நம் நேரு/அத்தியாயம் 3

அத்தியாயம் 3

1905-ம் வருஷம் மே மாதம்-ஜவஹர்லால்நேரு தனது தந்தை, தாய், சகோதரிகளுடன் இங்கிலாந்துக்குச் சென்றார். அப்பொழுது அவருக்குப் பதினைந்து வயது நிறைவுற்று விட்டது. அவரை ஹாரோ கலாசாலேயில் மாணவராகச் சேர்த்துவிட்டு, நேருவின் பெற்றோர் ஐரோப்பிய யாத்திரை சென்று விட்டர். பிறகு இந்தியா திரும்பினர்.

தாய் தந்தையரை பிரிந்து தனியாக வாழ நேர்ந்தது அது தான் முதல் தடவையாகையால் நேருவுக்குக் கொஞ்ச காலம் சிரம்மாகத்தான் இருந்தது. எனினும் ஓயாத படிப்பும் விளையாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு நினைப்பை மறக்கடித்து விட்டன.

மாணவர்கள் மத்தியில் அவர் தனியன் போன்ற நிலையையே ஏற்பட்டது. அவர்களில் ஒருவராகப்பழகி விளையாடித் திறமையோடு மிளிரும் சுபாவம் அவரிடம் இருந்ததில்லை. அவர் விளையாட்டுகளில் கலந்து கொண்டாலும் சோய்ப்பதில்லை என்பதனால் மற்றவர்கள் அவரை ஒதுங்கி வாழ விட்டுவிட்டார்கள். இதர மாணவர்கள் சதா விளையாட்டுகளைப் பற்றியே பேசிமகிழ்ந்தார்கள். விளையாட்டுகளை விட்டால் அவர்கள் பேச்சுக்கு வேறு பொருளே கிடையாது. ஆனால் ஜவஹர் பள்ளிக்கூடப் பாடங்களில் மட்டுமின்றிப் பொது விஷயங்களிலும் நல்ல ஞானம் பெற்றிருந்தார். அவர் அதிகமான புத்தங்களும் பத்திரிக்கைகளும் வாசிப்பதில் அக்கறை காட்டி வந்தார். ஆகவே இதர மாணவர்கள் அவரது நோக்கிலே மந்த மதியினராகவே தோன்றினர். மேல்வகுப்புக்குச் செல்லச் செல்லத் தான் கூறிய அறிவுள்ளவர்கள் சிலரைக் காண முடிந்தது அவரால்.

அரசியல் விஷயங்களில் மாத்திரம் தான் நேருவின் கவனம் ஈடுபட்டிருந்தது என்றில்லை. ஆகாய யாத்திரை தொடங்க விமானங்கள் கட்டிப் பறக்க ஆரம்ப முயற்சிகள் நடந்து கொட்டிருந்தகாலம் அது. விமான வளர்ச்சியிலும், பறக்க முயன்ற தீரர்களின் பரிசோதனைகளைக் கவனிப்பதிலும் நேரு அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

நேரு ஹாரோவில் கல்வி கற்று வந்த காலத்தில் வேறு நாலைந்து இந்திய மாணவர்களும் அங்கு படித்து வந்தனர். அவர்களைச் சந்தித்து அவர்களுடன் அதிகமாகப் பழகியதில்லை நேரு. ஹாரோ தனக்கு உகந்த இடமில்லை என்ற உணர்வு அவர் உள்ளத்தில் வளர்ந்து வந்தது. 1906-1907-்ம் வருஷங்களில் இந்திய அரசியல் உலகில் நிகழ்ந்த பெரிய விஷயங்களைப் பற்றி அவர் பத்திரிகைகள் மூலம் ஓர் சிறிதே உணர முடிந்தது. ஆயினும் இந்தியா விழித்தெழுந்து விட்டது என்பதை ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான சிறுசிறு செய்திகள் கூட உலகுக்கு நாவலித்தன. வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய பிரதேசங்களில் குறிப்பிடத் தகுந்த உரிமைக் கிளர்ச்சிகள் நடைபெறுவதை நேரு ஊகிக்க முடிந்தது. லாலா லஜபதி ராய், அஜித் சிங் ஆகிய தலைவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள். திலகரின் பெயர் முழங்கத் தொடங்கியது. சுதேசி இயக்கமும், மறியல்களும் நிகழ்ந்தன. இவை பற்றிய சிறு செய்திகள் உள்ளத்தில் எழுப்பிய எதிரொலிகளே வாய்விட்டுப் பேசி மகிழ்வதற்குக் கூடச் சரியான தோழர்கள் ஹாரோவில் அவருக்குக் கிட்டவில்லை.

பள்ளிக்கூடத்தில் அவரது திறமைக்காக அளிக்கப் பட்ட பரிசுப் புத்தகங்களில் கெரிபால்டியின் வரலாற்று நூல் ஒன்று இருந்தது. இத்தாலிய வீரன் கெரிபால்டியின் கதை நேருவை வசீகரிக்கவே, கெரிபால்டி வரலாறு பற்றிய இதர புத்தங்களையும் வாங்கிப் படித்தார் அவர். விடுதலை வேட்கையுடன் போராடிய இத்தாலியைப் போல் இந்தியாவும் சுதந்திரத்துக்காகப் போரிட வேண்டும் என்ற இதயத் துடிப்பு அவருக்கு ஏற்பட்டது. தனது எண்ணங்களும் லட்சிய ஆர்வமும் வளருவதற்கு ஏற்ற சூழ்நிலை கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலேயில் தான் கிடைக்கும் என்று கருதினார் அவர். ஆதலால் தந்தைக்கு எழுதி அங்கீகாரம் பெற்று, நேரு கேம்பிரிட்ஜ் டிரினிட்டி காலேஜில் சேர்ந்தார். ஹாரோவில் இரண்டு வருஷங்களும், கேம்பிரிட்ஜில் மூன்று வருஷங்களும் பயிற்சி பெற்றார் அவர்.

