நம் நேரு/அத்தியாயம் 2

அத்தியாயம் 2.

காஷ்மீர்-இந்தியாவின் நந்தவனம். எழில்அரசி கொலுவிருக்கும் இன்பப்பூங்கா. இயற்கை அற்புத வர்ணங்களால் தன்னையே அலங்கரித்துக்கொண்டு மகிழும் அழகுநிலம். அதுதான் நேரு குடும்பத்தினரின் தாயகம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பதினெட்டாம் நூற்றாண்டின், ஆரம்பத்தில், காஷ்மீர பிராமணர்கள் சிலர் அழகு தவழும் மலைகளிலிருந்து இறங்கி வந்தார்கள். பசுமையும் வளமும் பரந்து கிடந்த சமநிலங்களிலே செல்வமும் புகழும் சேகரிக்கம் நோக்குடன் முன்னேறினார்கள். மேகாலய சாம்ராஜ்யம் அஸ்தமித்துக் கொண்டிருந்த காலம் அது. மன்னர் மன்னன் அவுரங்க சீபுக்குப் பிறகு பரூஸியார் என்பவன் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்தான். அப்போது தான் காஷ்மீரிகள் டில்லி நோக்கி வந்தார்கள்.

சமஸ்கிருதத்திலும் பெர்ஸிய மொழியிலும் சிறந்த கல்விமானக விளங்கிய ராஜ்கால் எனும் காஷ்மீரி முன்னரே பாக்ஸியாசின் கவனத்தைக் கவர்ந்திருந்தார். அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தான் மன்னனின் அழைப்புக்கு இணங்கி, டில்லி வந்து சேர்ந்தார்கள். ராஜ்கால் என்பார் மன்னனிடமிருந்து ஜாஹீரும் வீடும் இனாமாகப் பெற்றார். கால்வாய் ஒன்றின் கரையிலே அமைந்திருந்தது அந்த இடம். ‘நேஹர்’ என்றால் கால்வாய் எனப் பொருள்படுமாம். கால்வாய்க் கரை ஓரமாக வசித்த வீட்டார் என்பதைக் குறிப்பிட ராஜ்கால் பெயருடன் ‘நேஹரு’ என்பதும் கூடியதாம். ‘கால்’ என்கிற குடும்பப்பெயர் ‘கால்-நேரு’ என மாறியது. காலப்போக்கில் நேரு என்பதே குடும்பப் பெயராக நிலைத்துவிட்டது.

ஜவஹரின் முப்பாட்டனார் லஷ்மிநாராயண நேரு என்பவர் டில்லிச் சக்கரவர்த்தியின் அரசவையில் ‘சர்க்கார் கம்பெனி’ வக்கீலாகப் பதவி வகித்து வந்தாராம். 1857-ல் முதல் இந்தியப் புரட்சி நிகழ்வதற்குச் சிறிது காலம் முன்பு வரை, ‘டில்லிக் கொத்தவால்’ ஆகப் பணியாற்றிய கங்காதரநேரு என்பார் நம் நேருவின் பாட்டனார் ஆவர்.

இந்தியப் புரட்சி, நேரு குடும்பத்தினருக்கு டில்லி ராஜ்யத்துடன் இருந்த தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில், நேரு குடும்பத்தினரின் பத்திரங்களும் மதிப்பு மிக்க பொருள்களும் அழிந்துபோயின. நேரு குடும்பத்தார் டில்லியிலிருந்து ஆக்ரா நகருக்குக் குடியேற நேர்ந்தது.

ஆக்ரா நகரில்தான் ஜவஹர்லால் நேருவின் தந்தையார் பண்டித மோதிலால்நேரு 1861-ம் ஆண்டு மே மாதம் ஆறாம் நாளில் பிறந்தார். அதே நாளில்தான் இந்தி யாவின் அரும்பெரும் கவிஞராகிய ரவீந்திரநாத் தாகூரும் அவதரித்தார் என்பது குறிப்பிடத் தகுந்த விஷயம்தான்.

மோதிலால் நேரு பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே அவரது தந்தையார் காலமாகிவிட்டாராம். அத்னால் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு மோதிலாலின் பெரிய சகோதரர்கள் மீது படிந்தது. ஜவஹர்லாலின் ‘பெரிய பெரியப்பா] வனஸ்தர நேரு பிரிட்டிஷ் சர்க்காரின் நீதி இலாக்காவில் உத்தியோகம் ஏற்று, அடிக்கடி இடமாற்றங்கள் பெற்று வாழ்ந்து விட்டார். ஆகவே மோதிலால் தனது இரண்டாவது அண்ணா ஆகிய நந்தலால் நேருவின் கண்காணிப்பிலேயே வளரநேர்ந்தது.

இதனால் நேரு இந்திய சமாஸ்தான நிர்வாகப் பொறுப்பில் நல்ல பங்கு பெற்றுத் திகழ்ந்தவர் ராஜபுதனத்தில் உள்ள கெத்ரி சமஸ்தானத்தின் தின்வானாக அவர் பத்து வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு சட்டக்கல்வி பயின்றூ ஆக்ராவிலேயே வசித்து வக்கீல் தொழில் பார்த்து வந்தார். அவரே மோதிலாலுக்கு அண்ணனாய், தந்தையார், வாழ்வின் வழிகாட்டியாய் விளங்கினார்.

