நம் நேரு/அத்தியாயம் 4

அத்தியாயம் 4.


முதலாவது உலக யுத்தம் முடிந்துவிட்ட பிறகு இந்தியாவின் நிலைமையிலும் ஒரு மாறுதல் காணப்பட்டது. தொழில் அபிவிருத்தி ஏற்பட்டு, முதலாளிவர்க்கம் பணபலம் பெற்று வளர்ந்திருந்தது. யுத்தகாலத்தில் கொள்ளையடித்து ருசிகண்டிருந்த ஒரு சிலர் மேலும் பணம் சேர்க்கவும் சமுதாயத்தை ஆட்டிவைக்கும் சக்தியை வளர்க்கவும் துடித்தனர். பேராசை வெறி பிடித்த இவர்களால் அமுக்கி நசுக்கப்பட்ட சமூகத்தின் மிகப்பலர் தங்களை அடக்கி ஒடுக்குகிற நாசச்சுமைகள். நீங்க வழி பிறக்காதா, என்று ஏங்கித் தவித்தார்கள். மத்தியதர வர்க்கத்தினரோ அரசியலில் பெரும் மாறுதல் ஏற்பட்டு சுயநிர்ணய உரிமைகள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுதந்திரம் கிடைத்தால், தங்கள் வளர்ச்சிக்குச் சாதகமான வழிகள் பல தாமாகவே திறக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள், சட்டபூர்வமான கிளர்ச்சிகளும், அரசியல் உரிமைப்போராட்டங்களும் இந்தியா பூராவும் பரவி இருந்தன. ஆகவே நாட்டினர் சுயேச்சை, சுயாட்சி, பிறப்புரிமை என்றெல்லாம் பேசி மகிழ்ந்து வந்தார்கள்.

இந்த மனப்புழுக்கம் சில பிரதேசங்களிலுள்ள விவசாயிகளிடையே முற்றித் தனிப்பட்ட செயல் முறைகளிலே வெடித்தது. பஞ்சாப் மாகாணத்தில் அமுல் நடத்தப்பெற்ற கட்டாய ராணுவஆள் சேர்ப்பு முறை விதைத்திருந்த கசப்பு ஒடுங்காமல் வளர்ந்துகொண்டிருந்தது. பட்டாளத்தில் சேர்க்கப்பட்டு கப்பல்களில் வெளிநாடு சென்று மீண்ட வீரர்கள் இப்போது அதிகாரிகளின் ஆக்கினைக்குத் தகுந்தாற்டோல் ஆடும் பாவைகளாக விளங்கவில்லை. அவர்கள் மனப்பண்பு பெரிதும் வளர்ச்சியுற்று விட்டது. அதனால் அவர்களிடையே அதிருப்தியும் வளர்ந்தது.

இந்த விதமாக இந்தியாவின் பலதரப்பட்ட மனிதர்களும் எதையோ எதிர்பார்த்தார்கள்; காத்திருந்தார்கள்; ஆசையும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் அச்சமும் கவலையும் பதுங்கி உறைந்தது அவர் தன் நெஞ்சிலே.

ஆளும் இனம் இவற்றை எல்லாம் உணராமல் இருக்க முடியுமா? போட்டார்கள் ஊரடங்குச் சட்டங்களை, தீட்டினார்கள், ‘ரெளலட்பில்’களை, சட்டம் உறுதி கூறும் பாதுகாப்புகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இஷ்டப்பட்டால் யாரையும் கைதுசெய்யலாம். விசாரணை இல்லாமலே ஜெயிலில் தள்ளலாம் என்றெல்லாம் உரிமை அவர்களுக்கு உரிமை அளித்தது ‘ரெளலட்பில்’. புகைந்துகொண்டிருந்த இடத்திலே பெருநெருப்பு பற்றும்படி பெட்ரோலேக் கொட்டியது போலாயிற்று அரசினரின் போக்கு. கோபக்கொதிப்பு அலை இந்தியா பூராவும் மோதி எழுந்தது. எல்லோரும் எதிர்த்தார்கள், சர்க்கார் தயவைப்பெற விரும்பிய மிதவாதிகள் கூட எதிர்ப்புக் காட்டினார்கள். ஆனாலும் ஆளவந்த அந்நியர்கள் தங்கள் இஷ்டம்போல் சட்டம் செய்து தீர்த்தார்கள். மூன்று வருஷங்கள் இந்நிலை நீடித்தது. இந்திய சரித்திரத்திலேயே முக்கியமான கட்டம் அது. 1857 இந்தியப் புரட்சிக்குப் பிறகு இந்நாடு அவ்விதப் பெருங்குழப்பம் அனுபவித்தது இம்மூன்றாண்டுகளில்தான் என்று நேரு எழுதியிருக்கிறார்.