வாழ்க்கையை மனோகரமானதாக அமைத்துக்கொள்ள வேண்டும்; வாழ்வின் சகல இன்பங்களையும் அனுபவித்து வாழ்வதற்குக் கிட்டிய ஒவ்வொரு நாளையும் இனிய பொழுதாகப் பயன்படுத்திக் கலைமய வாழ்வு வாழ வேண்டும் என்ற நினைப்பு அவருக்குக் கல்லூரி நாட்களில் மேலோங்கி இருந்தது. இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த சரித்திரப் பிரசித்தமான சம்பவங்களைப் பற்றிய செய்திகளோ அவரையும் ஆசை காட்டி அழைப்பதாக இருந்தன. இப்படி இருவேறு ரக எண்ணக் குழப்பம் அலைக்கழித்த போதிலும் நேருவின் கல்லூரி வாழ்க்கை இனிமை நிறைந்தே விளங்கியது.

கேம்பிரிட்ஜில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இந்தியர் பலரும் கூடி ‘மஜ்லீஸ்’ என்றொரு சங்கம் அமைத்திருந்தனர். அங்கு அடிக்கடி இந்தியப் பிரச்னைகளைத் அலசி ஆராய்ந்தனர். காரமாகப் பேசிச் சூடாக விவாதித்தனர். ஆனால் எல்லாம் ஏதோ நடிப்பு போலவும், பிரிட்டிஷ் பார்லிமெண்ட் நிகழ்ச்சிகளைக் காப்பி அடித்துக்களிப்பது போலவுமே தோன்றும். அங்கு ஒரு வித் இருந்ததாம். பல மாத காலம் ஒரு தடவைகூட மேடை ஏறிப் பேசாமல் வாய்மூடி மெளனியாக வந்துபோகிற அங்கத்தினர் குறித்த ஓர் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியது அவசியமாம். ஜவஹர்ஜவஹர்லால் நேருவிடம் கூச்சமும் தயக்கமும் குடி கொண்டிருந்ததால், சபை முன் நின்று அவர் பேசத் துணிவதில்லை, அடிக்கடி அபராதம் செலுத்துவதல் அவர் தயக்கம் காட்டியதே இல்லையாம்! பிற்காலத்தில் எவ்வளவு பெரிய ஜன சமுத்திரத்தின் முன் நின்றும், மணிக் கணக்கிலே சகலவிதமான பிரச்னைகளையும் தீர்த்துக் கட்டி விடும் சிந்தனைத் தீர்க்கமும் பேச்சு நயமும் கலந்த சொற்பொழிவுகளே ஆற்றும் வன்மை பெற்றுவிட்ட நேரு தனது வாலிபப் பருவத்திலே இப்படி இருந்தார் என்பது வியப்புக்குரிய விஷயம் தான் ; இல்லையா ?
இத்தகைய முரண்பாடு மற்றவர்கள் வாழ்க்கையில் வேறு விதமாகத் திகழ்ந்தது என்று தெரிகிறது. நேருவுடன் கல்வி கற்ற இந்திய மாணவர்கள்— ‘மஜ்லிஸ்’ — கேம்பிரிட்ஜில் தீவிரமாகப் பேசினர்கள். வங்காளத்தில் தலைகாட்டி வளர்ந்த பலாத்கார இயக்கத்தை வியந்து போற்றினார்கள். அவர்களில் யாருமே பின்னர் இந்திய தேயே விடுதலை இயக்கம் எதிலும் கலந்து கொள்ள வில்லை, பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தியன்ஸிவில் சர்வீஸில் உத்தியோகம் பெற்றும், ஹைக்கோர்ட்டு நீதிபதிகளாக அமர்ந்தும், ஈவு இரக்கமற்ற வக்கீல்களாக மாறியும் தான் வாழ்க்கை நடத்தினார்கள் அந்த ஆரம்ப சூரப்புலிகள்.
இடைக் காலத்தில், ஜவஹரின் தந்தை இந்திய அரசியலில் கலந்து பணியாற்ற முன் வந்திருந்தார். இவ்விஷயம் நம் நேருவுக்கு மகிழ்வு அளித்தது. எனினும் மோதிலால் மிதவாதிகள் கோஷ்டியில் சேர்ந்திருந்தது அவருக்கு அதிருப்தியைக் கொடுத்தது. மோதிலாலும் அவர் நண்பர்களும் மிதவாத மாநாடுகள் கூட்டினார்கள். வங்கத்தின் தீவிரவாதிகள் செயலைக் கண்டித்து நடவடிக்கைகள் எடுத்தார்கள. 1907-ம் வருஷம் நடந்த சூரத் காங்கிரசுக்கு மோதிலால் தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது மாநாடு குழப்பத்தில் முடிந்தது; ஆயினும் காங்கிரஸ் கட்சியே மிதவாத இயக்கமாக மாறிவிட்டது.

