நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பழி வாங்கும் எண்ணம் இல்லை

35. பழி வாங்கும் எண்ணம் இல்லை

குறைஷிகளின் தூதர்கள் அபீசீனியாவிலிருந்து தங்கள் எண்ணம் தோல்வியுற்றுத் திரும்பி வந்த செய்தியை அறிந்த குறைஷிகள் மிகவும் கோபம் அடைந்தனர்.

பெருமானார் அவர்களுக்கு முன்னிலும் அதிகமாகத் தொல்லையும், துன்பமும் கொடுக்கத் தொடங்கினர். அதனால் பெருமானார் அவர்களுடைய ஊக்கம் சிறிதும் தளரவில்லை.

பெருமானார் அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா மாவீரர்; வேட்டையாடுவதில் விருப்பம் உடையவர். விடியற்காலையில் வில்லை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டுப் போய் மாலையில் திரும்புவார்.

அவர் குறைஷிகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர்களுடைய நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

அவரோ இஸ்லாத்தை தழுவவில்லை. ஆனாலும் பெருமானார் அவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் வேட்டைக்குப் போயிருந்தார். அப்பொழுது, பெருமானார் அவர்களின் பகைவன்; குறைஷித் தலைவர்களின் ஒருவன், இஸ்லாத்தை வேரோடு ஒழிப்பதே தன்னுடைய நோக்கமாகக் கொண்டவன், பெருமானார் அவர்களின் தலையில் கல்லால் அடித்துக் காயப்படுத்தி விட்டான்.

அந்தக் கொடியவனின் செயலை, வேட்டையிலிருந்து திரும்பி வந்த ஹம்ஸா அவர்கள் அறிந்ததும், அடங்காக் கோபத்தோடு, அவனைத் தேடிப் போனார்.  அவனோ ஒர் இடத்தில் உற்சாகமாய், கேளிக்கையில் ஈடுபட்டிருந்தான். உடனே அவன் மீது அம்பை எய்து அவன் தலையைக் காயப்படுத்தி விட்டார்.

அதன் பின்னர்,உடனே கஃபாவுக்குப் போய், பெருமானார் அவர்களைக் கண்டு, “முஹம்மதே! கவலைப்படாதீர்! உம்மைத் தாக்கியவனைப் பழி வாங்கி விட்டேன்” என்றார்.

“எப்படி?” என்று கேட்டார்கள் பெருமானார் அவர்கள்.

“அம்பு எய்து, அந்த மூடனின் தலையை உடைத்து விட்டேன்” என்றார் ஹம்ஸா,

“என் அருமைச் சிறிய தந்தையே! இஸ்லாத்திற்கு விரோதமாயிருப்பவர்களைப் பழி வாங்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. அவர்களைத் துன்புறுத்துவதிலும் எனக்குப் பிரியம் இல்லை. ஆனால் நீங்கள் இஸ்லாத்தில் சேர்வதுதான் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்” என்று பெருமானார் அவர்கள் கூறினார்கள்.

உடனே ஹம்லா அவர்கள், “அதே நோக்கத்தோடுதான் நான் இங்கே வந்தேன்” என்று கூறி, கலிமா ஒதி, இஸ்லாத்தில் சேர்ந்தார்கள்.