228. நமக்கு அருள மாட்டானோ?

பாடியவர் : முடத்திருமாறனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

[(து-வி.) சிறைப்புறமாக வந்து நிற்கும் தலைமகன் கேட்டுத், தலைவியை விரைவிலே வந்து மணமுடிப்பதிலே ஈடுபடல் வேண்டும் எனக் கருதும் தோழி, தான் தலைவியிடம் கூறுவாள் போல் இவ்வாறு கூறுகின்றனள்.]


என்னெனப் படுமோ தோழி! மின்னுவசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக்
கண்டூர்பு விரிந்த கனையிருள் நடுநாள்
பண்பில் ஆரிடை வரூஉம் நந்திறத்து!
அருளான் கொல்லோ தானே—கானவன் 5
சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம்
வரிகொள் சாபத்து எறிகணை வெறீஇ
அழுந்துபடு விடரகத்து இயம்பும்
எழுந்துவீழ் அருவிய மலைகிழ வோனே!

தெளிவுரை : தோழி! கானகத்தே வாழ்வோனான வேட்டுவனது முதுகைப் போலத் தோன்றும், பெரிதான துதிக்கையை உடையதான வேழமானது, வரிந்து கட்டுதலையுடைய வில்லிலிருந்து ஏவப்படும் அம்புக்கு அச்சங்கொண்டது. அதனாலே, ஆழ்ந்துபட்டுள்ள மலைப்பிளவினிடத்தே மறைவாகச் சென்று நின்றபடி பிளிறா நின்றது. அத்தன்மைத்தான, மேலெழுந்து வீழ்கின்ற அருவிகளையுடைய மலைநாட்டிற்கு உரிமையுடையோனானவன் நம் தலைவன். அவன், மின்னலிட்டதாய் இருளைப் பிளந்து கொண்டு மேகங்கள் முழக்கமிடுகின்றதும், தாம் சூலுற்று முதிர்ந்ததனாலே அதனாலுற்ற கடனைத் தீர்க்குமாறு கண்ணொளி மறையுமளவு நாற்புறமும் பரந்து, மிக்க இருளினைச் செய்கின்றதுமாக விளங்கும், செறிந்த இருளையுடையதான நள்ளிரவுப் பொழுதிலே, நற்பண்பாடுகள் ஏதும் இல்லாததான கடத்தற்கரிய வழியினைக் கடந்தேமாய், அவன் பொருட்டாக வருகின்ற நம்மாட்டு, அவன்தான் அருளினைச் செய்ய மாட்டானோ? அவன் அவ்வாறு அருளாதிருத்தல் தான் எதனாலே என்று சொல்லப்படுமோ? அதனை யானும் அறியேனே!

சொற்பொருள் : வசிபு–பிளந்து; இருளைப் பிளந்து எழுகின்ற மின்னலின் ஒளியாதலின் 'வசிபு' என்றனர். அதிர் குரல்–அதிர்கின்ற குரல்; இடி முழக்கம்; பிற உயிரினங்களை அதிரச்செய்கின்ற கடுங் குரலும் ஆம். முதிர் கடன்–சூல் முதிர்ந்ததனாலே உண்டாகிய கடமை; அது அதனைக் கழித்தல்; அதாவது, மழையாகப் பெய்தல். கண் தூர்பு–கண்ணொளி மறையுமாறு. கனையிருள்–செறிந்த இருள். பண்பில் ஆரிடை–பண்பிலாத கடத்தற்கரிய காட்டுவழி; பண்பில்லாமை கரடு முரடு உள்ளமையும், கொடு விலங்குகள் உள்ளமையும், பசுமை கெட்டு பாலைப்பட்டமையும் ஆம். சிறுபுறம்–முதுகுப் புறம். வரிகொள்–வரித்தலைக் கொண்ட; வரித்தலாவது வரிந்து கட்டுதல், இதனால் வில்லுக்கு வலிமை மிகுதிப்படும். அழுந்து–பள்ளம். விடரகம்– மலைப்பிளப்பிடம்.

விளக்கம் : வரும் வழியது ஏதங்கருதிக் கவலையுறுதல் இயல்பேயாகலின், இனி இவ்வாறு வருதலை மேற்கொள்ளவிடாது, விரைய வரைந்து கொள்ளுதலே செயற்கு உரியது. எனத் தலைமகன் கருதுவானாவது இதன் பயனாகும். கடன் தீர்த்தலாவது, தன் கடமையைச் செய்தல். மாரியும் தன் கடமையை மறவாதே தீர்த்தலைத் செய்தலை மேற்கொள்ளுகின்றது; ஆயின், தலைவனோ தன் கடனைத் தீர்த்தலாகிய, அடைந்தார் துயர் தீர்த்தல் ஆகிய நம்மை மணந்து கொள்ளுதலை நினையானாயினான் என்று குறிப்பாக உணர்த்தியதும் ஆம்.

சூலுற்ற மேகங்கள் தம் கடனைத் தவறாதே தீர்த்தலைப் போலத் தலைவிக்கு உறுதுணையான தோழியும், அவளுக்குத் தான் செய்தற்குரிய கடனாகிய தலைவனோடு மணம் புணர்த்தும் செயலைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாள், இவ்வாறு கூறுவாள் எனக் கொள்ளுதலும் பொருந்தும்.

உள்ளுறை : யானையானது,வேட்டுவனின் கணைக்கு வெருவியதாகி, விடரகத்துச் சென்று முழங்குவது போலத் தலைவியும் இனி ஏதிலாட்டியர் உரைக்கின்ற பழிச்சொற்களுக்கு அஞ்சினளாய்த் தன் மனையகத்தே தனித்திருந்து புலம்பி வருந்துவள் ஆவள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/228&oldid=1698391" இலிருந்து மீள்விக்கப்பட்டது