மோதிலால் பண்பாட்டினால் ஓர் மிதவாதி அல்லர். வலிய உணர்வுகளும் திடமான நம்பிக்கைகளும் அறிவும் ஆற்றலும் பெற்றிருந்த அவருக்கும் மிதவாதத்துக்கும் எவ்வளவோ தூரம் தான். என்றாலும் 1907 முதல் சில வருஷகாலம் அவர் மிதவாதியாக இருந்தது எதனால்? அவர் எதையும் ஆழ்ந்து சிந்தித்து, நல்ல பலன் விளையும் எனக் கண்டால் தீர்க்கமான வகையில் செயல் புரியும் பண்பினர். ஆடம்பரமான கூச்சல்களும் படாடோப வார்த்தைகளும் அவருக்குப் பிடித்தமானவை அல்ல. பெரும் பேச்சுக்களின் பின்னே திடமான செயல் திட்டங்கள் மறைந்து கிடப்பதில்லை என்பது அவர் கருத்து. சுதேசி, பகிஷ்கார இயக்கங்களினால் உருப்படியான பலன்கள் விளைந்துவிடும் என்று அவர் எண்ணினாரில்லை. இவற்றுக்கு அடிப்படையாக அமைந்திருந்த பகைப் புலன்களும், மதரீதியான தேசியமும் அவருடைய இயல்புக்கே ஏற்காதவை. இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் புராதனப் பெருமைகளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது மாத்திரம் போதாது. பழமைக் கலாசாரம், ஜாதி ஆசாரங்கள், சமூகத்தின் பூர்வீகமான பழக்க வழக்கங்களை எல்லாம் புரிந்து கொள்ளும் ஆர்வமோ கெளரவிக்கும் ஆசையோ மோதிலால் நேருவுக்குக் கிடையாது. மேல் நாட்டுப் புதிய கலாசாரமே இந்தியாவின் முற்போக்குக்கு வழிகாட்ட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு. ஆகவே, பிரிட்டிஷாரைப் பகைத்துக் கொள்வதும், அவர்களது தொடர்பை அறுத்துக் கொள்ள விரும்புவதும் சரியல்ல. ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து, ஆட்சியில் பங்கு பற்றி, நாட்டுக்கு நலம் பல புரியலாம் என்கிற எண்ணமே அவரது மிதவாதத்துக்கு ஆதாரமாக அமைந்திருந்தது. இப்படிப் பகுத்து தந்தையின் ஆரம்பகால அரசியல் மிதவாதம் பற்றி அறுதியிட்டுக் கூறியிருக்கிருர் ஜவஹர்.

நேரு கேம்பிரிட்ஜில் பயிற்சி பெற்று வரும் போதே மேற்படிப்புக்கு எத்துறைக் கல்வியை நாடலாம் என விவாதிக்கப்பட்டதாம். ஐ. ஸி. எஸ். படிக்கலாம் என்ற அபிப்பிராயமும் எழுந்ததாம். ஆனால் முடிவில் அந்த யோசனை கைவிடப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், ஐ. ஸி. எஸ். பாஸ் பண்ன வேண்டுமானால் அவர் மேலும் நான்கு வருஷங்கள் இங்கிலாந்திலேயே தங்க வேண்டியது அவசியமாகும். தங்களைப் பிரிந்து பல வருஷங்களைக் கழித்து விட்ட புதல்வர் அதிக காலம் அயல் நாட்டில் தனித்து வாழவேண்டுமே என்பதை எண்ணிக் கவலையுற்றனர். ஆகவே அவர் சட்டப் பயிற்சி பெற்றுத் தேர்ந்து சீக்கிரம் திரும்புவதே நல்லது என்று முடிவு செய்தனர்.

"அரசியலில் எனது அபிப்பிராயங்கள் தீவிரப் பாதை நோக்கி வளர்ந்து வந்த போதிலும், ஐ. ஸி. எஸ். பாஸ் செய்து, பிரிட்டிஷாரின் சர்க்கார் இயந்திரத்தில் ஓர் அங்கமாக மாறிவிடும் யோசனை அன்று எனக்குக் கசப்பானதாகத் தோன்றாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பல வருஷங்களுக்குப் பிறகு இதே யோசனை எனது வெறுப்பையே ஏற்றிருக்கும்" என்று 1986-ல் நேரு எழுதியிருக்கிறார்.

கேம்பிரிட்ஜில் பட்டம் பெற்று 1910-ம் வருஷம் அவர் லண்டன் நகர் அடைந்து சட்டக் கல்வி பயின்றார். அதற்காக இரண்டு வருஷங்கள் லண்டனில் கழித்தார். அந்நாளைய அனுபவங்கள் அவருக்கு எவ்வித அபிவிருத்தியும் அளிக்கவில்லை. விடுமுறைக் காலங்களில் அவர் ஐரோப்பிய நகரங்களில் சுற்றுப்பிரயாணம் செய்து மகிழ்ந்தார்.