புதிதாக நிறுவப்பெற்ற ஹைக்கோர்ட்டுடன் நல்ல தொடர்பு கொண்டிருந்தார் நந்தலால். ஆக்ராலிருந்த ஹைக்கோர்ட் அலகாபாத்துக்கு மாற்றப்படவும் நேருவின் குடும்பத்தினரும் ஊர் மாற்றம் பெற்றனர். அலகாபாத்தையே ‘எங்கள் ஊர்’ என்று சொல்லும் வண்ணம் அங்கேயே நிலைத்துவிட்டனர்.

நந்தலால்நேரு உயர்தர நீதிமன்றத்தின் ’பெரிய வக்கீல்’ ஆகப் புகழ்பெற்று விட்டார். தாயாரின் செல்வப்பிள்ளையாக வளர்ந்த மோதிலால் இளம் பருவத்தில் பெர்ஸிய, அராபியமொழிகளை மாத்திரமே கற்றுத் தேர்ந்தார், அம்மொழிகளில் அவர் பெற்றிருந்த புலமை வயோதிகர்களையும் பிரமிக்க வைத்ததாம். பிறகு அவர் கான்பூரிலும், அலகாபாத்திலும் ஆங்கிலக்கல்வி பயின்று தேர்ந்தார். சிறுவயதில் படிப்பில் சிறப்புற்று விளங்கியது போலவே, கல்லூரி நாட்களில் குறும்புத்தனத்தில் பெரியவராக விளங்கினாராம் அவர். படிப்பில் காட்டிய ஆர்வத்தை விட அதிகமான உற்சாகத்தை மோதிலால் ஆடம்பர விளையாட்டுகளில் செலுத்தி வந்தாராம். மேல் நாட்டு நடை உடை பாவனைகள், மேல் நாட்டினரின் வாழ்க்கைமுறை இவைகளின் மீது அவருக்கு மோகம் ஏற்பட்டது. கல்கத்தா, பம்பாய் போன்ற பெரிய நகரங்களில்கூட அந்த நாகரிகம் சர்வசாதாரணமாகப் பரவி இருந்ததில்லை. அந்நாட்களிலேயே மோதிலால் மேலை நாகரிகத்தின் ரசிகராக மாறிவிட்டார். அவருடைய முரட்டு சுபாவமும், குறும்புத்தனமும் தலை தூக்கி நினறாலும், அவரது அறிவின் திறனையும் உணர்வின் கூர்மையையும் கண்டு கல்லூரியின் ஆங்கிலேயப் பேராசிரியர்கள் அன்பால் அதிக அன்பு காட்டி வந்தனர்.

கல்லூரிப் பரீட்சைகளில் மோதிலால் விசேஷமான கெளரவங்கள் எதுவும் பெறாமலே தேர்ந்தார். ஆனால் பி. ஏ. இறுதிப் பரீட்சை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது, மோதிலால் நன்றாகப் படிக்கவில்லை. முதலாவது நாள் தாம் எழுதிக் கொடுத்த விடைகளை எண்ணி அதிருப்தி கொண்ட மோதிலால் இதர தினங்களில் பரீட்சை எழுதப் போகாமல் தாஜ்மகாலில் காலக் கொலை செய்து விட்டு உரிய நேரத்தில் வீடு திரும்பு வதை வழக்கமாகக் கொண்டாராம். இதனால் அவர் கல்லூரிப் பட்டம் பெற முடியாமல் போயிற்று.

மோதிலால் நேரு சமூகத்தில் காலூன்றி வாழ்க்கையில் சிறப்பாக முன்னேற ஆசைப்பட்டார். ஆகவே அவருடைய நோக்கு இயல்பாகவே வக்கீல் தொழில்மீது திரும்பியது. அன்றைய இந்தியாவில் இந்தியரின் முழுத் திறமைக்கும் இடமளிக்கக் கூடிய ஒரே தொழில் அதுவாகத் தானிருந்தது. வெற்றி காணும் ஆற்றல் பெற்றவர்களுக்கு அதிகமான பலன்களையும், தகுந்த கொளரவங்களையும் சம்பாதித்துக் கொடுக்கக்கூடிய சக்தி வக்கீல் தொழிலுக்குத் தான் இருந்தது. மேலும், வாழ்வில் வெற்றியோடு விளங்கிய அண்ணா பின்பற்றத் தக்க உதாரணமாக அவர் கண் முன் நின்றார்.

எனவே, மோதிலால் நேரு ஹைக்கோர்ட் வக்கீல் பரீட்சையில் கலந்து கொண்டார். அதில் முதலாவதாகத் தேர்ந்து, தங்கப் பதக்கமும் பெற்றார். தான் எண்ணித் துணிந்து திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கும் பாதையில் அற்புதமான சாதனைகள் கண்டு வெற்றி பெறும் சக்தி தனக்கு உண்டு என்பதை அவர் நன்கு நிரூபித்துவிட்டார்.

