நற்றிணை-2/இணைப்பு-1
இணைப்பு—1
234. ஆம் செய்யுள்
காணாமற் போன இச்செய்யுள், குறுந்தொகையுள் 307 ஆம் செய்யுளாக அமைந்துள்ள ஒன்பதடிச் செய்யுளாக இருக்கலாம் என்று, முன்னர்க் (பக்கம் 80 இல்) கூறினோம். அச்செய்யுள் இது.
மறந்தனர் கொல்லோ தாமே!
- பாடியவர் : கடம்பனூர்ச் சாண்டிலியன்.
- திணை : பாலை.
- துறை : பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
[(து-வி.) தலைவன் பிரிந்து போயின காலத்தில், தலைமகள் அவனே நினைவாகப் பெரிதும் வாடி நலன் அழிகின்றனள். அவள் நிலையைக் காணப் பொறாத தோழி, 'நின் இச்செயல் நன்றன்று' என்று கடிந்து கொள்ளுகின்றாள். அவளுக்குத் தலைவி தன் நிலையைச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]
வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னாப் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே—களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
5
நிலையுயர் யாஅம் தொலையக் குத்தி
வெண்நார் கொண்டு கைசுவைத் தண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முயங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே!
தெளிவுரை : தோழீ! பிறையானது வளையை உடைத்தாற் போன்ற வளைவினை உடையதாகிக் கன்னிப் பெண்கள் பலரும் தொழுது போற்றச், செவ்விதான இடத்தையுடைய வானத்திடத்தே விரைவாகத் தோன்றி, எனக்குத் துன்பந் தருவதாகவும் பிறந்துவிட்டது. களிரானது, தன்னுடைய வருந்திய நடையினையுடை இளையபிடியின் வருத்தத்தைத் தாங்கமாட்டாதாய், உயரமாக வளர்ந்துள்ள யாமரத்தை வீழுமாறு குத்தி, அதன் வெண்மையான நாரை உறித்துக்கொண்டும் நீரைப் பெறாதாய், ௮த்துன்பத்தால் வருந்தியபடி தன் கையைச் சுவைத்த படியே அண்ணாந்து நின்று, வருந்துதலைக் கொண்ட நெஞ்சத்தோடு முழக்கமிடும். கடத்தற்கு அரிதான அத்தகைய வழியூடே நாம் அழவழப் பிரிந்து சென்றோரான அவர்தாம், நம்மை முற்றவும் மறந்தே போயினாரோ? என்பதாம்.
கருத்து : அவர் மறந்தால் யான் தாளேன் என்பதாம்.
சொற்பொருள் : வளை – கைவளை. செவ்வாய் – செவ்விய இடத்தையுடைய. ஐ என – திடுமென; விரைவாக. உயங்கு நடை – வருந்தித் தளர்ந்த நடை. யா௮ம் – யாமரம்; இதன் பட்டை ஓரளவு நீர் வேட்கை போக்கும் என்பர். அழங்கல் – வருந்துதல் கொண்ட.
விளக்கம் : வானத்தெழுந்த பிறை நிலவு, அவள் பெருகிய துயரத்தை மேலும் கனன்று எரியச் செய்ய அவள் துயரத்தால் வெதும்பினாள் என்பதாம். களிறு தன் பிடியின் துயரத்தைப் பார்த்துத் தாங்காமல் யாமரத்தின் பட்டையை உரிந்துத் தர முயன்றும், அதுவும் நீர்ப்பசையற்றுத் தோன்றக் கண்டு வருந்திக் கைசுவைத்து அண்ணாந்து முழக்கமிடும் வழி யென்றது, வழியின் பாலைத் தன்மையைக் காட்டுவதாகும். பலர் தொழத் தோன்றும் நிலவு எனக்குமட்டும் துயரமாவது போலப், பலரும் பாராட்டும் பொருட்டுப் பொருள்தேடி வந்து அறமாற்றப் பிரிந்த அவர் செயல்தான், எனக்குமட்டும் துன்பமாகின்றது என்று சொல்லி அவள் நலிகின்றனள் எனலாம். பிடியைப் பேணக் களிறு துடிக்கின்ற காட்டுவழி செல்பவராயிருந்தும், அவர்பால் அவ்வாறே நம்துயரைப் போக்கவேண்டும் என்னும் நினைவு தோன்றாததேன் என்று நினைந்தும் வாடுகின்றாள் ௮வள் என்க.
பயன் : இதனால், மேலும் சிலகாலம் பொறுத்திருந்து, அவன் வந்ததும், அவள், தன் துயரம் தீர்வாள் என்பதாம்.