1910-ம் வருஷம் நேரு நார்வேயில் தங்கியிருந்த போது ‘அவர் பிழைத்தது மறு பிழைப்பு' என்று சொல்லும்படியான சம்பவம் ஒன்று நிகழ்ந்து விட்டது. மலைப் பிரதேசங்களில் சுற்றித் திரிந்து, வேர்த்து விறு விறுத்துப் போய் ஒரு சிறிய ஹோட்டலை அடைந்தனர் நேருவும் அவரது நண்பர்கள் சிலரும். குளிக்கும் வசதி அந்த ஹோட்டலில் இல்லை. ஆயினும் சற்றுத் தொலைவில் ஒடிய நீரோடையில் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நேருவும் இங்கிலீஷ்காரர் ஒருவரும் அந்த ஓடைநோக்கிச் சென்றனர். வேகமாக ஓடிப் பாய்ந்த அந்த நீரோடையில் ஆழம் அதிகமில்லை. ஆனால் வழுக்கு இருந்தது. குளிர் நடுக்கியது. நேருவின் கால் வழுக்கவே அவர் நீரில் விழுந்து விட்டார். ஐஸ் போல் குளிர்ச்சி பெற்றிருந்த தண்ணீர் அவர் உடலே விரைத்துப் போகும் படி செய்தது. அவரது அங்கங்கள் செயல் திறம் இழந்தன. எழுந்து காலூன்றி நிற்கமுடியவில்லை அவரால். தண்ணீர் அவரை அடித்துச் சென்றது. அவரது தோழர் சமாளித்துக் கரை ஏறி, ஒரமாகவே ஓடிச் சென்று நேருவின் கால்களைப் பற்றி இழுத்து வெளியேற்றிப் பாதுகாப்பளித்தார். எத்தகைய பேராபத்திலிருந்து நேரு காப்பாற்றப்பட்டார் என்பது பின்னர் தான் புரிந்தது. இருநூறு கஜ தூரத்துக்கப்பால் அந்நீரோடை குதித்துப் பாய்ந்து மலைமுகடு ஒன்றின் விளிம்பிலிருந்து பெரும் பள்ளம் நோக்கித் திடுமென விழும் அழகு அருவியாக மாறிவிடுகிறது என்பதைக் கண்டார்கள். அவ்வட்டாரத்தின் அழகுச் செல்வம் அது. அது நேருவின் உயிரைப் பறிக்க இருந்ததே!

ஏழு ஆண்டுகளை இங்கிலாந்திலேயே கழித்து விட்ட நேரு 1912-ல் சட்டத் தேர்வு பெற்ற பிறகு இந்தியா திரும்பினர். இடைக்காலத்தில் அவர் இரண்டு தடவைகள் தாய்நாடு வந்து போயிருந்த போதிலும், இப்போது பம்பாயில் அடிஎடுத்து வைத்த போது தாம் முற்றிலும் மாறிவிட்டது போன்ற தன்னுணர்வு மிகுந்தவராகத் தான் விளங்கினர் அவர்.

1912-ம் வருஷ இறுதியில் அரசியல் துறையில் தேக்கம்தான் நிலவியது. திலகர் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தார். தீவிரவாதிகள் ஓய்ந்து ஒடுங்கிப் பம்மியிருந்தனர். உள் நாட்டு விவகாரங்கள் ‘சுரத்' இல்லாமலிருந்தன. மிண்டே மார்லி சீர்திருத்தம் என்ற கண்துடைப்பு காரணமாக மிதிவாதிகள் திருப்தியுடன் காலந்தள்ளினார்கள். தென் ஆப்பிரிக்கப் பிரசனைதான் கொஞ்சம் பரபரப்பு அளித்து வந்தது. பங்கிப்பூரில் கூடிய காங்கிரஸ் சலவை மடிப்புக் குலேயாத சட்டை வீரர்களும், ஆங்கிலஞானம் பெற்ற மேன்மக்களும் சேர்ந்து ஆடிய ஓர் நாடகமாக முடிந்தது. தென் ஆப்பிரிக்கா சென்று திரும்பியிருந்த கோகலே கவனிப்புக்குரிய தலைவராக விளங்கினார்.

ஜவஹர் லால் நேரு பங்கிப்பூர் காங்கிரஸில் ஓர் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அவர் ஹைக்கோர்ட் வக்கீல் தொழிலை ஏற்றிருந்தார். ஏழு வருஷங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்ததும், ஆரம்பத்தில் அவருக்கு உற்சாகம் அதிகமாகத் தான் இருந்தது. நாளாக ஆகச் சுற்றுப் புறமும் விசேஷமற்ற வாழ்வும் சாரமில்லாதவை களாகவே தோன்றின.

காந்திஜீ அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு அரசியலைப் பொது ஜனத்தொடர்பு உடையதாக மாற்றியிராத காலம் அது. மெத்தப்படித்த மேதாவிகளின் பொழுது போக்காகவும், பட்டம் பதவிகளுக்கு அஸ்திவார மிடுவதாகவும் அரசியல் விளங்கி வந்தகாலம் அது. தேசியம் என்றால் ஆளவந்த அந்நியரை எதிர்த்துப் போராடி உரிமையைப் பெறுவது என்ற உணர்வு பெற்றிருந்த ஜவஹருக்கு அந்நாளையில் அரசியல் துறையில் இடம் இருந்ததாகத் தெரியவில்லை, அவரும் காங்கிரஸில் அங்கத்தினராகி, அவ்வப்போது கூடிக் கலையும் கூட்டங்களுக் கெல்லாம் போய் வந்துகொண்டுதான் இருந்தார். எப்போதாவது அயல்நாடுகளில் இந்தியர் படுகின்ற அவதிகளைக் குறித்த விவகாரங்கள் தலைதூக்கும் போது நேரு வெகு ஆர்வத்தோடு கலந்துகொள்வார். இத்தகைய சந்தர்ப்பங்கள் மிக அரியனதான்.

பொழுதுபோக்கி உல்லாசம் பெறுவதற்காக நேரு சிலசமயங்களில் வேட்டை ஆடச் செல்வது வழக்கம். காடுகளிலும் வெளிநிலங்களிலும் சுற்றுவதில்தான் அவர் அக்கறை காட்டினாரே தவிர, மிருகங்களைக் சுட்டுத் தள்ளுவதில் அவர் சிரத்தை கொண்டாரில்லை. ஆகவே அவருடைய வேட்டை விவகாரங்கள் பலவும் ரத்தம் சிந்தாத கீர்த்திப் பிரதாபங்களாகத் தான் அமைந்தன. ஆனாலும் ‘குருட்டாம் போக்கிலே’ ஒரே ஒரு தடவை மட்டும் அவர் காஷ்மீர் கரடி ஒன்றைச் சுட்டுக்கொன்று விட்டாராம். அவருக்கு இருந்த ‘கொஞ்ச நஞ்சம்’ வேட்டை ஆர்வத்துக்குக்கூட முடிவு கட்டிவிட்டது. அவர் உள்ளத்தைத் தொட்ட ஓர் நிகழ்ச்சி.