மோதிலால் கான்பூர் ஜில்லாக் கோர்ட்டில் மூன்று வருஷ காலம் வக்கில் தொழில் கடத்திய பிறகு அலகாபாத் ஹைகோர்ட் வக்கீலானார். கடுமையாக உழைத்துத் தக்க கவனிப்பைப் பெற்றார். இச் சந்தர்ப்பத்தில் அவரது சகோதரர் மரணமடைந்தார். இத்துயரம் அவருக்குப் பேரிடியாகத் தோன்றியது. தன்னை முன்னுக்குக் கொண்டு வந்த மூத்த சகோதரர் இறந்த துக்கமும் குடும்பப் பொறுப்புகளை ஏற்று நிர்வகித்து நல்ல பொருளாதார பலமாகத் திகழ்ந்த பெரியவர் போய்விட்ட நஷ்டம்-இரண்டும் ஒன்று கூடிக் கொண்டன. பெரிய குடும்பத்தைச் சுமக்க வேண்டிய பாரம் மோதிலாலுக்கு வந்து சேர்ந்தது.

ஆகையினுல் மோதிலால் தீவிரமாகத் தொழிலில் முனைந்தார். ஆர்வத்தோடு உழைத்தார். நல்ல வெற்றி பெற்றார். அவர் ஆசைப்பட்ட தொழில் வெற்றி அவருக்குக் கிட்டியது. அது பொருளாதார வெற்றியைக் கொண்டு சேர்த்தது.

1889-ம் வருஷம் நவம்பர் மாதம் 14-ம் தேதி அன்று அலகாபாத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்தார்.

வக்கீல் தொழிலில் சீறும் சிறப்பும் பெற்றுச் செல்வம் திரட்டுவதிலேயே கண்ணாகயிருந்தார் மோதிலால். அப்போதெல்லாம் அவர் பொதுப் பணி எதிலும் ஈடுபடத் துணியவில்லை. அந்த நாட்களில் தேசீய காங்கிரஸ் சபை என்பது ஆங்கிலேயருக்கு இசைந்த ஒரு ஸ்தாபனமாக உருவாகி வந்தது. அதன் ஒன்றிரு நிகழ்ச்சிகளுக்கு அவர் சென்றாராயினும், அச் சபையில் சேர்ந்து தொண்டாற்றும் எண்ணம் அவருக்கு எழவில்லை. மற்றவர்களுக்குப் பின்பாட்டுப்பாடும் மனோபாவம் அவருக்கு என்றுமே எழுந்ததில்லை. ஆளும் ஆசையும் அதிகாரப் பண்பும் அவரோடு உடன்பிறந்த இயல்புகள். சட்டப் பயிற்சியே அவரது கவனத்தையும் காலத்தையும் ஈர்த்துக் கொண்ட ஆசை நாயகியாக விளங்கிய காரணத்தினால் அவருக்கு வேறு எத்துறையிலும் நாட்டம் சென்ற தில்லை என்றே கூற வேண்டும். அவருடைய தொழில் மூலம் கிட்டிய வெற்றியும் மதிப்பும் அவருக்குத் தனியானதொரு கெளரவமும் தன்னம்பிக்கையும் கொடுத்தன.


இயல்பாகவே போர்த்தினவு பெற்ற அவர் எதையும் எதிர்த்துப் போராடி முன்னேறவே விரும்புபவார். எனினும் ஆதி நாட்களில் அவர் அரசியல் களத்திலிருந்து விலகி நின்றது அதிசயமாகத்தான் தோன்றுகிறது. அக் காலத்திய காங்கிரஸ் நடவடிக்கைகளிலோ அரசியலிலோ போராடுவதற்குரிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதில்லை என்பதும் உண்மைதான். எனினும் தமக்குப் பிடித்த தொழிலில் ஈடுபட்டு வெற்றி ஏணியில் படிப்படியாக, உறுதியாக காலூன்றி உயர்ந்து கொண்டிருந்தவர் முற்றிலும் புதிய துறை ஒன்றில் குதிக்கத் தயாராக இல்லே'. பிறரது தயவினாலோ பிறருக்குத் தொண்டு பரிந்தோ நாம் உயரவில்லை; தமது மன உறுதியும் அறிவின் பலமுமே தமக்குத் துணை என்ற உணர்வு அவரது செயல்களில் பிரதிபலித்தது. இவ்விதம் தமது தந்தையின் பண்பு பற்றிக் குறித்திருக்கிறார் ஜவஹர்லால்.

