233. நாருடை நெஞ்சத்து ஈரம்!

பாடியவர் : அஞ்சில் ஆந்தையார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக, 'இவள் ஆற்றாள்' என்பது உணர்ந்து சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

[(து.வி.) வரைந்து கொள்ளற்கு முற்படாதவனாகத் தலைமகன் நெடுங்காலம் வந்து களவு ஒழுக்கத்திலேயே நீடித்திருப்பான் ஆகின்றான். 'இது நீடிப்பின் இனியும் தலைவி ஆற்றாள்' எனக் கருதிய தோழி, தலைவன் கேட்டுத் தெளியுமாறு, தலைவியிடத்தே சொல்லுவாளேபோல இவ்வாறு கூறுகின்றனள்.]


கல்லாக் கடுவன் நடுங்க முள்எயிற்று
மடமா மந்தி மாணா வன்பறழ்
கோடுயர் அடுக்கத்து ஆடுமழை ஒளிக்கும்
பெருங்கல் நாடனை அருளினை யாயின்,
இனியன கொள்ளலை மன்னே! கொன்னொன்று 5
கூறுவன் வாழி தோழி! முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் சென்னெறி வழாஅச்
சான்றோன் ஆதல்நற் கறிந்தனை தெளிமே!

தெளிவுரை : தோழீ! நீயும் நெடிது வாழ்வாயாக! தன்னுடையதான தொழிலையன்றி வேறு தொழிலைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு, முட்போன்ற கூர்மையான பற்களைக் கொண்டதும், மடப்பத்தை உடையதுமான பெரிய மந்தியானது, வளர்ச்சி நிரம்பாத வலிய தன் குட்டியோடும், உச்சிகள் உயர்ந்த மலையடுக்கத்தே இயங்கும் மேகங்களுக்கு உள்ளாகச் சென்று ஒளித்துக் கொள்ளும். அத்தன்மையுடைய பெரிய மலைநாட்டுத் தலைவனுக்கு நீயும் அருளிச் செய்தனையாயின், இனியேனும் அத்தன்மைத்தான செயல்களை மேற்கொள்ளாதே இருப்பாயாக! வெறிதே ஒன்று கூறுவேன்! அதனையும் கேட்பாயாக தலைமகன் நின்முன்னே வந்தடைந்தபோது, அன்பை உடையதான நின் நெஞ்சத்திலே மிக்கெழுகின்ற காதலை மறைத்துக் கொண்டனையாய், அவனோடு சொல்லாடி, அவன்தான், ஆன்றோர் வகுத்துள்ள செவ்விய நெறியாகிய இல்லறம் மேற்கொண்டு ஒழுகுதலிற் பிழையாத சான்றோன் ஆகுதலை நன்றாக அறிந்து கொண்டனையாகி, அதன் பின்பே அவனை ஏற்றுக்கொள்ளலையும் தெளிவாயாக!

சொற்பொருள் : கல்லாக் கடுவன் தன் தொழிலன்றிப் பிறவற்றைக் கற்றறியாத ஆண் குரங்கு; பிறவென்றது மகவோடுங்கூடிய தன் மந்தியைப் போற்றி உதவுதலாகிய கடப்பாட்டுணர்வு. அஃதன்றித் தன் புலனிச்சையொன்றே கருதுமாதலின், 'கல்லாக் கடுவன்' என்றனர். மடமா மந்தி–இளமைப் பருவத்துக் கருமுக மந்தி; பெரிய மந்தி. 'மாணாவன்பறழ்' குலத்தொழில் பயிலாத வலிய குட்டி. கோடு– மலையுச்சி. ஆடு மழை – இயலும் மேகம். ஒளிக்கும்–ஒளித்து மறையும். இனியன கொள்ளலை – இனி அத்தன்மையான அன்புச் செயல்களை மேற்கொள்ளா திருப்பாயாக. 'இனி என கொள்ளலை' எனவும் பாடம்; இனி என் சொற்களை ஏற்றுக்கொள்வாய் அல்லை என்பது பொருள். நார்–அன்பு. ஈரம் – காதலன்பு. சென்னெறி – செவ்விதான நெறி; செல் நெறி எனக் கொள்ளின் செல்லும் ஒழுகலாறு எனக் கொள்க. வழாஅ – வழுவாத, வாழா என்று பாடம் கொள்ளின் அந்நெறிப்படி வாழாத என்று கொள்க சான்றோன் – சால்பினன்.

விளக்கம் : ஆன்றோர் சென்னெறியானது பலரறியக் கோடலும், களவினைக் கடிதலும். அந்நெறிப்படி வாழான் எனவே, அவன் அன்பிலன், ஒதுக்கத் தக்கவன் என்றதாம். ஊரலரால் நாம் வேதனையுறுவோம்; அவன் பிரிவால் நீயும் கலங்கி நெஞ்சழிவாய்; இவற்றைக் கருதாது களவிற் பெறும் இன்பமே நாட்டமாகி வரும் அவன் சால்பிலன் என்கின்றனள். இதனைக் கேட்டலும் தலைமகன் தன்பால் தெளிவு பெற்றானாகி, விரைய வரைந்து மணந்து கோடலில் மனஞ் செலுத்துவான் ஆவன் என்பதாம்.

உள்ளுறை : கடுவன் மனம் நடுங்க மந்தியும் பறழும் மேகத்தூடே சென்று மறைந்தாற்போல, நாமும், அவன் நம்மைக் காணாதே வருந்துமாறு அயலே சென்று மறைந்து கொள்வேம் என்று கொள்க. அங்ஙனம் செய்வோமாயின், களவுறவு தடைப்படுதலின், அதன் பின்னாவது அவன் வரைந்து வருதலைப்பற்றி நினைப்பவனாவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/233&oldid=1698397" இலிருந்து மீள்விக்கப்பட்டது