231. போதவிழ்ந்த புன்னை!

பாடியவர் : இளநாகனார்.
திணை : நெய்தல்.
துறை : சிறைப் புறமாகத் தோழி சொல்லி வரைவு கடாயது.

[(து.வி.) தலைவன் ஒருசார் வந்து நிற்றலைக் கண்டாள் தோழி. அவன் உள்ளத்திலே, 'தலைவியை மணந்து கொள்ள வேண்டும்' என்னும் எண்ணத்தை ஊட்டக் கருதினாள். தலைவிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்குமாறு கூறுகின்றனள்.]


மையற விளங்கிய மணிநிற விசும்பின்
கைதொழு மரபின் எழுமீன் போலப்
பெருங்கடற் பரப்பின் இரும்புறந் தோயச்
சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும்
துறைபுலம் புடைத்தே தோழி! பண்டும் 5
உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக்
கானலங் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்கா மாறே.

தெளிவுரை : தோழீ! முன்னேயும் மனைக்கண்ணேயுள்ள ஊர்க் குருவியினது முட்டையை உடைத்தாற்போலத் தோன்றும் பெரிதான அரும்புகள் இதழவிழ்ந்துள்ள, கருமையான அடியையுடைய புன்னைமரங்களைக் கொண்ட கானற் சோலையிடத்தே, நம் தலைவன் நமக்குத் தந்த காதலானது, நம் உள்ளத்தினின்றும் நீங்காதே யுள்ளதுகாண்! அதனாலே,

மாசற விளங்கிய நீலமணியின் நிறத்தையொத்த வானத்தினிடத்தே தோன்றி, உலகினரால் கைகூப்பித் தொழப்படுகின்ற மரபினையுடையது எழுமீன் மண்டிலம் என்னும் சப்தரிஷிகள் மண்டிலம். அஃதேபோலத் தோற்றுமாறு சிறு வெண்காக்கைகள் பலவும் தத்தம் துணையோடும் கூடியவையாகப் பெரிய கடற்பரப்பின் கண்ணே தம் கரியமுதுகுப்புறம் தோயுமாறு நீரிற் குடைந்து ஆடியபடியே யிருக்கும். அதனைத் தமியேமாய் நோக்குங்கால், அது நமக்கும் துயர்தருவதாயுள்ளது! அங்ஙனம் நாமும் களித்து மகிழ்வதற்கு நம் தலைவரும் நம் அருகே இலராயினரே!

சொற்பொருள் : மை–குற்றம்; கருமையும் ஆம். அப்போது 'மையற' என்பதற்கு மேகங்களால் மறைக்கப்பட்டிராத நிர்மலமான என்று கொள்க, நட்சத்திரங்கள் தெளிவாகத் தோன்றுதலின். மணிநிற விசும்பு–நீலமணியின் நிறத்தைக் கொண்டதான விசும்பு. எழுமீன்–ஏழு நட்சத்திரக் கூட்டம் எனப்படும் சப்தரிஷி மண்டிலம்; இவர்கள் தம்முடைய தவத்தாலும் ஒழுக்கத்தாலும் விண்மீன்களாகும் உயர்நிலை பெற்றவர்; இவர்களைத் தொழுவதனாலே நன்மையுண்டு என்பது பழந்தமிழரின் நம்பிக்கையாகும்; இதனை அடுத்திருப்பதும், இதனோடு இணைந்த சிறப்பினதுமான அருந்ததியைக் குறிப்பதாகக் கொள்க. இன்றுவரை மகளிர் தம் கற்புக்குச் சான்றாக அருந்ததியைக் காட்டித் தொழுதல் மரபு; இது மணச்சடங்குகளுள் ஒன்றாகவே அமைந்துள்ளது. இரும்புறம்–கரிய முதுகுப்புறம்; இதனைக் காக்கையின் முதுகுப்புறமாகக் கொள்வர்; அன்றிப் 'பெருங்கடல் பரப்பின் இரும்புறம்' எனக் கடலோடு சேர்த்துக் கடலின் கருமையான மேற்புறம் எனலும் பொருந்தும். வானத்தே தோன்றும் எழுமீன்போல அவை அப்போது தோன்றும் என உவமை கொள்க. 'துறை புலம்பு உடைத்து' என்றது, அவைபோலத் தானும் நீர்விளையாட்டயர்தற்குக் காதலன் அருகே இன்மையால். 'போதுவிரிந்த மலர்', அதன் அமைப்புக்கு உடைந்த குருவிமுட்டையின் வடிவம் உவமை கூறப்பெற்றது.

விளக்கம் : புன்னையங் கானலை நோக்கியதும், முன்பு கூடிய இடமாதலின், பழைய நினைவுகளாலே கலங்கித் துயருற்றனள்; அவனோடும் ஆடற்குரிய துறையாதலின் அது நினைந்தும் மனம் வாடினாள். காலம் மாலையாதலைச் செய்யுளின் அமைப்பால் அறிதல் வேண்டும். அறியவே, இஃது இரவுக் குறிக்கண் கூறுதல் என்றும் கொள்ளப்படும்.

இறைச்சிப் பொருள் : சிறு வெண்காக்கை தத்தம் துணையோடு பலரும் காணக் கூடிக் களித்து நீராடி இன்புறுதலைப் போலத் தானும் தலைவனை முறையாக மணந்து கடலாடி இன்புறவில்லையே எனக் கலங்குவாள் தலைவி என்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவனின் உள்ளத்தே, 'களவு உறவைக் கைவிட்டு விரைய மணந்து கோடலே செய்யத் தக்கது' என்னும் தெளிவு உண்டாகும். அவனும் அவள்பாற் கழியக் காதலன் ஆதலின், அதனால் மணமும் விரைவில் கைகூடும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/231&oldid=1698395" இலிருந்து மீள்விக்கப்பட்டது