நமக்கு நாமே உதவி/அறிவா! உறவா?!



1
அறிவா! உறவா?!

நமக்கு நாமே உதவி! நம்பிக்கையான விஷயம். ஆமாம். தன்னம்பிக்கையின் திடமான பகுதி இது.

வாழ்க்கைத் தொடருக்குள் வந்து போகும் உறவல்ல இது வந்து, வாழ்ந்து, வளர்ந்து, வாழ வைத்துக் கொண்டிருக்கும் வளமான உயிர்மை இது. பெருமை இது!

தனியாகப் பிறந்து வந்திருக்கிறோம். இது இயற்கையின் இயல்பான தத்துவம்.

தனித்தனியாக வந்தவர்கள், அணி அணியாக சேர்ந்து வாழக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இது செயற்கை தந்த மகத்துவம்

இயற்கையும் செயற்கையும் கலந்த, இதமான கலவையின் பதமான இழுவைதான் நாம் வாழும் வாழ்க்கை.

நாம் சேர்ந்து வாழத்தான் செய்திருக்கிறோமே தவிர, செழிப்போடு வாழ உதவக் கற்றுக்கொண்டிருக்கிறோமா என்றால், இதில் ஒரு பகுதிதான் உண்மை.

மறுபகுதி மனக் கசப்பான உண்மை. தர்மம் இல்லாத மர்மம் கலந்த மனிதத்தனங்களின் பொய்மை வேஷங்கள்.

உதவி வரைத்தன்று உதவி...

கைமாறு கருதாத உதவி, கடமை நிறைந்த உதவி, கருணை மிகுந்த உதவி, என்பதெல்லாம் இலக்கிய நயமானவை, நடைமுறைக்கு நான்கடி தூரம் தள்ளியே நிற்பவை.

யாருக்கு உதவி? எப்படி உதவி? எப்பொழுது உதவி? வேண்டியவர்களுக்கு மட்டுமே உதவி...

நாம் உதவினால் நமக்கென்ன லாபம் என்று கணக்குப் பார்த்துக் கணிக்கின்ற உதவி,

பணத்திற்காக, பதவிக்காக உடல் இன்பத்திற்காக முன்வந்து செய்கின்ற உதவி.

பரிசு என்ற போர்வையில் இலஞ்சம், வஞ்சம்.

இப்படியெல்லாம் ‘உதவிகள்’ உதைபட்டு அலைகின்ற ‘உணர்ச்சி பூர்வமான’ நமது வாழ்க்கையில். நமக்கு யார் வந்து உதவுவார்கள்? உற்சாகப் படுத்துவார்கள்? உயர்வைக் காட்டுவார்கள்?

யாருமே இல்லை!

தாழ்ந்தால் ஏசவும், வாழ்ந்தால் முட்டாள்தனமாகப் பேசவும் கற்றுக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்.

கஷ்டப்படும் காலத்தில் உதவுவது போல நடித்துவிட்டு, முன்னேறும் நேரத்தில் முடிச்சுக்களைப் போட்டு முடக்கிவிடுகின்ற தந்திர நரிகளின் தனிக் கவனிப்பிலே நாம் வாழ்கிறோம்.

நமது உயர்வில் சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள்தாம். நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிறர் நமக்கு உதவுவார்கள் என்று நம்புவது பேதமை.

பிறர் உதவினால் பெற்றுக் கொள்ளலாம். நன்றி சொல்லலாம்.

ஆனால், பிறர் நமக்கு உதவுவார்கள், உதவித்தான் ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை. மடமை நிறைந்த கொடுமை.

நம்மைச் சுற்றி வாழ்கின்ற மக்களெல்லாம் நமக்கு வழிகாட்டிகள். ஆமாம், வழிகாட்டி மரங்கள் இருப்பது போல

வழிகாட்டி மரமானது வழியைத்தான் காட்டும், துணைக்கு வராது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நாம் அப்படித்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு யார் உதவி செய்வார்கள் என்றால், அதற்கு ஒரே பதில் நாம்தான்.

‘தானே தனக்குத் தலைவனும், நட்டானும்!’ என்று ஒரு பாடல்.

’தன்னைத் தலையாகச் செய்வானுந்தான்.

“தானே தனக்குப் பெருமையும் சிறுமையும்”. இந்தப் பாடல் வரிகளை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நம் வயிற்றுப் பசிக்கு நாம்தான் சாப்பிட வேண்டும். பிறர் சாப்பிட்டால் நமக்கு எப்படி பசி அடங்கும்!

நமது நோய்க்கு நாம்தான் மருந்து சாப்பிட வேண்டும். பிறர் சாப்பிட்டால் என்ன பயன் கிடைக்கும்?

நமது முன்னேற்றத்திற்கு நாம்தான் உழைக் வேண்டும். பிறரை எதிர்பார்த்து என்ன பயன்?

மனிதனை மிருகங்களிலிருந்து பிரித்து, வேறுபடுத்தி, உயர்த்திக் காட்டுவது ஆறாவது அறிவு. அதுதான் பகுத்தறிவு.

ஆறாவது அறிவு உணரச் செய்வது மட்டுமல்ல. அனைத்தையும் அறிய உதவுகிறது. ஆய்ந்து செயல்பட உதவுகிறது. அருமையான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமல்ல, இந்த அகிலத்து சக்திகளை ஆக்ரமித்துக் கொள்ளவும், ஆட்டிப் படைக்கவும், அரிய யுக்திகளை வளர்த்துக் கொள்ளவும் ஆறாவது அறிவு உதவுகிறது.

‘இந்த அறிவுதான் நம்மை உயர்த்ததும், வேறு எந்த உறவும் அல்ல’ என்பதுதான் அறிவுள்ளவர்கள் தீர்மானித்து முடிவு செய்து, வாழ வேண்டிய விஷயமாகும்.

நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டுமானால், நாம்தான் நமக்கு உதவிக்கொள்ள வேண்டும்.

நாம்தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டு வழி நடத்திச் சென்றாக வேண்டும்.

நாம்தான் பல சோதனைகளில் ஆட்பட்டு, சோதனைக்குட்பட்டு, சாதனைகளைச் செய்தாக வேண்டும்.

எப்படி?