மோதிலால் நேருவுக்கு ஆங்கிலேயரின் வாழ்க்கை முறைகளால் ஏற்பட்டிருந்து மோகம் மாறாமல் இருந்தது. செல்வம் பெருகப் பெருக அது வளர்ந்து வந்தது. தனது நாட்டினர், தாழ்ந்து, தாழ்ந்து தாழ்ந்தே போயினர். அவர்களின் இழிநிலை அவர்களது தகுதி பெற்றெடுத்த பரிசே ஆகும்; நாட்டுப்பணியின் பெயரால் - அரசியலில் புகுந்தவர்கள் பலரும் வேறு துறைகளில் முயன்று வெற்றி காண முடியாது தோல்வியுற்றவர்களே ஆவர்; செயல் புரியும் ஆற்றல் பெற்றிராத அவர்கள் அனைவரும் பெரும் பேச்சுக்கள் பேசுவது தவிர வேறெதுவும் செய்வதில்லை என்றெல்லாம் நம்பி வாழ்ந்தார் அவர்.


செல்வத்தைச் சேர்த்து வைப்பது என்பது தன்னுடைய சம்பாதிக்கும் திறமையையே அவமரியாதைப் படுத்துகிறகாரியம் ஆகும்; எக்காலத்திலும் தனது தேவைக்கு ஏற்பச் சம்பாதிக்கும் சக்தி தன்னிடம் இருக்கிற போது எதற்காகப் பணத்தை மிச்சப்படுத்தி வைக்க வேண்டும் என்பது மோதிலாலின் கொள்கைகளில் ஒன்று. ஆகவே அவரும் அவர் குடும்பத்தினரும் ராஜரீகமான வாழ்க்கை நடத்திவந்தனர். இவ்விதச் சூழ்நிலையில்தான் ஜவஹர்லால் நேருவின் குழந்தைப்பருவம் கழிந்தது.


"பாதுகாப்பு நிறைந்தது: விசேஷ நிகழ்ச்சிகளுக்கு இடமற்றது” என்று தன் குழந்தைப் பிராயம்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் நேரு.


“செல்வம் மிகுந்த பெற்றோர்களால் வளர்க்கப் படுகிற ’ஒற்றைக்கு ஒரு மகன்” கெட்டுக் குட்டிச்சுவராவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் உண்டு. இந்தியாவில் இது சகஜம். அதிலும் பதினோரு வயது வரை குடும்பத்தின் தனி மகனாக வாழ நேர்ந்து விடுகிற சிறுவன் இந்த விபத்திலிருந்து தப்பி வளர்வது என்பது அரிய விஷயம் தான். எனது சகோதரிகள் இருவரும் என்னை விட எவ்வளவோ இளையவர்கள், எங்களுக்கிடையே உள்ள வயது வித்தியாசம் மிக அதிகமானதே. ஆகையினால் என் சிறுபிராயத்தில் என்னோடு ஒத்த தோழர்கள் எவருமின்றித் தன்னங் தனியனாகவே நான் வளர நேர்ந்தது. ஆரம்பப் பள்ளிக்கூடம் எதற்கும் என்ன எம் பெற்றோர்கள் அனுப்ப வில்லே. வீட்டில் வைத்துக் கல்வி கற்கச் சிலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதனால் சிறு வயதில் பள்ளித் தோழர்கள் சேரவும் எனக்கு வாய்ப்புக் கிட்டியதில்லை" என்று நேரு எழுதியிருக்கிறார்.


வயதுக்கு ஏற்ற தோழர்கள் இல்லையெனினும் அக்குடும்பத்தில் பையன்களுக்கும் உறவினர்களுக்கும் குறைவில்லை தான். சேர்த்து விளையாட வாய்ப்புகள் இல்லை எனினும் பெரியவர்கள் போல் வாய்வீச்சு வீசிக் களித்த இளைஞர்களின் பேச்சுக்களை எல்லாம் புரிந்தோ புரியாமலோ கேட்டுக் கொண்டிருக்க நேருவுக்கு வாய்ப்பு நிறைய இருந்தது.


ஆங்கிலேயரின் ஆணவம் பற்றியும், இந்தியரைப் பிறநாட்டவர் இழிவாகக் கருதி வருவது குறித்தும் அவர்கள் காரசாரமாகப் பேசி விவாதிப்பார்களாம். அவமானம் எதிர்ப்படுகிற போது அதைச் சகித்துக் கொண்டிருப்பது தவறு. எதிர்த்ததுத் தாக்கிப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று கோஷிப்பார்கள். ஆளுவோருக்கும் அடிமைப் பட்டோருக்குமிடையே எழுகின்ற சமர்களைப் பற்றி ஆர்வமாக விவரித்து மகிழ்வார்கள் அவர்கள். ’நியாயம்’ என்று கூட ஆங்கிலேயர் பக்கமாகவே சதிராடி நின்றது என்பது சாத்திரப் பிரசித்தமான உண்மை. ஒரு இந்தியனை ஆங்கிலேயன் ஒருவன் கொன்று விட்டால் அந்த அந்நியன் தண்டனை எதுவும் பெறாமலே தப்பி விடுவது சாத்தியமாக இருந்தது அன்றைய இந்தியாவிலே. ஆனால், ஆங்கிலேயன் இருக்கின்ற ரயில் வண்டிப் பெட்டியினுள் இந்தியன் எட்டிப் பார்த்தால் கூட மூர்க்கத்தனமாகத்தாக்கப் பெறுவது சர்வசாதாரண நிகழ்ச்சியாக விளங்கியது. பொதுப் பூங்காவிலும் பிற இடங்களிலும் கிடந்த நாற்காலி, பெஞ்சுகள் யாவும் வெள்ளையருக்காக ’ரிசர்வ்’ செய்யப்பட்டவை; அவற்றின் மீது இந்தியர் அமர்வது குற்றம் என்ற நீதி தான் குடியிருந்தது-இந்தியரின் சொந்த நாட்டிலே. இவற்றை உணர்ந்த எவரின் நெஞ்சு தான் கொதியாது இருக்கும்?