ஓர் சமயம் வேட்டையாடச் சென்ற அவர்காலடியில் வந்து விழுந்தது காயம்பட்ட மான் ஒன்று. மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த மானின் விழிகள் நேருவை நோக்கிப் பரிதாபமாக நிலைத்து நின்றன. கண்ணிர் தேங்கிய தடங்கண்கள் நேருவின் உள்ளத்தைக் கலங்கவைத்தன. பிறருக்குத் தீங்கு நினையா அப்பிராணியின் துயர முடிவு அவர் இதயத்தை உறுத்தியது; நெடுநாள் வரை நீங்கா நினைவாக அவர் கெஞ்சில் குறுகுறுத்தது. அப்புறம் அவர் வேட்டையாடத் துணியவே இல்லை.

அந்நாட்களில்தான் கோகலே ‘ஸெர்வன்ட்ஸ் ஆவ் இந்தியா சொஸைட்டி’யை நிறுவியிருந்தார். அதன் அங்கத்தினர்கள் சொல்ப ஊதியம் பெற்று சேவையையே பெரிதாக மதித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் பொதுப்பணி புரிந்து வந்ததை அறிந்து நேருவியந்தார், எனினும் அச் சபையில் சேர அவர் விரும்பவில்லை. அவர்களுடைய போக்கு மிகவும் மிதப்பண்புடையதாக இருந்தது ஒரு காரணம். தனது வக்கீல் தொழிலே அவர் துறந்துவிட விரும்பாதது மற்றொரு காரணமாம்.

உலகமகா யுத்தம் பிறந்தது. இந்தியாவிலும் பரபரப்பு தலைதூக்கியது. எங்கோ வெகுதொலைவில் தான் யுத்த தாண்டவம் நிகழ்ந்தது. அதன் கோரக்கொடுமைகள் இந்நாட்டைத் தொடக்கூட இல்லே. எனினும் சதிக் குற்றங்களும், துப்பாக்கிப் பிரயோகங்களும், ராணுவத்துக்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் முறைகளும் நாட்டிலே பரவின. வெளிப்படையாக உரத்த குரலெடுத்து பிரிட்டிஷாருக்கு விசுவாச கீதம் பாடினார்கள் ஜனங்கள். ஆனால் உள்ளத்திலே ஜெர்மனியின் வெற்றிச்சேதிகளை அறிந்து ஆனந்தக்களிப்பு பாடிக்கொண்டார்கள். இந்நாட்டினருக்கு ஜெர்மனிமீது திடீர் அபிமானம் பிறந்து விட்டதாகச் சொல்லமுடியாது. “நம்மை அடக்கி ஆளும் அந்நியன் மற்றொரு பலவான் கையிலே சிக்குண்டு. திணறுகிறான். பாவி நன்றாக அனுபவிக்கட்டும்!" என்கிற தாராள மனோபாவம்தான் காரணம். பலவீனர்கள் இத்தகைய மனோபாவத்தால் தாமே வஞ்சம் தீர்க்கும் பொழுது பெறக் கூடிய மகிழ்வைப் பெற்று விடுவதாகக் கருதுகிறார், இதுவும் மனித கபாவங்களில் ஒன்றுதான்.

மீண்டும் அரசியல் விழிப்பு ஏற்பட்டது நாட்டிலே, லோகமான்ய திலகர் சிறையிலிருந்து வெளி வந்ததும் ‘ஹோம் ருல் லீக்’ ஆரம்பித்தார். அன்னிபெசன்ட் அம்மையாரும் ஒரு இயக்கம் தொடங்கியிருந்தார். ஜவஹர்லால் நேரு இரண்டிலும் சேர்ந்து பணியாற்றினர். பெசன்ட் அம்மையாரின் இயக்கத்துக்காகத் தான் அதிகம் பாடுபட்டார். அன்னிபெசன் சேவைகள் இந்திய அரசியலில் தீவிரமாகப் பங்கு பற்றி ஓங்கின. காங்கிரசின் வருஷாந்திரக் கூட்டங்களில் புதிய வேகமும் விறுவிறுப்பும் புகுந்திருந்தன. முஸ்லிம் லீக் காங்கிரசுடன் சேர்ந்து முன்னேறியது. அரசியல் சூழலில் ஓர் மின் சக்தி தோன்றி மிளிர்ந்தது. இந்தியாவின் வாலிப சமுதாயம் அதிக ஊக்கம் பெற்றனர். "கூடிய சீக்கிரம் மகத்தான காரியங்கள் சாதிக்கப்படும்” என்ற நம்பிக்கை பிறந்தது இளைஞர்களின் உள்ளத்திலே.

அன்னிபெசன்ட் அம்மையார் சிறையில் அடைக்கப் பட்டனர். நாடு முழுவதும் பரபரப்புற்றது. ஹோம் ரூல் இயக்கம் எங்கும் பரவியது: பழைய தீவிரவாதிகள் ஈர்த்ததுடன் புதியபுதிய அங்கத்தினர்களையும் தன்வயப் படுத்தியது. மத்தியதர வர்க்கத்தினர் தான் இந்த இயக்கத்தில் ஆர்வம் காட்டினர். இவ் இயக்கம் மக்களின் இதயத்தைத் தொட்டதே இல்லே.