அப்பொழுது 1919-ம் வருஷம்...

அவ்வருஷ ஆரம்பத்தில் காந்திஜீ கடுமையானநோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்து தேறியிருந்தார். அங்நிலையிலும் அவர் வைஸிராய்க்கு ஒரு கடிதம் எழுதினர். ராஜப்பிரதிநிதி புதிய ரெளலட்பில்களுக்குத்தன் ஆமோதிப்பை அளித்து, அதைச் சட்டமாக்க வேண்டா மென்று காந்திஜீ கெஞ்சிக் கேட்டிருந்தார். வைரோய் வேண்டுகோளைப் புறக்கணித்து விடவே, காந்திஜீ அகில இந்திய போராட்டம் ஒன்றைத் துவக்கித் தலைமை வகித்து நடத்த உறுதி கொண்டார்.

சத்தியாக்கிரக சபை ஒன்றை நிறுவினார் காந்தி. ரெளலட் சட்டத்தையும் மேற்கொண்டு பிறப்பிக்கப்படக் கூடிய சகல சட்டங்களையும் மீறுவது, ஜெயில் - வாசத்தை வலிய ஏற்பது என்கிற வைராக்கியம் பூண வேண்டும் அச்சபையின் அங்கத்தினர்கள்.

இந்தச் செய்தியைப் பத்திரிகைகளின் மூலம் அறிந்த ஜவஹர்லால் நேரு களிபேருவகை எய்தினார். நாட்டில் நிலவிய தேக்கநிலை மாற ஒரு வழி பிறந்துவிட்டது, அது நேரடியாக எதிர்க்கும் போராட்டமாகவும் இருந்தது. ஆகவே, சத்தியாக்கிரக சபையில் உடனடியாகச் சேர்ந்து விடுவது என்று உற்சாகத்தோடு தீர்மானித்தார் நேரு. அவருடைய உற்சாகத்தியிலே பச்சைத் தண்ணீர் கொட்டப்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை!

மோதிலால் நேரு இப்புதிய திட்டத்தை ஆர்வமுடன் வரவேற்க வில்லை. புதிய யோசனை எதையுமே அவர் சந்தேகக் கண்ணோடுதான் நோக்கினர். தீரயோசித்து முடிவுகாணும் பண்புடைய தந்தை சத்தியாக்கிரக சபையைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க அதன்மீது விருப்பமின்மையே உண்டாயிற்று அவருக்கு. தனது செல்வ மகன் ஜெயில்வாசம் அனுபவிக்க நேரிடுமே என்கிற எண்ணம் அவர் இதயத்தை உலுக்கியது. இருவரிடையும் மனவேற்றுமை நீடித்தபோதிலும் சுமுகமாகப் பழகவே முயன்றார். ஜெயிலில் தரையில்தான் படுத்துறங்கவேண்டியிருக்கும், அந்த அனுபவம் எத்தனைக்கஷ்டம் விளைவிக்குமோ என்ற கவலை தந்தையைப் பெரிதும் வாட்டியது. அதன் தன்மையை உணர்வற்காக மோதிலால் சில இரவுகள் வெறுந்தரையில் படுத்துத் தூங்க முயன்றார் என்கிற விஷயம் புதல்வருக்குப் பின்னர்தான் புரிந்தது. இதிலிருந்தே தந்தை மகனிடம் கொண்டிருந்த அன்பின் அளவை ஓரளவு உணரலாமன்றோ?