நேரு குடும்பத்து இளைஞர்களின் உள்ளம் கொதித்தது. அவர்களது சூடான பேச்சுகளைக் கேட்டுக் கேட்டுச் சிறு வயது ஜவஹரின் பிஞ்சு நெஞ்சிலும் ஆளும் இனத்தோர் மீது கசப்பு பிறந்தது. ஆங்கிலேயன் ஒருவன் எதிர்த்துத் தாக்கப்பட்டான் என்ற செய்தி காதில் விழுந்தால் அவர் மனம் ஆனந்தக்களிப்பு பாடியது. அவருடைய உறவினர்களில் ஒருவரோ, அவர்களின் நண்பன் யாருமோ அடிக்கடி அந்நியரை வம்புச் சண்டைக்கு இழுத்துப் பாடம் புகட்டி வந்தது பெரிய தீரச்செயலாக மதிக்கப்படும்.

அடாது செய்த ஆளும் வர்க்கத்து மீதுதான் ஜவஹருக்கக் கசப்பு ஏற்பட்டதே தவிர, தனிப்பட்ட ஆங்கிலேயன் எவன் பேரிலும் அவருக்குக் கோபமோ வெறுப்போ எழுந்ததில்லே. ஆங்கிலேய உபாத்தியாயினிகளும் உபாத்தியாயர்களும் அவருக்குக் கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டுதானிருந்தனர். ஆங்கிலேயர் பலர் அவர் தந்தையின் நண்பர்களாக விளங்கினர். அவர்கள் அடிக்கடி நேருவின் வீட்டுக்கு வந்து போகும் வழக்கமும் இருந்தது. "எனது இதய ஆழத்திலே இங்கிலிஷ் காரரை வியக்கும் பண்பு இருந்து வந்தது' என்று நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

ஜவஹர்லாலுக்கு தந்தை பேரில் பாசமும் நேசமும் இருந்தன. தந்தையின் பண்புகள் பலவற்றை எண்ணி எண்ணி வியக்கின்ற குணமும், தந்தையைப் போல திகழ வேண்டும் என்ற ஆசையும் ஒன்றாக வளர்ந்தன அவர் உள்ளத்தில். அறிவு, ஆற்றல், வீரம் இவற்றுக்கெல்லாம் சரியாக உருவகம் தன தந்தைதான் என்ற நம்பிக்கை அவருக்குச் சிறு வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. மோதிலால் திடீரென்று பொறுமை இழந்து, ஆங்காரம் உற்று எரிந்து விழும் பண்பு பெற்றிருந்தும், வேலைக்காரர்களைக் கோபித்துக் கண்டிக்கும் தன்மையும் ஜவஹருக்கு அச்சமும் நடுக்கமும் தந்தன.

தனது தந்தையின் கோபத்துக்குத் தான் இலக்கான சந்தர்ப்பம் ஒன்றைப்பற்றி ஜவர்ஹாலால் நேரு தன் சுயசரிதையில் எதியிருக்கிறார்---அவருக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் போது நடந்த நிகழ்ச்சி அது.

தந்தையின் ஆபிஸ் மேஜை மேல் இரண்டு பவுண்டன் பேனாக்கள் இருந்ததை நேரு கண்டார். அவை ஆசையை கிளறின. ஒரே சமயத்தில் ஒருவருக்கு இரண்டு பேனாக்கள் தேவைப்படாது; அதனால் ஒரு பேனாவை எடுத்துக்கொண்டால் தந்தைக்குத் தெரியாது என்று ஜவஹர் எண்ணினர். எடுத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வீடே அமளிதுமளிப் பட்டதை அறிந்ததும் அவருக்கு, நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. காணாமல் போன பேனாவைத்தான் தேடுகிறார்கள் என்று புரிந்தும் கூட அவர் உண்மையை ஒப்புக்கொள்ளத் துணியவில்லை. ஆயினும் விஷயம் அம்பலமாகிவிட்டது. மிகுதிபம் கோபம் கொண்டிருந்த தந்தை சிறுவன் ஜவஹரை ‘வெளுவெளு வென்று’ வெளுத்து வாங்கிவிட்டார் உடலின் வேதனையாலும் உள்ளத்து வேதனையாலும் குறுகிப்போன ஜவஹர் தாயைச் சரணடைந்தார் உடல் நோவு தீருவதற்குப் பல நாட்கள் சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாயிற்றாம்.

