நற்றிணை-2/227
227. அருளே அலராகின்றது!
- பாடியவர் : தேவனார்; பூதன் தேவனார் என்றும் பாடம்
- திணை : நெய்தல்.
- துறை : வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகத் தோழி தலைமகனை வரைவுமுடுகச் சொல்லியது.
[(து-வி.) தலைவியை மணஞ்செய்து கொள்ளுதலிலே மனத்தைச் செலுத்தாது, களவுப் புணர்ச்சியிலேயே மனங்கொண்டவனாக ஒழுகிவரும் தலைவனிடம், தோழி தலைவியின் நிலையை எடுத்துக் கூறி, அவளை வரைந்துவந்து மணந்து கொள்ளுமாறு தூண்டுவதாக அமைந்த செய்யுள் இது.]
அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்த
இன்னுயிர் கழியினும் நனியின் னாதே!
புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த
பின்னேர் ஓதியென் தோழிக்கு அன்னோ!
படுமணி யானைப் பசும்பூண் சோழர்
5
கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவில் புள்ளொலித்து ஓவாத்
தேர்வழங்கு தெருவின் அன்ன
கௌவையா கின்றது ஐயநின் அருளே!
தெளிவுரை : ஐயனே! புன்னை மரங்கள் செறிந்துள்ள அழகிய கானற் சோலையிடத்தே, நீ குறித்தபடியே பல காலத்தும் வந்து, நின்னையும் இன்புறுத்தியவள், பின்னலிட்ட அழகிய கூந்தலையுடையாளான என் தோழி! அவளுக்கு, ஐயோ! ஒலிக்கின்ற மணியையுடைய யானையினையும், பசும்பொன்னாலாகிய பூண்களையும் உடையவர் சோழர். அவருக்கு உரித்தானது, கொடிகள் அசைந்தாடியபடி விளங்கும் தெருக்களைக் கொண்டதான ஆர்க்காடு என்னும் பேரூர். அவ்வூரிடத்தே, கஇளையுடைய தான குடங்களிலே வண்டினம் மொய்த்து நீங்காதபடியே இருக்கும். இடையறாது தேர்கள் செல்லுகின்ற அவ்வூர்த் தெருவின்கண் விளங்கும் பூசலைப்போல விளங்குகின்றது, நின் அருளாலே என் தோழிக்கு இவ்வூர்த் தெருவின்கண் எழுந்திருக்கும் அலர் உரைகளின் ஆரவாரம். 'அறிவுடையோர் என்பவர் எல்லாரும் அறநெறியிலே நிற்பார் அல்லர்’ என்று பலரும் கூறுவர். அதுதான் நின்னதும் ஆயின், அவளது சிறந்ததான இனிய உயிர்தான் இறந்துபட்டதன் பின்னரும், இப்பழிச்சொற்கள் அவள் குடிக்கும் மிகவும் துன்பம் தருவதாகிய தன்மையது என்றேனும் அறிவாயாக. 'அவள் இறந்து படாவாறும், அலர் நிற்குமாறும் விரைந்து வந்து வரைந்து மணந்து வாழ்விப்பாயாக!
சொற்பொருள் : அறிந்தோர் – அறிதற்குரிய அறநெறிகளின் கூறுபாடுகளை அறிந்தோரான் நம் காதலர். அறனிலர் – அறன் தழுவிய நெறியின் கண்ணே நிற்பாரல்லர்; களவின்கண் கூடிய தலைவியை முறைப்படி வரைந்து கொள்ளலே அறத்தொடு பட்டது; அதனை மறந்தமையின் அறனிலர் என்றனள் போலும். 'இன்னுயிர் கழியினும் இன்னாதே' என்றது, அவள் பிறந்த குடியிடத்தே உள்ளார்க்கு நீங்காத பழியாகி வருத்தந் தருதலினால். புணர்குறி – சேர்தற்கு என்று குறித்த குறியிடம். படுமணி – ஒலிக்கும் மணி. தடவு–கள்சாடி ; அல்லது கட்குடம். 'புள்' என்றது வண்டினை.
விளக்கம் : ஆர்க்காட்டுத் தெருவிலே, கட்குடிப்பவர் எப்போதும் கூடியிருத்தலாலும், தேர்களின் செலவு மிகுந்திருத்தலாலும் உளதாகும் ஆரவாரத்தைப் போல, உங்கள் களவுறவைப் பற்றிய பழிச்சொற்களைப் பற்றிய பூசலும் நீங்காது மிகுவதாயிற்று என்பதாம். 'ஆர்க்காடு' சோழர் பேரூர்களுள் ஒன்று என்பது இதனுள் கூறப்படுகின்றது. தொண்டை நாட்டு ஆர்க்காட்டிலும், பாண்டி நாட்டு ஆர்க்காட்டிலும் வேறுபடுத்திக் காட்டுதற் பொருட்டு இதனைச் 'சோழர் ஆர்க்காடு' என்றனர். இது காவிரிக்குத் தென்கரையில் உள்ளதென்பர் ஔவை அவர்கள். இதனைக் கேட்டதும் தலைமகன் மனங்கலங்கியவனாகத் தலைவியை வேட்டு வருதலை உளங்கொள்வான் என்பது இதனால் ஏற்படும் பயன் ஆகும்.
'அறிந்தோர் அறனிலர் என்றலின், சிறந்த இன்னுயிர் கழியினும்' என்பதற்கு, 'உங்கள் களவு ஒழுக்கத்தை அறிந்தவர் நின்னை அறனில்லாதான் எனப் பழித்தலின், அதுபொறாதே அவள் இன்னுயிர் கழிதலும் கூடும்' எனத் தலைவியின் காதல் மேம்பாட்டைக் கூறியதும் ஆம். 'நனி இன்னாதே' என்பதற்கு, அப்படி அவள் இறப்பின் அப்பழிதானும் நின்னைச் சூழும் என்று எச்சரித்த தென்றும் உட்பொருள் கருதலாம்.