நமக்கு நாமே உதவி/தொழிலும் சிந்தனையும்



5
தொழிலும் சிந்தனையும்

புதிதாக வாங்கிய சைக்கிள் மீது, ஒருவன் முகத்தில் பெருமை பொங்க, கம்பீரமாக ஏறி அமர்ந்து, ஓட்டிக் கொண்டு சென்றான்.

சைக்கிளை ஓட்டும் வரை, சைக்கிளும் ஓடும்வரை, சைக்கிளும் அழகாக இருந்தது. சைக்கிள் ஒட்டுபவனையும் பார்க்க அழகாக இருந்தது.

உட்கார்ந்தபடி ஒட்டிய அவன், சைக்கிளை மிதிக்காமல் இருந்தான். சைக்கிள் நின்று விட்டது. அடுத்த நிலை என்ன? ஓடாத சைக்கிள் விழுந்து விட்டது. அது மட்டுந்தானா? அவனுந்தான்.

சைக்கிள் ஒட்டுவதில் தான் இந்த நிலைமை வருமா என்றால் இல்லை. தொழில் செய்யும் பொழுதும் தான். வாழ்க்கையிலுந்தான் இந்த நிலைமை இருக்கிறது.

ஓடாத நீர் குட்டையாகிறது. கடைசியில் சாக்கடையாகிறது. ஓடாத எந்திரம் துருப்பிடிக்கிறது. பிறகு ஓடாமலே ஓட்டையாகிப் பயனற்றுப் போகிறது.

மனித உடலும் அப்படித்தான் என்றால், அவன் செய்யும் தொழிலுக்கும் அதே கதிதான்!

‘தொடர்ந்து தொழிலை செய்து கொண்டே இரு. இல்லாவிடில், உன் தொழிலில் நஷடம் அடைந்து விடுவாய்.’

இதுதான் வியாபாரத்தின் நுணுக்கமாகும்.

எந்தத் தொழிலும் தொடங்கிய உடனேயே பிரபலமாகி விடாது. பெரும் லாபத்தைத் தந்து விடாது.

ஆரம்பத்தில் ஆயிரம் கஷடங்கள். அநேக சிக்கல்கள். அடிமேல் அடிகள். எதிர்பாராத பிரச்சினைகள். நல்லதும் கூட கெட்டதாகத் தெரியும். கெடுபிடிகள், ஏமாற்றங்கள், எதிர் தாக்குதல்கள். தொழிலில் எல்லாமே உண்டு. வருமானம் சும்மா வருமா?

தொழிலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறவர்களால் மட்டுமே தொழிலில் வெற்றி பெற முடியும்.

மக்கள் மனதிலே ஒரு நம்பிக்கையை ஊட்டும் வரை செய்யும் தொழிலைத் தொடர்ந்து தான் ஆக வேண்டும்.

எப்படி தொழிலில் வெற்றி பெறுவது?

கடுமையான உழைப்பின் மூலம் தான் வெற்றிபெற முடியும். எந்தப் பிரச்சினையையும் கடுமையாக எடுத்துக் கொள்வதால் அல்ல.

அதாவது துரும்பைத் தூணாக்கிக் கொண்டு பார்ப்பது. அற்ப விஷயத்தையும் அலசி அலசி பூதாகரமாக்குவது. இவைகள் மனதைக் கலங்கடித்து விடும்.

ஆகவே, கடுமையாக உழைத்தால் தொழிலில் மேன்மை கிடைக்கும். கடுமையாக காரியங்களை கருத்தில் கொண்டால், கஷ்டங்களே லாபமாகும். இன்பங்களே நஷ்டமாகிவிடும்.

இதனை எப்படி ஏற்பது? தீர்ப்பது?

வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும், அதை ஏற்கும் மனோபாவத்தில் தான் இருக்கிறது.

பெரிய புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் வருகின்ற நிகழ்ச்சிகளுக்கேற்ப மனதை ஒரு நிலைப்படுத்தி, அதனை சமாளிக்கும் திறம் படைத்தவர்களால்தான், நஷ்டத்தையும் லாபமாக்கிப் பார்க்க முடியும். லாபமாக்கிக் காட்டவும் முடியும்.

அதாவது ஏற்கும் மனோபாவம். சிக்கலாக்கும் மன வலிமை அல்ல.

தொழில் செய்பவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்வது நல்லது. அதாவது தொழில் அல்லது ஒரு வியாபாரத்தை விளையாட்டு என்றும் கூறலாம்.

வெறியூட்டும் போர் என்றும் கூறலாம். சில சமயங்களில் விளையாட்டுப் போர் என்று கூட நாம் கூறலாம்.

போர் என்றால் எதிரியை வீழ்த்தி வெல்லுதல். விளையாட்டு என்றால் எதிரியை வீழ்த்துவது போல் பாசாங்கு பண்ணி, போக்குக் காட்டி வெல்லுதல்.

தொழில் துறையில், போரிடுவது போல திட்டங்களைத் தீட்ட வேண்டும். விளையாட்டில் மேற்கொள்ளும் திறன் நுணுக்கங்களைப் போல, எதிரிகள் மேல் வெற்றி கொள்ளுதல் வேண்டும்.

போரில் பொறாமையும், விளையாட்டில் பொச்சரிப்பும் தோல்வியைத் தந்து விடும்.

