நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/யூதர்களின் தோல்வி
முஸ்லிம் படைகள் செல்லும் வழியில், ரஜீஅ என்னும் இடத்தில், தங்கள் பொருட்களையும் கூடாரங்களையும் பெண்களையும் இறக்கி விட்டனர்.
அந்த இடமானது, கத்பான் கூட்டத்தார் இருக்கும் இடத்துக்கும், கைபருக்கும் மத்தியில் இருந்தது.
படைகள் எல்லாம் கைபரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன.
அதை அறிந்த கத்பான் கூட்டத்தார் ஆயுதங்கள் தாங்கி, கைபரை நோக்கிப் புறப்பட்டாகள். ஆனால், சிறிது தூரம் சென்றதும், தங்கள் வீடுகள் எல்லாம் பாதுகாப்பற்று இருப்பதைக் கருதி, உடனே பின் வாங்கி ஊருக்குத் திரும்பி விட்டார்கள்.
கைபரில் ஆறு கோட்டைகள் இருந்தன. அவற்றில் இருபதினாயிரம் போர் வீரர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கோட்டைகளில் மிகவும் உறுதியும், பாதுகாப்பும் உள்ளது அல் கமூஸ் என்னும் கோட்டையே ஆகும்.
அரபு நாட்டின் திறமையான வீரர் மர்ஹப் என்பவர் அந்தக் கோட்டைக்குத் தளபதியாக இருந்தார்.
முஸ்லிம் படை, கைபருக்கு அருகிலுள்ள ஸஹ்பா என்னும் இடத்தை அடைந்தது. மாலை நேரம் ஆகிவிட்டபடியால், அங்கேயே தொழுதார்கள்.
பிறகு அவ்விடத்தை விட்டு புறப்பட்டுக் கைபரை நெருங்கியதும், இரவு நேரமாகிவிட்டது. கைபரிலுள்ள கட்டடங்கள் யாவும், இருளில் படையின் பார்வைக்கு நன்கு புலப்பட்டன.
முன்னேறிச் செல்லாமல், அவ்விடத்திலேயே நின்று கொள்ளுமாறு பெருமானார் அவர்கள் படைக்குக் கட்டளை இட்டார்கள்.
அதன்பின், “ஆண்டவனே, நாங்கள் இந்த நகரத்தினுடையவும், நகர வாசிகளுடையவும், இன்னும் இந்த நகரத்திலுள்ள பொருள்களுடையவும் நன்மையையே உன்னிடத்தில் வேண்டுகிறோம். இன்னும், இவை எல்லாவற்றின் தீங்கை விலக்கி, உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்” எனப் பெருமானார் அவர்கள் வேண்டுதல் செய்தார்கள்.
பெருமானார் அவர்கள் ஒவ்வொரு ஊருக்குள் நுழையும் முன்பு இவ்வாறு பிரார்த்தனை செய்வது வழக்கமாயிருந்தது.
இரவு நேரத்தில் பெருமானார், அவர்கள் பகைவர்களைத் தாக்குவது இல்லை; ஆதலால், அன்று இரவு அங்கே தங்கிவிட்டுக் காலையில் கைபருக்குள் நுழைந்தார்கள்.
யூதர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பாதுகாப்பான ஒரு கோட்டையிலும், தானியங்களையும், சண்டைக்கு வேண்டிய தளவாடங்களையும் ஒரு கோட்டையிலும், படைகளை இரண்டு கோட்டைகளிலும் வைத்திருந்தார்கள்.
அதிகாலையில், யூதர்களின் கோட்டைகளைத் தாக்கினார்கள். அவர்களுடைய கோட்டைகள் ஒவ்வொன்றாக முஸ்லிம்கள் வசமாயின. இருபது நாட்கள் மிக உக்கிரமாக முற்றுகையிட்டதின் பின்னர் வெற்றி பெற முடிந்தது.
யூதர்கள் உறுதியான கோட்டைக்குள் இருபதினாயிரம் வீரர்கள் இருந்தும் அவர்கள் தோற்று விட்டனர். அதற்குக் காரணம் என்ன என்பதே கேள்வி.
தாங்கள் கோட்டைக்குள் இருப்பதால், முஸ்லிம்களால் தங்களை எதுவும் செய்ய இயலாது என மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள் யூதர்கள்.
முஸ்லிம்களின் திடீர்த் தாக்குதலாலும், கோட்டைக்குள் இருந்து கொண்டே சண்டையிட வேண்டியிருந்ததாலும், தண்ணீர்த் தட்டுப்பட்டாலும் யூதர்கள் திண்டாட வேண்டியதாயிற்று.
கத்பான் கூட்டத்தாரின் வெளி உதவி எதிர்பார்த்தபடி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. யூதர்களிடையேயும் ஒற்றுமை நிலவவில்லை. தங்கள் ஆட்களையே காட்டிக் கொடுக்க அவர்கள் தயங்கவில்லை.
இந்தச் சண்டையில் யூதர்கள் தொண்ணூற்று மூன்று பேர்களும், முஸ்லிம்கள் பதினைந்து பேர்களும் உயிர் துறந்தனர்.
இந்தச் சண்டையில், ஆயுதங்களும், ஆபரணங்களும், கால் நடைகளும், தோட்டங்களும், நிலங்களும் முஸ்லிம்களுக்கு ஏராளமாகக் கிடைத்தன.
முஸ்லிம்கள் அடைந்த வெற்றிக்குப்பின், “நாட்டைத் தங்களிடமே விட்டு விடுமாறும், ஆண்டுதோறும் விளைபொருட்களில் பாதியைத் தந்து விடுவதாகவும்” பெருமானார் அவர்களிடம் வந்து, யூதர்கள் வேண்டிக் கொண்டனர். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.