தார்கள்.