இந்த நிகழ்ச்சியினால் ஜவஹருக்குத் தந்தை மீது ஆத்திரமோ வெறுப்போ ஏற்பட்டதில்லை. தந்தை தனக்கு விதித்த தண்டனை சற்று அளவுக்கு அதிகமானது என்றாலும் நியாயமான தண்டனையே என்று தான் அவர் நம்பினார். தந்தையிடம் அவர் கொண்டிருந்த அன்பும் வியப்பும் அச்சமும் குறையவே இல்லே. தாய் சொரூப் ராணியிடம் அவருக்குப் பயம் ஒருநாள் கூட எழுந்ததே இல்லை. அவளுடைய பாசமும் அவள் காட்டிய பரிவும் செல்லமும் காரணமாக, ஜவஹர் அவளிடம் தன் இஷ்டம்போல் நடந்து தனது காரியங்களைப் பிடிவாதமாகச் சாதித்துக் கொள்வதிலேயே கருத்தாக இருந்தார். தந்தையிடம் சொல்லத் துணியாத எண்ணங்களையும் ஆசைகளையும் நேரு தாயிடம் கூறி ஆறுதல் பெறுவது வழக்கமாம்.

சிறு பிராயத்தில் நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவருக்கு ஆறுதலும் உற்சாகமும் காட்டி வந்த மற்றொருவர் முன்ஷி முபாரக் அலி எனும் பெரியார் ஆவர். நல்ல நிலைமையில் வாழ்ந்த அவரது குடும்பம் 1857-ஆம் ஆண்டுப் புரட்சியால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்ததாம். அவருக்கு எதிர்ப்பட்ட நஷ்டங்களும் அனுபவமும் முபாரக் அலியை இளகிய உள்ளத்தவராகவும், ஜனங்களின் அனுதாபியாகவும், குழந்தைகளிடம் பிரியம் காட்டுகிறவராகவும் மாற்றிவிட்டனவாம். சிறுவன் துயரத்தில் சிக்கியபோதும், உற்சாகம் இழக்கும் வேளைகளிலும் அவருடைய துணையை நாடி ஓடுவது வழக்கமாம். நரை ஓடிய அழகிய தாடியும், வயது முதிர்ச்சியும் பெற்றிருந்த அவரது முகம் நேருவின் இளம் கண்களுக்கு அற்புதச் சித்திரமாக விளங்கியதாம். கணக்கற்ற கதைகளை உள்ளடக்கிய காலத் திருஉருவம் என்றே அப் பெரியாரை அவர் மதித்திருந்தார். அராபிய இரவுக் கதைகளையும், 1857-1858-ம் வருஷ அனுபவங்களையும், வேறு பல வகைக் கதைகளையும் முபாரக் அலி சுவையாகச் சொல்லுவது வழக்கமாம். நேரு வளர்ந்து பெரியவராகிப் பல வருஷங்கள் சென்ற பின்னர்தான் அந்தப் பெரியார் காலமானார் என்று தெரிகிறது. அவர் ஜவஹர்லால் நேருவின் நினைவிலே நிலையான இடம் பெற்றுவிட்ட உத்தமர் ஆவர்.

சிறு வயதில் ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டு உற்சாகமும் உணர்வும் பெறும் பாக்கியமற்ற இந்தியக் குழந்தைகள் யாராவது இருக்க முடியுமா என்ன? ஜவஹருக்கு அவருடைய தாயும் உறவினரும் அக் கதைகளையும், மற்றும் பலவிதப் புராணக் கதைகளையும், நாடோடிக் கதைகளையும் நிறைய நிறையச் சொல்லி மகிழ்வித்தனர். இந்த ரகமான கதைகளைக் கேட்டு ரசித்து மகிழ்ந்தார் நேரு. ஆயினும் சிறுவயது முதலே மதம், பக்தி, பூஜை எல்லாம் பெண்களுக்குத் தேவையான காரியங்கள் என்ற எண்ணம்தான் அவர் உள்ளத்தில் வளர்ந்து வந்தது.

மோதிலால் நேருவும், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் ‘மத அனுஷ்டானங்கள், பூஜை புனஸ்காரங்களை எல்லாம் வேடிக்கையாகவும் விளையாட்டாகவிளையாட்டாகவுமே கருதினர், கர்ம சிரத்தையாக அவற்றை அவர்கள் போற்றியதில்லை. வீட்டில் உள்ள பெண்கள் எந்தப் பண்டிகை வந்தாலும் சரி, பூஜையாயினும் சரியே, சிறப்பாகக் கொண்டாடத் தவறியதே இல்லே. ஜவஹர்லால் தாயுடனும் பிறருடனும் சேர்ந்து போய் கங்கையாடுவதிலும், கோவில்களைச் சுற்றுவதிலும், காசியைக் காண்பதிலும், புகழ் பெற்ற சன்யாசிகளைத் தரிசிப்பதிலும் குதுகலம் அடைந்தார். எனினும் இந்த அனுபவங்கள் எல்லாம் அவருக்கு பக்தி புகட்டவுமில்லை உள்ளத்தில் உயரிய தடங்கள் பதித்து விடவுமில்லை.

