230. காணுங்கால் இனிது!

பாடியவர் : ஆலங்குடி வங்கனார்.
திணை : மருதம்.
துறை : தோழி வாயில் மறுத்தது.

[(து-வி.) பரத்தையிற் பிரிந்து வீட்டிற்கு வருகின்றான் தலைவன். தலைவியின் சினத்தை அறியானாதலால், அவளைச் சமாதானப் படுத்துமாறு தோழியை வேண்டுகின்றான். அவள், அவனுக்கு இசையமறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


வயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்
கயக்கணக் கொக்கின் கூம்புமுகை யன்ன
கணைக்கால் ஆம்பல் அமிழ்துநாறு தண்போது
குணக்குத் தோன்று வெள்ளியின் இருள்செட விரியும்
கயற்கணங் கலித்த பொய்கை ஊர! 5
முனிவில் பரத்தையை என்துறந் தருளாய்
நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்
புதுவறங் கூர்ந்த செறுவில் தண்ணென
மலிபுனல் பரத்தந் தா அங்கு
இனிதே தெய்யநின் காணுங் காலே! 10

தெளிவுரை : இளம் பிடியானையினது செவியைப்போல விளங்கும் பசுமையான இலைகளையும், குளத்தினிடத்தேயுள்ள கூட்டமாயிருக்கும் கொக்கைப்போலத் தோன்றும் குவிந்த முகைகளையும், அவற்றிற்கேற்ப அமைந்த திரட்சியான தண்டினையும் கொண்டிருப்பது நீராம்பல். அதன் அமிழ்தைப் போல மணம் பரப்புகின்ற தண்மையான மலரானது கீழைத்திசைக்கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல, இருளைப் போக்கியபடி மலர்ந்திருக்கும். அத்தகையதும், கயல்மீன்களின் கூட்டம் கலித்துப் பெருகியிருப்பதுமாகிய பொய்கையினையுடைய ஊரனே!

என்னை வேண்டி நிற்றலைக் கைவிட்டுவிட்டு, நின்பால் சினம் ஏதும் இல்லாதிருப்பவளாகிய பரத்தையிடஞ் சென்று அவளுக்கு அருள்வாயாக! தனிமையானது எம்மைப் பெரிதாகத் துன்புறுத்திய காலத்திலே, அதுதான் நீங்குமாறு, புதுவதாக வற்றிக் காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ள வயற்பகுதிகளிலே குளிர்ச்சியுற நிறைந்த புதுப்புனலானது பாய்ந்து பரவினாற்போல, நின்னைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சியே எமக்கு இன்பந் தருவதாயிருக்கின்றது. எமக்கு அதுவே போதும் !

சொற்பொருள் : வயப்பிடி – இளைய பிடி; முயப் பிடி எனவும் பாடம். பாசடை–பசிய இலை. கூம்புதல்–குவிந்திருத்தல். கணைக்கால்–திரட்சியான தண்டு. தண்போது–குளிர்ச்சியுள்ள மலர். குணக்குத் தோன்று வெள்ளி–கீழ்த்திசையிலே தோன்றும் விடிவெள்ளி; வெள்ளிஎழப் பொழுது புலரும் என்பதாம்; இது கதிரவன் உதயத்திற்குமுன் ஏற்பட்ட புலர்காலைப் பொழுது. முனிவு–சினம். புலம்பு–தனிமைத்துயரம். புதுவறம்–புதுவதாக உண்டான வறட்சி. மலிபுனல்–மிகுதியான புதுப்புனல். 'தெய்ய' அசைநிலை.

விளக்கம் : தலைவியைத் தானாகக் கொண்டு கூறியது இது. பரத்தையானவள் நின்னைத் தன்பால் விருப்புக் கொள்ளச் செய்து தான் பயனடைதலிலேயே கருத்தாயிருப்பாள் என்று கூறுவாள். அவளைப் பிரிந்து நீ தான் இங்கு வந்ததற்காகவும் சினம் கொள்ள மாட்டாள் என்றனள். ஆனால், நின்பால் உரிமையுடைய யாமோ சினங்கொள்வேம் என்றதும் ஆம். நீதான் இங்கு வருதலையே மறந்தாய் போலும் என்று இருந்தேமாகிய எமக்கு, நீதான் வந்து காட்சியளித்தனை. நின்னைக் கண்டு மகிழ்ந்த அந்தக் காட்சியே எமக்கு இன்பமாயிற்று. எமக்கு அது போதும் என்பதாம். பொருந்தா ஒழுக்கமாகிய அவன் செயலை இவ்வாறு இகழ்ந்து உரைக்கின்றனள்.

நின்னைக் காணவும் பெறேமாய் வாடி நலிந்திருந்த எமக்கு, நின்னைக் கண்டதே இன்பந்தந்தது போலச் சிறந்த உதவியாயிற்று; வறங்கூர்ந்த செறுவில் புதுப்புனல் பாய்ந்தாற்போல எம்மனத்து வெம்மையும் தணிந்தது என்றதும் ஆம். இவ்வாறு, சினந்து வாயின் மறுத்து உரைக்கின்றாள் தோழி.

இறைச்சி : ஆம்பலந் தண்போது வெள்ளிபோல மலர்ந்திருந்தபோதும், அதுதான் வெள்ளியாக ஆகாததுபோல, நீதான் பரத்தைக்குச் செய்யும் தலையளியும் நினக்கு மகனைப் பெற்று நின் குடிக்கு ஒளியூட்டும் உறவு ஆகாது என்பதாம். அவள் தலைவியாகும் தன்மையைப் பெறமாட்டாள் என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/230&oldid=1698394" இலிருந்து மீள்விக்கப்பட்டது