அன்னிபெசன்டைக் கைது செய்த செயல் முதிய தலைமுறையினரையும் நிமிர்ந்து உட்கார வைத்தது. மிதவாதத் தலைவர்கள் பலர் உணர்ச்சி பெற்றார்கள். எனினும் முன் வந்து செயலாற்ற எவரும் துணியவில்லே. நாடு நல்ல தலைமையை எதிர்நோக்கிக் காத்து நின்றது. மாணவர்களுக்கும் வாலிப சமுதாயத்தினருக்கும் நற் போதனைகள் புரிந்து வந்த மிதவாதத் தலைவர் பூரீனிவாச சாஸ்திரி திட்டமிட்டு செயலாற்ற முனைவார் என இளைஞர்கள் எதிர்பார்த்தார்கள். அவரோ மோனநிலையில் ஆழ்ந்து விட்டார் மிதவாதத் தலைவர்களில் சிலர் ஏதோ செயல்புரியக் கிளம்பினர்; ஆனால் விரைவிலேயே பின் வாங்கி விட்டார்கள்.

ஜவஹரின் தந்தை மோதிலால் நேரு கொஞ்சம் கொஞ்சமாக மிதவாதக் கொள்கையை விலக்கிவிட்டுத் தீவிரம் பெற்று வந்தார். 1918-ல் கூடிய லக்ஷ்மணபுரிக் காங்கிரசில் அவர் தான் தலைமை தாங்கினர். அம் மகாசபையில் அரசாங்கத்தை எதிர்த்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று உணர்ந்த மிதவாதிகள் காங்கிரசைப் பகிஷ்கரித்தனர். பிறகு தனி இயக்கமாகப் பிரிந்துவிட்டார்கள்.

அந்நாட்களில் ஜவஹரின் பொதுப்பணியும் அரசியல் சேவையும் சர்வசாதாரண நிலையில் தான் இருந்தன. பொதுக் கூட்டங்களில் பேசத் துணியாது ஒதுங்கிவந்தார் அவர். இந்திய ஜனத்திரளின் முன்னே இங்கிலீஷில் பேசினால் எடுபடாது; ஹிந்துஸ்தானியில் தெளிவாக நீண்ட பிரசங்கம் புரியத் தன்னால் இயலாது என அஞ்சினார் அவர்.

1915-ல் தான் நேரு முதன் முதலாக பொதுக் கூட்டத்தில் சொற்பொழிவாற்ற முன்வந்தார். புதிய சட்டம் ஒன்றை எதிர்த்துப் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நேரு சுருக்கமாக ஆங்கிலத்தில் பேசி முடித்து விட்டார். நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றதும் மேடை மீதே, மக்களின் கண்முன்னாலேயே, தலைவர் தேஜ் பகதுர் சாப்ரூ ஜவஹரை ஆறத் தழுவி உச்சி மோந்து பாராட்டினார். நேரு என்ன பேசினர் அல்லது எப்படிப் பேசினர் என்பதற்காக அளிக்கப்பட்ட பாராட்டு அல்ல அது. நேரு பொதுக்கூட்டத்தில் பேச முன்வந்து விட்டார்; தேசிய இயக்கத்துக்கு மற்றுமொரு பிரசாரகர் கிடைத்துவிட்டார் என்ற ஆனந்தப் பெருக்கு உந்திய செயல் அது.

இந்தியாவில் அரசியல் விழிப்பு ஏற்பட்டிருந்த ஆரம்ப நாட்களில் பேசுவதுதான் பெரிய சேவையாக மதிக்கவிட்டது. செயல் திட்டமிட்டு எந்தத் தலைவரும் நல்ல வழிகாட்ட வில்லை. டாக்டர் சாப்ருவும், பண்டித மதன் மோகன மாளவியாவும் நாட்டு விடுதலைக்கு உரிய வழிகாட்டக் கூடும், காட்ட வேண்டும் என்று நேரு ஆசைப்பட்டார். அவர்களிடம் பேசி அவர்களைச் செயல் பாதையில் அடியெடுத்து வைக்கும்படி ஜவஹர் தூண்டி கொண்டிருந்தார்.

மகனின் செயலைக் கவனித்து வந்த தந்தையின் உள்ளத்தில் கவலே படிந்தது. ஜவஹர் ஓயாது குறை கூறிக்கொண்டிருந்ததும், பேச்சு மட்டும் போதாது, செயல் திட்டங்கள் வேண்டும் என்று தலைவர்களைத் தூண்டி வந்ததும் சேர்ந்து "அவர் தீவிரவாதியாகி விட்டார். வங்காளத்தில் வாழ்ந்த பலாத்காரவாதிகளின் வழியைத் தான் நேருவும் பின்பற்றுகிறார் போலும்” என்ற எண்ணத்தையே உண்டாக்கின.

"செயல் புரிய வேண்டும். செயல் திட்டம் வேண்டும்” என்று ஜவஹர்லால் துடித்தாரே தவிர, என்ன காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்ற தெளிவு அவருக்கும் இருந்ததிலை தான், வங்கத்து இளைஞர்களின் பலாத்காரப் போக்கு நேருவுக்குப் பிடிக்கவில்லை. அவர்களது நடவடிக்கைகள் அவருக்குப் பெருத்த கவலையைத் தான் கொடுத்து வந்தன. மந்தமாக அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு காலத்தை ஓட்டுகிற மிதவாதமும் அவருக்கு எரிச்சல் ஊட்டியது. ஆனாள் அன்றையச் சூழ்நிலையில் வேறு எதுவும் செய்யமுடியாது என்றும் தோன்றியது.