ஹோலி. தீபாவளி, ஜன்மாஷ்டமி, தசரா, ராம லீலா முதலிய பண்டிகைகளை அமர்க்களமாகக் கொண்டாடுவதில் ஜவஹரும் ஆனந்தம் கண்டார். ஆயினும் அவர் மிக அதிகமான உவகை கொண்டது அவரையே விழாநாயகனாகக் கொண்டு நிகழ்த்தப்படும் பிறந்த நாள் வைபங்களின் போதேயாம். பரபரப்பூட்டும் சுதினும் அது. அன்று அதிகாலேயிலேயே நேருவைப் பெரிய தராசு ஒன்றில் நிறுத்தி கோதுமை மூட்டைகள், இதர பொருள்கள் எல்லாம் கொண்டு எடைபோடுவார்களாம். பின்னர் அப்பொருள்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கி விடுவது வழக்கம். நேரு புத்தாடைகள் புனைந்து ‘ஜம்’ மென்றும் விளங்குவார். பலரும் அன்புப் பரிசுகள் கொண்டு தருவர். பிறகு பெரிய விருந்து நடைபெறும். சிறுவன் நேரு பெருமைப் பட்டுக் கொண்டதில் அதிசயம் ஒன்றும் இல்லை அல்லவா? ஆனால் அந்நாட்களில் அவருக்கு ஒரே ஒருவருத்தம் இருந்ததாம். இந்தப் பிறந்த நாள் ஆண்டுக்கு ஒரு முறை தானே வருகிறது, அது ஏன் அடிக்கடி வரக் கூடாது?’ என்கிற வருத்தம் தான் அது. “அடிக்கடி பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று நான் புரட்சி கூடச் செய்தேன். முதிர்கின்ற வயதை நினைவுபடுத்தும் கசப்பான சின்னங்களே கொண்டாட்டங்கள் என்பதை அன்று நான் உணர்ந்தேனில்லை” என்று நேரு பின்னாட்களில் எழுதிவைத்திருக்கிறார்.

நேருவின் பத்தாவது வயதில் தான் அவர் குடும்பத்தினர் ‘ஆனந்த பவனம்’ எனும் பெரிய மாளிகையில் வாசம் செய்யத் தொடங்கினர்களாம். பவனத்தைச் சுற்றிப் பெரிய தோட்டமும், தோட்டத்தில் ஓர் குளமும் இருந்தன. அவற்றை ஆராய்வதிலும், அங்கு கட்டப் பெற்ற புதிய வீடுகளையும் வேலை செய்யும் தொழிலாளர்களையும் வேடிக்கை பார்ப்பதிலும் களிப்பெய்தினார் நேரு. நீச்சல் குளத்தில் நீராடுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததாம். கோடை காலத்தில் ஒரே நாளில் பல தடவைகளில் குளித்து மகிழ்வதிலேயே பொழுதைப் போக்கி விடுவாராம் அவர்.நீச்சல் குளம் ஒரு புதுமையாக விளங்கியது. அத்துடன் அலகாபாத்திலேயே முதன் முதலாக ஆனந்த பவனத்தில் தான் எலெக்ட்ரிக் விளக்குகள் மின்னத் தொடங்கின. ஆகவே அம்மாளிகையில் எப்பொழுதும் நண்பர்கள் கூடுவதும், குளத்தில் நீந்துவதும் பொழுது போக்குவதும் அதிகமாக இருந்தது. அனைத்தும் நேருவுக்கு உற்சாகம் அளிக்கும் சூழ்நிலையாகவே திகழ்ந்தது.

எனினும் நேருவின் இதய ஆழத்தில் ஓர் ஏக்கம் பதுங்கிக் கிடக்காமல் இல்லை. ஊரில் உள்ள சிறுவர் களுக் கெல்லாம் அக்காளோ தம்பியோ, அண்ணனோ தங்கைகளோ இருக்கிறார்களே தனக்குச் சகோதரர்களோ சகோதரிகளோ இல்லேயே என்று வேதனைப் பட்டுக் கொண்டிருந்தார் அவர். எனவே, பல வருஷங்களுக்குப் பிறகு ஒரு தங்கை பிறந்த போது அவர் மிகுதியும் உள்ளக் கிளர்ச்சி உற்றார். குழந்தை பிறந்தபோது, மோதிலால் நேரு ஐரோப்பாவில் இருந்தாராம். தம்பி அல்லது தங்கையின் பிறப்பை எதிர்பார்த்து ஜவஹர்லால் வராந்தாவில் ஆவலோடு, பரபரப்போடு, காத்திருந்தார். டாக்டர் ஒருவர் வந்தார். பெண்குழந்தை தான்; நல்ல வேளையாகச் சொத்திலே பங்கு பெற ஒரு பையன் பிறந்து விடவில்லே என்று சொன்னாராம். அவர் சும்மா விளையாட்டாகப் பேசியிருந்திருக்கலாம், என்றாலும், என் உள்ளத்திலே கசப்பும் கோபமுமே பொங்கின. இத்தகைய கேவலமான நினைப்பை நான் கொண்டு விட முடியும் என்று ஒருவர் எண்ணத் துணிந்தாரே என்ற உணர்வால் எழுந்த கொதிப்பு அது" என நேரு குறித்திருக்கிறார்.

