226. மரஞ்சாக மருந்து கொள்ளார்!

பாடியவர் : கணியன் பூங்குன்றார்; கணிபுன் குன்றனார் என்னும் பாடம்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

[(து-வி.) தலைமகனது பிரிவிடையே மெலிந்தாளாகிய தலைவியிடம் சென்று, 'இன்னுஞ் சிறிது காலம் வலிதிற் பொறையோடு இருப்பாயாக' என்கின்றாள் தோழி. அவளுக்குத் தன் வருத்தமிகுதியானது தோன்றத் தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்
பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்!
நாந்தம் உண்மையின் உளமே; அதனால்,
தாஞ்செய் பொருளளவு அறியார் தாங்கசிந்து 5
என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்
சென்றோர் மன்ற, நங்காதலர்! என்றும்
இன்ன நிலைமைத் தென்ப
என்னோரும் அறிய இவ் உலகத் தானே!

தெளிவுரை : அழகிய நுதலை உடையவளே! இவ்வுலகத்திலேயுள்ள மாந்தர்கள், மரம் பட்டுப் போகுமாறு, அதனிடத்தே உளதான மருந்துக்காகும் பகுதிகளை எல்லாம் முற்றவும் எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள்; உயர்வான தவத்தைச்செய்வாருங் கூடத், தம்முடைய உடலது வலிமையானது முற்றவும் கெட்டுப்போகும் எல்லைக்கண்ணும் தொடர்ந்து அத்தவத்தைச் செய்ய மாட்டார்கள். தம் நாட்டுக் குடி மக்களின் வளமெல்லாம் முழுவதும் கெட்டு போகும் வண்ணம், அவரிடமுள்ள பொன்னை எல்லாம் நாடாளும் மன்னர்கள் முற்றவும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இவற்றை நீயும் அறிவாய் அல்லவோ! நாம் அவர் நம்பால் கொண்டுள்ள அன்பினது தகைமையினாலேயே உயிர் வாழ்கின்றோம் ஆதலினாலே,

"தாம் செய்யும் பொருளினது அளவும் அதனாலே அடையவிருக்கும் பயனும் பற்றித் தெளிவாக நம் காதலராகிய அவரும் அறியாராயினர்; பொருளீட்டுதல் ஒன்றே செயத்தக்கதாவது என்று தாம் அதன்பால் மனநெகிழ்ச்சி பெரிதும் உடையராயினர்; வெயிலானது நிலைகொள்ளுதலாலே நெடிதுபட்டுக், கோடையின் வெம்மையில் அழகிழந்த சுரத்தின் வழியும் பிற்பட்டு ஒழியுமாறு, அதனையும் கடந்து, அதற்கு அப்பாலுள்ள நாட்டிற்கும் அவர் சென்றனர். எக்காலத்திலும் ஆடவரது நிலைமை இப்படிப்பட்டதே என்பார்கள் உலகத்தார். இதனை இவ்வுலகினிடத்து யாவருமே அறிவர் கண்டாய். எனவே, யானும் அவர் மீண்டுவரும் வரையும் பொறுத்திருப்பேன் என்று அறிவாயாக."

சொற்பொருள் : 'மரம்' என்றது மருந்துப் பயனுள்ள மரத்தை. உரம்–உள்ள வலிமை. வளம்–வளமை. கசிந்து–நெகிழ்ந்து. என்றூழ்–வெயிலின் வெம்மை. ஒழிய–பிற்பட்டுப் போக; அஃதாவது அதனைக் கடந்து. என்னோரும்–எல்லாரும்.

விளக்கம் : "பொருள் ஈட்டி வருவது இன்பநுகர்வின் பொருட்டாகவே அன்றோ! ஆயின், அதற்கு இன்றியமையாதேமாகிய யாம், அவர் பிரிவாலே நலிவுற்று அழிந்தபின் அதுதான் வாய்ப்பதாகுமோ? என்னை இவ்வாறு நலியச் செய்துட்டு எந்த இன்ப நுகர்ச்சியை விரும்பிப் பொருளீட்டச் சென்றனரோ, நம் காதலர்?" என்று உவமைகளால் தன் நிலையையும், தன்னைப் பிரிந்த தலைவனின் தன்மையையும் தலைவி விளக்குகின்றாள்.

பின்னும் மருந்து கொள்ளக் கருதி, மருந்து மரத்தை மாந்தர் முற்றவும் சிதைத்துக் கொள்ளார்; வலிமை பெற்று மீளவும் உயர்தவத்தைத் தொடரக் கருதியே வலிமை இழந்தபோது அதனைக் கைவிடுவர்; மீண்டும் வரிவாங்கும் பயனைப் பெறக்கருதியே அரசரும் தமக்குரிய இறையை அளவோடு பெறுவர்; இதுதான் உலக இயல்பு. தமக்கு நிலையாகப் பயன்படுவதான ஒன்றை எவருமே முற்றவும் அழித்தற்கு மனம் ஒப்பார். இருப்பவும், அவர், நம் காதலர், நம்மைப் பிரிந்து போய் இவ்வாறு வருத்தினரே என்று தலைவி நினைத்து மனம் நோகின்றாள்.

"இவ்வாறு உளம் நைந்தாளாயினும், உலகத்து ஆடவர் தன்மை இதுவென்று சான்றோர் கூறுவராதலின், அதனை உலகத்து எல்லோரும் அறிவர். ஆதலின், இதற்கு அவரை நோவதாலும் பயனில்லை; ஆற்றியிருத்தலே செயத்தக்கது" என்று முடிவிற்கூறித் தான் அமைதி கொள்ளவும் முயல்கின்றாள் என்று கொள்ளுக.

"வினையே ஆடவர்க்கு உயிரே! வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" என்பது குறுந்தொகை (135) இந்த நெறியைப் போற்றுவாள், 'நாம் தம் உண்மையின் உளமே' என்றாள். மெய்ப்பாடு, அழுகை; பயன், அயா வுயிர்த்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/226&oldid=1698389" இலிருந்து மீள்விக்கப்பட்டது