எப்படியும் சத்தியாக்கிரக இயக்கத்தில் பங்கு கொள்வது என்று ஜவஹர்லால் முடிவு செய்துவிட்டார். மோதிலால் நேரு காந்திஜீக்குக் கடிதம் எழுதி அவரை அலகாபாத்துக்கு வரவழைத்தார். இருவரும்நெடுநேரம் பேசினார்கள். என்ன பேசினர்கள் என்பது நம் நேருவுக்குத் தெரியாது. முடிவில் காந்திஜீ ஜவஹரிடம் அவசரப்பட வேண்டாம் என்றும், தந்தைக்கு மனக் கஷ்டம் தரக்கூடிய முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் ஆலோசனை கூறினர். காந்திஜீயின் புத்திமதி ஜவஹருக்கு வருத்தம் அளிக்கத் தான் செய்தது.

ஆனாலும், எதிர்பாராது நிகழ்ந்த சம்பவங்கள் அவரது பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டன. சத்தியாக்கிரக சபை திடீரென்று தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அகில இந்திய ஹர்த்தால்கள்; வியாபாரத்துறையில் பெருந்தேக்கம்; டில்லியிலும் அமிருதசரசிலும் போலீசாரும்ராணுவத்தினரும் நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்கள்: ஜாலியன்வாலா பாக்படுகொலை; பஞ்சாபில் ஊரடங்கும் சட்டம், எங்கும் பீதி, பரபரப்பு. அடக்கு முறை, தடியடி தர்பார்-இந்தவிதமாக இந்தியா படாதபாடு பட்டது.

பஞ்சாப் படுகொலையும், அது சம்பந்தமான விசாரணைகளும் மோதிலால் நேருவின் மனப் பண்பை அடியோடு மாற்றிவிட்டன. மிதவாதப் போக்கில் அதிருப்தி கொண்டிருந்த தந்தை 1919-ம் வருஷ ஆரம்பத்தில் ‘இண்டிப்பெண்டன்ட்’ என்றபத்திரிகையைத் தொடங்கி சொந்தப் பொறுப்பில் நடத்தி வந்தார். அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஜவஹர்தான் பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தார். பஞ்சாப் விவகாரங்கள் தந்தையையும் மகனையும் அப்பிரதேசத்துக்கு இழுத்துச் சென்றன. அச் சந்தர்ப்பத்தில் பத்திரிகை நிலைமை சீர்குலைய நேரிட்டது. பிறகு தேறவே இல்லை. அவ்வப்போது பிரகாசமான பருவங்கள் தலைதூக்கினாலும் பத்திரிகை தெம்புடன் வாழ வழியில்லாது போயிற்று. இரண்டு பேரும் சிறை வாசம் அனுபவிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதும், 1923 ஆரம்பத்திலே பத்திரிகை உயிரை விட்டுவிட்டது.

1919-ல் கூடிய அமிருதசரஸ் காங்கிரஸின் தலைவர் மோதிலால்நேரு தான். அது தான் முதல் ‘காந்தி காங்கிர’ சும் கூட. திலகரும் அதில் கலந்து முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். என்றாலும் காங்கிரஸ் பிரதிநிதிகளும், வெளியிலுள்ள மக்கள் கூட்டமும், காந்தியின் தலைமைக்காகவே காத்திருந்தனர். மகாத்மா காந்திக்கு ஜே! என்ற கோஷம் அரசியல் வானிலே அதிறத் தொடங்கியது அந்தக் காங்கிரஸிலிருத்து தான்.

1920-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் முதல் தேதியன்று காந்திஜீ கிலாபத் இயக்கம் சம்பந்தமாக ஒத்துழையாமைப் போராட்டத்தைத் துவக்கத் திட்டமிட்டிருந்தார். அன்று காலையில் தான் பம்பாயில் திலகர் இறந்து போனார். ஸிந்து மாகாணத்தில் பிரயாணம் செய்து விட்டு காந்திடம் காந்திஜீயும் ஜவஹர்லாலும் அன்று தான் பம்பாய் வந்து சேர்ந்திருந்தனர். பம்பாய் நகரமே ஒருங்கு திரண்டு தங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான தலைவர் திலகருக்கு இறுதி மரியாதை செய்தது. அச் சடங்கிலே காந்தியும் நேருவும் கலந்து கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_4&oldid=1376998" இலிருந்து மீள்விக்கப்பட்டது