அவருடைய தந்தையும் இத்தகைய மனக்குழப்பத்தை அனுபவித்துக் கஷ்டப்பட்டார். அன்னிபெசன்ட் அம்மையார் சிறையில் தள்ளப்பட்டதும், 1919-் பாஞ்சாலத்தில் நிகழ்த்தப் பெற்ற படுகொலையும் தான் அவரைத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, தொழிலை உதறி எறியச் செய்து படுகளத்தில் குதிக்கத் துண்டின. 1915 முதல் 1917 வரை அவர் உள்ளக்குழப்பம் அதிகரித்து வந்ததால் அடிக்கடி அவருக்கும் ஜவஹருக்கும் இடையே விவாதங்கள் சூடேறி விடுவது வழக்க மாயிற்று. மோதிலால் சீறிவிழுவதோடு தந்தை-மகன் சம்பாஷனைகள் முற்றுப் பெறுவதே இயல்பாயிற்று.

இருண்டு கிடந்த இந்திய அரசியல் வானிலே நம்பிக்கை ஒளி புகுத்த ஒரு ஜோதி பிறந்தது. அந்த ஜோதிதான் காந்திஜீ.

காந்திஜீயை ஜவஹர்லால் நேரு முதல் தடவையாகச் சந்தித்தது 1916-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற லக்ஷ்மணபுரிக் காங்கிரசின் போது தான். காந்தி தென்ஆப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்கள் காரணமாக இந்தியாவில் உள்ளவர்களது போற்றுதலைப் பெற்றிருந்தார். இந்திய தேசீயவாதிகள் அவரை வீரராக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவருடைய கொள்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் இந்திய அரசியலுக்குமிடையே பெரியபிளவு கிடக்கிறது; இரண்டும் சேருவது சாத்தியமில்ல; காந்தி அரசியல் உலகம் எட்டமுடியாத தொலைவிலேயே நிற்க விரும்புகிறார் என்றே பிறருக்குத் தோன்றியது. காந்திஜீயும் காங்கிரஸ் நடவடிக்கைகளிலோ, தேசியப் பிரச்னைகளிலோ நேரடியாகக் கலந்து கொள்ள அப்பொழுது தயாராக இல்லை தென்ஆப்பிரிக்கா சம்பந்தமான பிரச்சனைகள் எழுந்த போது மட்டுமே தீவிரமாகப் பங்குகொண்டார் அவர்.

பின்னர் சம்பரான் என்னும் இடத்தில் பண்ணைக் கூலிகள் சம்பந்தமாக காந்திஜி நடத்திய போராட்டங்களும், அவர் பெற்ற வெற்றிகளும் அரசியல் உலகில் மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கின. காந்திஜீ தமது சத்தியாக்கிரக முறைகளே இந்தியாவிலும் கையாளத் தயாராக இருக்கிறார்: அவரது முறைகள் குறிப்பிடத் தகுந்த வெற்றியையும் பெற்றுத் தருகின்றன எனும் உண்மைகள் எல்லோருக்கும் ஊக்கம் அளித்தன.

அச் சமயத்தில் கவிக்குயில் சரோஜினி நாயுடு நிகழ்த்தி வந்த வீரப் பிரசங்கங்களும் ஜவஹரின் உள்ளத்திலே கிளர்ச்சி உண்டாக்கின. தேசீயம், தாய்நாடுப் பற்று முதலிய விஷயங்களைக் குறித்து கவியரசி வீரமுழக்கம் செய்து வந்தார்.

அயர்லாந்தில் தோன்றிய சுதந்திரக் கிளர்ச்சியும், ஐரிஷ் ஈஸ்டர் புரட்சி'யின் முடிவும் இந்திய அரசியல்வாதிகளுக்கு அறிவு கொளுத்தும் சரித்திரச் சான்றுகளாக விளங்கின. இவற்றுடன், சிந்தனைச் சுடர்கள் மலிந்து கிடந்த அறிவுக் களஞ்சிகளையும். சிந்தனையாளர்களின் புதிய புதிய நூல்களையும் விடாது படித்து வந்ததால் - ஜவஹரின் சிந்தனை நெருப்பும் 'கணகண' என்று ஒளிரத் தொடங்கிவிட்டது. அவருடைய ஆசைத் துடிப்புகள் அடக்க இயலாச் சக்தி பெற்றன.

அதனால் அவர் அனுஷ்டித்த வக்கீல் தொழில் மீது நேருவுக்கு வெறுப்பு உண்டாயிற்று. வக்கீல் தொழிலும் அவரது தேசீய-பொதுப்பணி ஆர்வமும் ஒன்று சேர்ந்து வாழமுடியாது என்று கண்டார் அவர். அவர் தனது முழு நேரத்தையும் பூரணச் சக்தியையும் தாய்நாட்டின் விடுதலைக்காகச் செலவிட்டாக வேண்டும் என்று கருதினார்.