தொழிலிலும் பொறாமையே வரக் கூடாது. எதிரி எப்படி சமாளிக்கிறான் என்று அலசிப் பார்க்கும் ஆராய்ச்சி மனப்பான்மை தான் வேண்டும். ஆகவே, விளையாட்டுப் போராக தொழிலை மேற்கொண்டால் அங்கே, வெற்றிதான் விளையுமே தவிர, தோல்வி தலைகாட்ட வாய்ப்பே இல்லை.

தொழிலுக்கு சோர்வும் சோம்பலும் பொல்லாத எதிரிகள் ஆவார்கள்.

எவ்வளவுக்கு நாம் உழைக்கிறோமோ அந்த அளவுக்கு தொழில் விருத்தியடைந்து விடும். வேறு வழியேயில்லை.

நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்ச்சிதான். வீட்டில் குப்பையைக் கிளறுகின்ற கோழியைப் பாருங்கள்.

அது குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் வரை அதற்கு ஏதாவது தின்னுவதற்குத் தீனி கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அது தன் கிளறலை நிறுத்துகிற பொழுது, கிடைக்கும் ஆதாயமும் நின்று போகிறது.

தொழிலும் அப்படித்தான். துணிவாக, தெளிவாக தொழிலில் ஈடுபடும் வரை ஆதாயம் இருக்கத்தான் உண்மையோடு ஒரு தொழிலை உருவாக்குவது மிகவும் கஷ்டமான காரியம் தான், அழிப்பதோ மிகவும் எளிது.

சட்டி பானை பண்ணுகிற தொழிலாளிக்கு ஆறு மாதம் வேலை. அவற்றை உடைக்கிற ஊதாரிக்கோ அரை நிமிடம் போதும்.

தொழிலை வளர்க்க விரும்புபவர்கள் அதைத் தொழிலாகக் கொள்ள வேண்டும். பொழுது போக்கு அம்சம் என்று கருதி விடக்கூடாது.

பொழுது போக்கிடத் தொழில் என்றால், இறுதியில் அழுது வடியத்தான் நிலைமை வரும்.

தொழில் என்பது தெய்வம்.
உழைப்பு என்பது மதம்.
திட்டம் என்பது ஆலயம்.
சுறுசுறுப்பு என்பது பக்தி
நாணயம் என்பது நியமங்கள்
முயற்சி என்பது வேதங்கள்

இப்படி எண்ணுகிறவன் தான் தொழிலில் சிறக்க முடியும்.

பிறரை நம்பித் தொழிலை ஆரம்பிப்பவன் பேதை, பிறரை நம்பித் தொழிலை விடுபவன் பைத்தியக்காரன். பிறர் வந்து தொழிலை முன்னேற்றுவார்கள் என்று நம்புபவன் கோமாளி.

தனது உழைப்பை நம்புகிறவன், தனது உழைப்பில் வாழ்கிறவன் தான் முன்னேற முடியும்.

ஒரு விளையாட்டு வீரன் பந்தாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். பந்தை எங்கு நின்று அடிப்பது, அந்தப் பந்து போய் எங்கு விழும்? அதை எதிராளி எப்படி ஆடுவான்? அதை எப்படி எடுத்தாடுவது என்பதாக, தனது மனதுக்குள்ளே ஒரு மனோ பார்வையை (Mental Visuvalization) அவன் மனதில் வைத்துக் கொண்டு தான் ஆடுவான். அப்படித்தான் ஆடவேண்டும்.

அப்படி அவன் விளையாடா விட்டால், அவன் சிறந்த விளையாட்டு வீரன் இல்லை. அவன் சாதாரண விளையாட்டுக்காரன் தான். அவன் ஆயிரம் பேர்களில் ஆயிரத் தொன்றாகத்தான் இருப்பான். ஆயிரத்தில் ஒருவனாக அவனால் வரமுடியாது.

அதே போல, தொழிலில் ஈடுபடுபவருக்கும் இந்த மனோ காட்சிகள் வேண்டும். முன்னதாகத் திட்டங்களும், திட்டங்களை செயல்படுத்தும் கட்டங்களும் தெரிந்தாக வேண்டும்.

வரப்போகும் காரியங்களைப் பற்றிய வரன் முறைகள் தெரிந்திருக்க வேண்டும்.

தொழில் செய்வது நமக்காக, நமது முன்னேற்றத்திற்காக, நமது நல்ல வாழ்வுக்காக.

நமக்கு நாமே தான் உதவி செய்து கொள்ள வேண்டும்.

எந்த வேலையையும் முதலில் மனதுக்குள் போட்டு அலசிவிட வேண்டும். மார்க்கங்களையும், வழிமுறைகளையும், தீர்க்கமாகப் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

செய்யப் போகும் செயல்முறைகளை ஒரு முறையாவது மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்ப்பதும், மாற்று முறை ஏதாவது வந்தால் அதையும் மாற்றுத் திட்டமாக வைத்துக் கொள்வதும் தொழிலுக்குரிய சிந்தனைகளாகும்.

தொழிலில் சுறுசுறுப்பாக விளங்குபவன் கஷ்டத்தைக் கூற மாட்டான். கண்ணீர் விட மாட்டான். காரணம் என்ன ஏனென்றால், அவனுக்குத் தான் நேரம் இருக்காதே!

ஏன் என்றால், தொழில் என்பது வாழ்க்கையின் சந்தோஷமாகும். சந்தோஷத்தை விரிவு படுத்திக் கொள்பவன் புத்திசாலி. புத்திசாலிதான் புகழ்பெற முடியும். அதற்கு அடிப்படை நமக்கு நாமே உதவிக் கொள்வது தான்.