நமக்கு நாமே உதவி/வாழ்வில் ஏற்றம் பெறுவோம்



11
வாழ்வில் ஏற்றம் பெறுவோம்

இதுவரை நாம் படித்த கருத்துக்களை நம்முடைய வாழ்வில் கடைபிடித்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வோம்.

காரியம் என்ன செய்தோம்! பூரிப்போடு சொல்லி மகிழ்கின்ற அளவுக்கு புதிதாக என்ன சாதித்தோம்? சோற்றுக்கு உழைத்ததும் - நாக்குப் போட்டியில் சுவைத்ததும் - வயிற்று உழைப்பிலே களைத்ததும், நோய்கள் நெருப்பிலே சளித்ததும் தான் நமது சாதனைகளாகத் தெரிகின்றன! புதிய உயிர்களை உற்பத்தி செய்வதையே பொழுதுபோக்காய் கொண்டு விட்ட காரியத்தையும் இடம் தேடி மடம்தேடி சுகம் தேடி! இளிச்சவாயர்களாக அலைந்ததையும். வாய்ப்பேச்சில் இன்பம்! வன்மொழியில் இன்பம்! வழியில் யாரைப் பார்த்தாலும் வக்கணையாய் வம்புப் பேச்சு. காக்கைக் கண்களால் கருடப் பார்வை பார்த்து, கால நேரத்தை அழித்த கதையெல்லாம் உண்டு!

எல்லோரும் ஒன்றை எண்ணிக் கொள்ள வேண்டும். நன்னெறி நூலை நமக்கு நல்கி, நல்ல புகழிற்கு

உரிய குமரகுருபர சுவாமிகள் என்பவர், கோடிட்டுக் காட்டிய குறிப்பொன்று, இவ்வாறு அமைகிறது. நீரில் குமிழியாய் இளமை இருக்கிறது. நீரில் திரளும் அலைகள் போல் செல்வம் இருக்கிறது.

நீரில் எழுதிய எழுத்து போல்தான் நிலவுகிற நமது வாழ்க்கை இருக்கிறது. நொடியில் ஒடிந்து, மறைந்து போகிற நூதனத் தன்மைதான் நமது வாழ்வமைப் பாய் விளங்குகிறது. நில்லாத வாழ்க்கை, மனிதர்க்கெல்லாம் நிலையாத வாழ்க்கை என்கிற இதுபோல் நினைவுகளை சற்று தூரம் எறிந்துவிட்டு, அணையாத ‘ஜோதியாக’ வாழ்வை ஏற்றிப் பார்க்க, உங்களை யெல்லாம் பெருமையுடன் அழைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் திறமை இருக்கிறது. உண்மை நிலை இதுதான்.

தமது திறமையை தகுதியுடன் வளர்த்துக் கொண்டு, தான் உயர்ந்து கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கும் தொண்டு செய்கிற சக்தியும் சாமர்த்தியமும் சமுதாயத்தில் பிறந்த எல்லோர்க்கும் உண்டு.

‘எப்பொழுதும் போய் விடுவோம்’ என்ற எண்ணத்தைத் தள்ளிவிட்டு, இருந்து என்ன புண்ணியம் என்ற கீழ் நினைவை கிள்ளிவிட்டு; இருக்கும் வரை சிறப்பாக வாழ வேண்டும் என்கிற வேட்கையை வளர்த்து விட்டு, நீங்கள் வளமோடு வாழ வேண்டும். வழியறிந்து உழைக்க வேண்டும். வள்ளல்களாகப் பிழைக்க வேண்டும். வானளாவிய இன்பத்தில் திளைக்க வேண்டும்.

அதற்காக நீங்கள் ஆர்வமுடன் பயணத்தைத் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். மண்ணுலகில் வந்து வாழ்ந்து மறைந்து போகிறவர்கள் மனிதர்கள்.

மண்ணுலகில் வாழ்கிற மக்களிடம் வந்து வாழப்போகிற மக்களிடம் நெஞ்சில் அமர்ந்து நிலையாக, நினைவாகக் கொஞ்சும் இடத்தில் கோலாகலமாய் இருந்து வாழ்கிற சாதனை படைத்தவர்களையே பூரிப்போடு அமரர் எனப் போற்றுகின்றனர். அத்தகைய அமரர் பேரினை எடுக்க வேண்டும்.

நீங்கள் ஆற்றலுள்ள மனிதர்களாய் பணியாற்றி, மக்கள் மனதிலே இடம் பெறுகிற அமரர்களாய் மாறி, திரளான புகழில் தேவர்களாய் விளங்கி, தேனான வாழ்வு வாழ வேண்டும் என்று எனது இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்! எல்லா நலமும் பெற்று ஏற்றமுடன் வாழ்கவே! வாழ்கவே!