நேருவின் பதினேராவது வயது முதல் அவருக்குக் கல்வி புகட்டும் பொறுப்பை ஏற்றவர் பெர்டினாண்ட்டி புரூக்ஸ் என்பார். பல வகைகளில் நேருவின் மனப்பண்பை உருவாக்கியவர் புரூக்ஸ் தான். புத்தங்களை நிறையநிறையப் படிக்க வேண்டும் எனும் ஆசையைத் தூண்டியவர் அவர் தானாம். விஞ்ஞான நுட்பங்களே அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அவரே வளர்த்து விட்டாராம். தியாஸ்பி, புத்தமதம், ஹிந்து வேதங்கள், மதசாஸ்திரங்கள், உபநிஷதங்கள். பகவத்கீதை. தத்துவ ஞானிகளின் சிந்தனைகள் பற்றி எல்லாம் கற்றுக் கொள்ள அவர்தான் உதவிபுரிந்தார். ஆகவே, நேருவின் உள்ளத்தைப் பண்படுத்திய பெருமையில் புரூக்ஸுக்கு முக்கியமான பங்கு உண்டு. ”எப். டி. புரூக்ஸுக்குக் கடமைபட்டவன் நான்” என்று நேருஜீயே சுயசரிதையில் பொறித்திருக்கிறார்.

போயர் புத்தம் நிகழ்ந்த காலத்திலும், ரஷ்ய, ஜப்பானிய யுத்தம் கிளர்ந்தெழுந்த போதும் அவற்றின் போக்கிலே நேரு அதிக கவனம் செலுத்தி வந்தாராம். எப்பொழுதுமே தினசரிப் பத்திரிகையை ஆவலுடன் எதிர்பார்த்து அயல் நாட்டுச் செய்திகளை ஆர்வமுடன் படித்து உலக அறிவை அகண்டதாக்கி வந்தார் அவர். ஜப்பானியர்கள் பெற்ற வெற்றிகள் அவருக்கு உணர்வூட்டின. ஜப்பானைப் பற்றிய புத்தகங்களே ஏகமாக வாங்கிக் குவித்து விட்டாராம். அவற்றில் சிலவற்றைப் படித்து ஜப்பான் நாட்டின் சரிதை, அங்நாட்டின் வாழ்க்கை நிலே, ஜப்பானின் பழங்கதைகள் முதலியவற்றில் அவர் ஆழ்ந்து விட்டாராம்.

தேசீய உணர்வு முளைவிட்டு எழுந்து படர்ந்து வளர்ந்தது அவர் உள்ளத்திலே, இந்தியாவின் விடுதலையைப் பற்றிக் கனவு கண்டார். ஐரோப்பாவின் பிடியிலிருந்து விடுபட்ட ஆசியாவின் சுதந்திரம் பற்றி எண்ணினார். கையிலே வாளேந்திக் களத்திலே குதித்து, பாரதத்தின் தளைகளே அறுத்தெறியத் தாம் அருஞ்சமர் புரிவதாகவும், வீரதீர பராக்கிரமங்கள் செய்வதாகவும் கனவுகள் காண ஆரம்பித்தார் அவர்.

பொதுவாகவே அவர் வாழ்க்கையில் அடிக்கடி கண்ட கனவுகளில் ஒன்று ஆகாயத்தில் பறந்து பறந்து மேலெழும் செயலைக் காட்டுவதாம். எக் கருவிகளின் துணையுமின்றித் தானகவே தான் மேலே கிளம்பி உயர உயரப் பறப்பதாகக் கனவுகள் தோன்றும். அவை மிகத் தெளிவாகவும். நிஜமாகவே அனுபவிப்பது போலவும் தோன்றும், கனவின் பொருள் உரைக்கக் கற்ற ஆய்வாளர்கள் இவற்றைப் பற்றி எப்படி விரித்துரைப்பார்களோ நான் அறியேன்” என்று நேரு குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வில் மிக உயர்ந்து விளங்க வேண்டும்; லட்சிய வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை வளர்த்த உள் மனத்தின் எண்ணப் பிரதிபலிப்புகளாக இருக்கலாம் அந்தக் கனவுகள். எதிர்காலத்தில் அவர் பெறவிருந்த வெற்றிகளே, உலகமே வியந்து போற்றும் விதத்தில் அவர் உயர்ந்து விடுவார் என்பதை, முன்னதாகவே அதீத உணர்வு எடுத்துக்காட்டி வந்திருக்கிறது; அதன் சூசகங்களே அக்கனவுகள் என்றும் கொள்ளலாம் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_2&oldid=1376996" இலிருந்து மீள்விக்கப்பட்டது