நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பெருமானார் அவர்கள் கூறிய அறிவுரை

185. பெருமானார் அவர்கள் கூறிய அறிவுரை

முன்பு முஸ்லிம் மதப் பிரச்சாரகர்களுக்கு அரபிக் கூட்டத்தார் இடையூறு உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்யச் சென்ற பல பிரச்சாரகர்கள் அரேபியர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மக்காவை வெற்றி கொண்ட பின், அந்தப் பயமானது அறவே நீங்கி விட்டது. அதன் பின், பெருமானார் அவர்கள் அரேபியாவின் பல பகுதிகளுக்கும் இஸ்லாமியப் பிரச்சாரகர்களை அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களைப் பெருமானார் அவர்கள் சோதித்துத் தேர்வு செய்த பிறகே அனுப்புவார்கள்.

திருக்குர்ஆனை நன்கு மனப்பாடம் செய்தவர்களையே பிரச்சாரகர் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும்படி செய்வார்கள்.

பெருமானார் அவர்கள் ஒரு சமயம் பிரச்சாரர்களை அனுப்ப எண்ணிய போது, அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துத் திருக்குர்ஆனை ஓதும்படிச் சொல்லிக் கேட்டார்கள்.

அவர்களில் இளைஞர் ஒருவர் இருந்தார். அவர் அருகில் பெருமானார் சென்று, “உமக்கு எவை நினைவில் இருக்கின்றன?” என்று கேட்டார்கள்.

அவர் “எனக்கு ஸுரத்துல் பகராவும் மற்றும் இன்னின்ன ஸுராக்களும் மனப்பாடம் உண்டு” என்றார்

உடனே பெருமானார் அவர்கள், “அப்படியானால், இவர்கள் எல்லோருக்கும் நீரே தலைமை வகியும்” என்றார்கள்.

முஸ்லிம் பிரச்சாரகர்கள் அனைவரும் இஸ்லாம் மத சம்பந்தமான நெறிமுறைகளை நன்கு அறிந்தவர்கள். பெருமானாரோடு அவர்கள் இரவும், பகலும் இருந்து இஸ்லாமிய நீதி முறைகளை நன்கு தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும், செயலும், பெருமானார் அவர்களைப் பின்பற்றியதாகவே இருக்கும்.

ஏமன் மாகாணத்தில் இஸ்லாத்தைப் பற்றிய போதனை செய்ய முஆதுப்னு ஜபல், அபூ மூஸல் அஷ்அரீ ஆகிய இருவரையும் பெருமானார் அனுப்பி வைத்தார்கள்.

அவர்களை அனுப்பு முன் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய முறைகளைப் பெருமானார் அவர்கள் போதித்தார்கள்.

பெருமானார் அவர்கள், அவர்களுக்குச் செய்த போதனையானது, இஸ்லாமியப் பிரச்சாரத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.

பெருமானார் அவர்கள் கூறியவை: “நீங்கள் சாந்தமாகப் பணி செய்ய வேண்டும். பலாத்காரம் செய்யக் கூடாது. மக்களுக்குச் சிறந்த கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்; அவர்களுக்கு வெறுப்பு உண்டாகுமாறு நடக்கக் கூடாது. நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். வேறு மதத்தவர்களையும் நீங்கள் அங்கே சந்திக்கக் கூடும். அவர்களைக் காண்பீர்களானால், முதலாவதாக, ஆண்டவன் ஒருவன் என்பதையும், நான் அவனுடைய தூதன் என்பதையும், நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்கள் அவற்றை ஒப்புக் கொண்டால், “இரவிலும் பகலிலும் ஐந்து நேரத் தொழுகையை ஆண்டவன் உங்கள் மீது கடமையாக்கி இருக்கிறான்” என்று கூறுங்கள். அவர்கள் அதை அங்கீகரித்த பின், “தருமம் செய்ய வேண்டியது உங்கள் மீது கடமையாயிருக்கும். உங்களில் செல்வர்களிடமிருந்து நிதி வசூலித்து, ஏழைகளுக்குக் கொடுக்கப்படும்” என்று சொல்லுங்கள். எவரையும் கொடுமைப் படுத்தாதீர்கள். ஏனெனில் கொடுமைப் படுத்தப்பட்டோர் பிரார்த்தனைக்கும், ஆண்டவனுக்கும் மத்தியில் திரை ஒன்றும் இல்லை.”