அப்பொழுது தான், கல்கத்தாவின் பிரபல வக்கீலாக விளங்கிய ஸ்ர் ராஷ் பீஹாரி கோஷ் வக்கீல் தொழிலின் மேன்மை பற்றியும் எப்படி முன்னேறலாம் என்பது குறித்தும் தமது மேலான அபிப்பிராயங்களை உபதேசித்தார். சட்ட விஷயமாக ஒரு புத்தகம் எழுதும்படியும், வக்கீல் தொழிலைப் புதிதாக ஏற்றுள்ள நேரு முன்னேறுவதற்கு அது தான் சுலபமான மார்க்கமாகும் என்று கோஷ் ஆலோசனை கூறினர். தாமே புத்தகங்களுக்குத் தேவைப்படுகிற ’ஐடியா'க்களை அவ்வப்போது வழங்கி, ஆவன செய்வதாவும் உறுதிகூறினார். ஆயினும் அவருடைய பேச்செல்லாம் வீண் உபதேசங்களாகவே முடிந்தன. காரணம், நேருவுக்கு சட்டங்கள் சம்பந்தமான புத்தகங்கள் எழுதுவது என்கிற எண்ணமே ’எட்டிக் காயாக’ இருந்ததுதான். “எனது காலத்தையும் சக்தியையும் சட்டங்கள் பற்றிய புத்தகங்கள் எழுதுவதில் பாழாக்குவது போன்ற வெறுப்பான விஷயம் வேறு எதுவும் இருக்கமுடியாது” என்ற கருத்து தொனிக்கும்படி நேரு சுயசரிதையில் குறித்து வைத்திருக்கிறார்.

1916-ம் வருஷம் ‘வசந்த பஞ்சமி’ தினத்தில் இந்தியாவில் வசந்த காலத்தின் வருகையைக் கொண்டாட அமைந்த சுபதினத்திலே-டில்லி நகரில் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையிலும் வசந்தம் வந்தது. அன்று தான் அவருக்கும் கமலாவுக்கும் திருமணம் நிகழ்ந்தது.

அவ்வருஷத்திய கோடை காலத்தை நேருவின் குடும்பத்தினர் காஷ்மீரில் கழித்தனர். குடும்பத்தினரைப் பசுமைப் பள்ளத்தாக்கில் தங்கியிருக்க விட்டுவிட்டு, நேரு உறவினர் ஒருவருடன் மலைப்பரப்பின் அழகுச் செல்வங்களை எல்லாம் கண்டு களிக்கக் கிளம்பினார். பல வாரங்கள் சுற்றித் திரிந்து மகிழ்ந்தார். மலை முகடுகளிடையேயும், குறுகிய தடங்களிலும், எழில் பதுங்கிக் கிடக்கும் பள்ளத் தாக்குகளிலும் அலைந்து களித்தார். இந்த அனுபவம் பற்றி அவர் அழகாக எழுதியிருக்கிறார்.

”உலகின் உச்சியாய் தனிமையில் குறுகியும் நீண்டும் கிடந்த பள்ளத்தாக்குகளில் திரியும் அனுபவம் எனக்கு அப்பொழுதுதான் முதன்முதலாகக் கிட்டியிருந்தது. திபெத் பீடபூமிக்கு இட்டுச் சென்ற பாதைகளில் நடந்தோம். ஸோஜி-லா கணவாயின் மேலே மிக உயரத்தில் நின்று, ஓர்புறம் வளமார்ந்த பசும்வெளிகள் பரந்து கிடப்பதையும், மறுபக்கம் வறண்ட கரடுமுரடான பாறைகள் நிற்பதையும் கண்டோம். இருபுறமும் சுவர்கள் போல் மலைப்பகுதிகள் ஓங்கி உயர்ந்து நிற்க, பனி மூடிய மலைமுகடுகள் ஓர் கோணத்திலே சதாகாட்சி அளித்து மிரள, சிறுசிறு பனிப் பாறைகள் எங்களைச் சந்திக்க வருவதுபோல் சறுக்கி வழுக்கி ஓடிவர, குறுகிய தடங்களின் வழியாக நாங்கள் உயரே, உயரே இன்னும் உயரமாகப் போய்க் கொண்டிருந்தோம். குளிர் காற்று உடலில் குத்தி எடுத்தது. ஆனால், பகல் வேளைகளில் கதிரொளி கதகதப்பாக இருந்தது. எங்கும் கவிந்திருந்த ஆகாய வெளி மிகத் தெளிவாகத் திகழ்ந்ததால், பொருள்களுக்கிடையே உள்ள தூரம் பற்றிய கணிப்பிலே அடிக்கடி நாங்கள் தட்டுக்கெட நேர்ந்தது. உண்மையில் மிகத் தொலைவில் இருந்த பொருள்கள் பல மிக அருகாமையில் இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. தனிமை கனத்தது. எங்களுடன் தோழமை பூண அங்கு மரங்களோ, வேறு தாவர இனங்களோ இல்லை. கொடிய பாறைக் கற்கள் கண்களே உறுத்தி நின்றன. வெண் பனியும், உறைந்த பனிக்கட்டிகளும் மல்கிக்கிடந்தன. அபூர்வமாக எப்போதாவது புஷ்பங்கள் தோன்றி உவகை தந்தன. எனினும், நிர்மானுஷ்யம் பாழ்மையும் கவிந்து கிடந்த இயற்கையின் இத் தனி வெளிகளிலே நான் அபூர்வமான ஓர் ஆனந்தம் பெற்றேன். என் உடம்பிலே புதுச் சக்தியும் உள்ளத்தில் ஓர் மேம்பாடும் புகுந்து நிறைந்துவிட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டது.”

முதல் தடவை இவ்வித ஊக்கமும் உற்சாகமும் ஜவஹர்லால் செளகரியமும் சந்தர்ப்பமும் வாய்த்த போதெல்லாம் காஷ்மீர மலைவெளிகளில் சுற்றி ஆனந்தம் பெறுவதில் ஆர்வம் காட்டி வந்தது அதிசயம் இல்லைதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_3&oldid=1376997" இலிருந்து மீள்விக்கப்பட்டது