நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/புத்துணர்ச்சி பெற்றவர்

47. புத்துணர்ச்சி பெற்றவர்

வழக்கம் போல் குறைஷிகள் பெருமானார் அவர்களின் போதனைகளைத் தடுத்தும் எதிர்த்தும் வந்தார்கள்.

பெருமானார் அவர்களோ இஸ்லாத்தைப் பரப்புவதில் சிறிதும் தளரவில்லை.

இப்படி இருக்கும்போது, மக்காவின் சுற்றுப்புறத்திலுள்ள ஒர் ஊரிலிருந்து துபைலுப்னு அமர் என்னும் பிரபலமான தலைவர் ஏதோ அலுவலாக மக்காவுக்கு வந்தார். மக்காவிலுள்ள குறைஷிப் பிரமுகர்கள் பலரும் சென்று, அவரை மிகுந்த ஆடம்பரத்தோடு வரவேற்று உபசரித்தனர். அதன்பின் அவரோடு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், இஸ்லாத்தைப் பற்றியும் அதன் நபிகளைப் பற்றியும் பேச்சு எழுந்தது.

மக்கா பிரமுகர்கள் பெருமானார் அவர்களைப் பற்றி துபைலிடம் நிந்தனைகளைக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, “அவர் எங்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறார். நம்முடைய மதத்தையும் உலக வாழ்க்கையையும் அவமதிக்கிறார். நம்முடைய கூட்டத்தாரிடையே பிரிவினையை உண்டாக்கி விட்டார். அவருடைய பேச்சை யாராவது ஒருவர் கேட்பாரானால், அவர் உடனே அவருடனேயே சேர்ந்து விடுகிறார். அதன் பின்னர், தம்முடைய தாய், தந்தை, உறவினர் முதலியோரின் சொற்களை மதிப்பதே இல்லை. அப்படி அவருடைய பேச்சில் என்னதான் கவர்ச்சி இருக்கிறதோ, தெரியவில்லை. அவருடைய பேச்சை ஒருவரும் கேளாமல் இருக்கக் கடவுள்தான் துணை புரிய வேண்டும்” என்று அடுக்கடுக்காகக் கூறியதோடு, பெருமானார் அவர்களிடம் வெறுப்பு உண்டாகும்படி எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்கள்.

குறைஷிகள் கூறிய கோள்களை எல்லாம் கேட்ட துபைல், “இத்தகைய அபாயத்தை முன் கூட்டியே நீங்கள் எனக்குக் கூறியதற்காக என்னுடைய நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட மனிதருடைய முகத்தைக் காணவே நான் விரும்ப மாட்டேன்” என்று கூறி விட்டு கொஞ்சம் பஞ்சு கொண்டு வருமாறு கூறினார்.

பெருமானார் அவர்கள் போதனை செய்து கொண்டிருக்கும் வழியாகத் தற்செயலாக, தாம் போக நேரிடுமானால், அந்தப் போதனைகள் தம் காதுகளில் விழாதபடி, பஞ்சைக் காதில் அடைத்துக் கொள்ளக் கருதினார் துபைல்.

அடுத்த மூன்றாவது நாள், பெருமானார் அவர்கள் ஓர் இடத்தில், ஒதித் தொழுது கொண்டிருந்தார்கள். தற்செயலாக அந்த வழியாக துபைல் சென்றார். ஒதுவதைக் கேட்டதும் பஞ்சை எடுத்துக் காதுகளில் அடைத்துக் கொள்ளக் கருதினார். அதற்குள் வேத வாக்கியங்கள் சில அவருடைய செவிகளில் புகுந்து விட்டன.

பெருமானார் அவர்கள் தொழுது முடித்ததும், யாரையும் கவனியாமல் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

துபைலுக்குப் புத்துணர்ச்சி உண்டாயிற்று. அவருடைய நிலைமை மாறி விட்டது. எதுவும் பேசாமல், பெருமானார் அவர்களின் பின்னே ஓடினார். பெருமானார் அவர்கள் அப்பொழுதுதான் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

கதவைத் தட்டினார் துபைல், பெருமானார் அவர்கள் வந்து கதவைத் திறந்தார்கள். செல்வமும், கெளரவமும் வாய்ந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த துபைல் கண்களில் நீர் பெருக, உள்ளம் நெகிழ, பெருமானார் அவர்களின் முன்னே மண்டியிட்டு, “ நான் தங்களின் தொண்டன்” என்று கூறினார். சில நாட்களுக்கு முன்னர், பெருமானார் அவர்களைக் காண விரும்பாதவர், சொற்களைக் கேட்க மறுத்தவர், அத்தகைய துபைலின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது!

துபைல் இஸ்லாத்தில் சேர்ந்தது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். அவருடைய தூண்டுதலால் பலரும் இஸ்லாத்தில் சேர்ந்தனர்.