நமச்சிவாயத்திருப்பதிகம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

திருஞானசம்பந்தர் பாடியது

மூன்றாந் திருமுறை

பண்- நட்டபாடை

(அஞ்செழுத்துண்மை)

பாடல்: 01 (காதலாகி)

தொகு
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது
நாத னாம நமச்சி வாயவே. (01)

பாடல்: 02 (நம்புவார்)

தொகு
நம்பு வார்நமர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்ப னாம நமச்சி வாயவே. (02)

பாடல்: 03 (நெக்கு)

தொகு
நெக்கு ளார்வ மிகப்பெரு கிநினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராய்த்தகு விப்பது
நக்க னாம நமச்சி வாயவே. (03)

பாடல்: 04 (இயமன்)

தொகு
இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயன னாம நமச்சி வாயவே. (04)

பாடல்: 05 (கொல்வாரேனுங்)

தொகு
கொல்வா ரேனுங் கணம்பல நன்மைகள்
இல்லாரேனு மியம்புவ ராயிடின்

்:எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்

நல்லார் நாம நமச்சி வாயவே. (05)

பாடல்: 06 (மந்தரம்மன)

தொகு
மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாம நமச்சி வாயவே. (06)

பாடல்: 07 (நரகமேழ்)

தொகு
நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயினு ருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரத னாம நமச்சி வாயவே. (07)

பாடல்:08 (இலங்கை)

தொகு
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செயதவ னுய்வகை
நலங்கொ ணாம நமச்சி வாயவே. (08)

பாடல்:09 (போதன்)

தொகு
போதன் போதன கண்ணனு மண்ணறன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகிய லந்தவர்
ஓது நாம நமச்சி வாயவே. (09)

பாடல்:10 (கஞ்சி)

தொகு
கஞ்சி மண்டையர் கையினுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுள் கண்ட னமச்சி வாயவே. (10)

பாடல்:11 (நந்தி)

தொகு
நந்தி நாம நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெல்லாம்
பந்த பாச மறுக்கவல் லார்களே. (11)

திருஞானசம்பந்தப்பெருமான் பாடிய நமச்சிவாயத்திருப்பதிகம் முற்றும்

பார்க்க

தொகு
திருஞானசம்பந்தரின் முதற்பதிகம்
திருநீற்றுப்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை
பஞ்சாக்கரத்திருப்பதிகம்
மாலை மாற்று