நற்றிணை-2/400
400. கெடுவறியாய் நீயே!
- பாடியவர் : ஆலங்குடி வங்கனார்.
- திணை : மருதம்.
- துறை : பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின்று இன்று அமையாம்' என்று சொன்னமையால் என்பது.
வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும்
நெல்விளை கழனி நேர்கண் செறுவின்
அரிவனம் இட்ட சூட்டயல் பெரிய
இருஞ்சுவல் வாளை பிறழும் ஊரே!
நின்னின்று அமைகுவென் ஆயின் இவண்நின்று
5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்கெட அறியா தாங்கு சிறந்த
கேண்மையொடு அளைஇ நீயே
கெடுவறி யாய்என் நெஞ்சத் தானே!
10
தெளிவுரை : வாழையின் மெல்லிய தாற்றின் நுனியிலே தொங்கும் பூவினை, அசையச் செய்கின்ற அளவுக்கு நெற்பயிர் ஓங்கி வளர்ந்திருக்கின்ற வயலிடத்தின், கண்ணுக்கு இனிதான சேற்றிலே, கதிரறுக்கும் உழவர்கள் அறுத்துப்போட்ட அரிச்சூட்டின் அயலிலே, பெரிய கரிய பிடரையுடைய வாளைமீன் பிறண்டபடி இருக்கும் வளமான ஊரனே! நின்னையின்றி யானும் இங்கே இருப்பேனாயின், இவ்விடத்திலே இருந்தும் இனிமையன்றித் துயரமே விளைவிக்கும் நோக்கத்துடனே எனக்கு என்ன பிழைப்புத்தான் உண்டென்று சொல்வாய்? மறம் பொருந்திய சோழர்களது உறையூரின் அவைக்களத்தே அறமானது கெடுதல் என்பதை அறியாதாய் நிலைபெறுமாறு போலச், சிறந்த நட்புரிமையோடு அளவளாவி என்னை இன்புறுத்திய நீதான் என் நெஞ்சத்தினின்றும் நீங்குதல் அறிய மாட்டாய்காண்!
கருத்து : அதனாலே, 'விரைவிலே எனக்கும் வந்து அருள் செய்வாயாக' என்று வேண்டினளாம்.
சொற்பொருள் : தோடு – தாறு; வாழையின் இலையும் ஆம்; அப்போது வளைந்து தொங்கும் வாழை இலையின் நுனியை உயர்ந்து வளர்ந்த நெற்பயிர் மோதி மோதி அசைக்கும் என்று கொள்க. செறு – சேறு. இருஞ்சுவல் – கரிய பிடரிப்புறம். இன்னாநோக்கம் – துன்புறுவதான கருத்து; துன்புறுவது அவனைக் காணாமையால். 'அவை' என்றது, உறையூர் அறமன்றினை. அளைஇ – அளவளாவி மகிழ்ந்து. கெடு அறியாய் – நீங்கற்கு அறியாய்.
உள்ளுறை : வாழையின் தொங்கும் பூவை வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அசைக்கும் வயலிலே, மள்ளர்கள் அறுத்துப் போட்ட கதிர்ச்சூட்டின் பக்கத்தே வாளை மீன்கள் பிறழும் வளமான ஊர் என்றனர். வாழையின் பூவை வளர்ந்து அசைத்த நெற்பயிர்போலத் தலைவியின் காதல்வாழ்வைத் தன்னுடைய இளமை நலத்தால் படர்ந்து அலைவித்தனள் பரத்தை; வாயிலர்கள் அவள் உறவை முடித்துப் போட்டது கதிர் அறுத்துப்போட்ட சூட்டினைப் போன்றதாம். சூட்டயலிலே வாளைமீன் பிறழ்தல் போலப் புதிய பரத்தையர் அவள் எதிரேயே அவனைக் கொண்டு செல்லக் காத்திருப்பவராயினர் என்பதாம்.
விளக்கம் : 'வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி' என்றது, நெல்லானது செழித்து வளர்ந்துள்ளபோது, வாளையின் மெல்லியவான தாற்றின் நுனிப் பூவானது கவிந்து வந்து அவற்றின் அளவுக்குத் தாழவும், அந்நெற்பயிர் காற்றால் அசையும்போது, அப்பூவையும் ஆட்டுவிக்கும் என்றனர். இளமைச் செழுமைக் கவினாலே செருக்குற்ற பரத்தையரைக் கண்டதும், தலைவன் தன் தகுதி தாழ்ந்து அவர் உறவை நச்சிவந்து சார, அவர்கள் தம் அன்னையரால் ஏவும்பொழுதெல்லாம் அவனை அதற்கேற்றபடி ஆடச்செய்வர் என்பதாம்.
சூட்டயலிலே வாளை பிறழும் என்றது, அடுத்து வரும் தன் அழிவை நினையாத அறியாமையால் ஆகும். அவ்வாறே பரத்தையர் பலரும் தலைவனைச் சூழ்ந்து ஆடியும் பாடியும் அவனைக் கவர்தற்கு முயல்வர் என்பதாம். அன்றித் தன்னோடு உறவாடியிருந்த நெற்பயிர் அறுப்புண்டு வெளியேபோவது கண்டும், கவலாது பிறழும் வாளை மீன்போல, தலைவன் பிரிவைக் கண்டும் கவலாது, மீண்டும் அவனைத் தன்பால் ஈர்க்க முயன்றனள் பரத்தை என்பதுமாம்.
பயன் : இதனால், தலைவன் அவள்பால் வெறுப்பு அடையாதவனாக மீண்டும் அவளை விரும்பி வருதலும் கூடும் என்பதாம்.
இத்தொகை ஒன்பதடிச் சிறுமையாகப் பன்னிரண்டு அடிகாறும் உயரப் பெற்றது;
இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
நற்றிணை நானூறு மூலமும்
புலியூர்க் கேசிகன் தெளிவுரையும்
முற்றுப்பெற்றன.