232. வேரல் வேலிச் சிறுகுடி!

பாடியவர் : முதுவெண்கண்ணனார்; முதுவெங்கண்ணனார் எனவும் பாடம்.
திணை : குறிஞ்சி.
துறை : பகல் வருவானை இரவுவா எனத் தோழி சொல்லியது.

[(து.வி.) பகற்குறிக்கண்ணே வந்து ஒழுகுவானாகிய தலைவனைத் தோழி எதிர்கொண்டு, இரவுக்குறி நேர்வாளே போல இவ்வாறு கூறுகின்றனள். அதுவும் இயலாமையைக் குறிப்பால் உணர்த்தித் தலைவியை வரைந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனள்.]


சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலறச்
செங்காற் பலவின் தீம்பழம் மிசையும் 5
மாமலை நாட தாமம் நல்கென
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீயுக விரிந்த முன்றில்
கல்கெழு பாக்கத்து அல்கினை சென்மே.

தெளிவுரை : சிறுத்த கண்களையும் பெருத்த கைகளையும் கொண்ட யானையின், ஆணும் பெண்ணுமாகிய இரண்டின் இனம், தண்ணிய குளக்கரையிலே செறிந்திருந்த மலைப் பச்சை குழையுமாறு மெய்யுறத் தம்முட் புணர்ந்து கூடிய பின்னர், சோலையிடத்தேயுள்ள மலைவாழைகளைத் தின்பதையும் வெறுத்தவாய், அதற்கு அயலதாயுள்ளதும், மூங்கில் முள்ளாலே வேயப்பெற்ற வேலியை உடையதுமாகிய சிறிய குடியிருப்பிலே யுள்ளவர்கள் அச்சத்தால் அலறுமாறு சென்று, சிவந்த அடிமரத்தையுடைய பலாவினது இனிய பழங்களை உதிர்த்துத் தின்னாநிற்கும். அத்தன்மையுடைய பெரிதான மலைநாட்டிற்கு உரியவனே, நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக! எந்தைக்கு உரியதும், வேங்கையின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் அகன்ற முற்றத்தை உடையதும், மலையிடத்தே பொருந்திய பாக்கத்திலுள்ளதுமாகிய எம் மனையகத்திலே இன்றிரவும் போதுமட்டும் நீதான் தங்கினையாய்ப் பிற்றைநாளிற் செல்வாயாக! அதற்கு இசைவாயாயின், நின் மாலையினை அடையாளமாகத் தருவாயாக!

சொற்பொருள் : சிறுகண்–சிறுத்துள்ள கண்கள். ஈரினம்–களிறும் பிடியுமாகிய யானையினம். குளவி–மலைப்பச்சை; காட்டு மல்லிகை எனவும் கூறப்படும். 'தீண்டி' என்றது அதன்பால் மெய்யுறக் கூடிக் களித்து என்றதாம். 'வாழை' என்றது மலைவாழையினை. முணைஇ–வெறுத்து; 'முணைவு முனிவாகும்' என்பது தொல்காப்பியம். வேரல்–மூங்கில்; வேரல் வேலி என்பதனை மூங்கில் முள்ளாலே வேயப்பெற்ற வேலி எனக் கொள்ளலும் பொருந்தும். 'செங்கால் பலவின்' என்றது, செம்பலா எனக் குறித்தற் பொருட்டு. தாமம்–மாலை. 'தாமம் நல்குக' என்றது, நின்னைக் காணாது அலமரும் தலைவி அதனை அணைத்தாயினும் இன்புறுவள் என்றற்காம். முன்றில்–முற்றம். 'பாக்கம்' குடியிருப்பு; கடற்கரையூர்க் குரிய பெயர், குறிஞ்சிச் சிற்றூர்க்கும் இங்கே கூறப்பெற்றது.

விளக்கம் : உடலின் பெருமையை நோக்கக் கண் மிகவும் சிறுத்து உளதாதலின், 'சிறு கண் யானை' என்றனர். 'இரவில் தங்கிச் செல்வாயாக' என வேண்டியது, 'பகற் பொழுதின் கண்ணே இவளோடு கூடிக் களித்து நீதான் இன்புறுத்தினை; இரவிலே இவள்தான் தனிமையில் துயருற்றாளாய்ப் பெரிதும் நலிவள்; ஆதலின் இரவும் தங்கிப்போவாய் என் வேண்டுவதாகும். இதனால், இரவில் அவள்படும் துயரத்தை நீக்குதற்குக் கருதினையாயின், அவளை ஊரறிய மணந்து கொள்வாயாக எனக் குறிப்பாகக் கூறினள் என்று கொள்க.

உள்ளுறை : யானையின் ஈரினம் தலைவனும் தலைவியுமாகவும், 'குழையத் தீண்டி' என்றது, அவர் இயற்கைப் புணர்ச்சியிற் கூடியதைக் குறித்ததாகவும், 'வாழையை வெறுத்து' என்றது, மீளவும் களவுறவை வெறுத்துவிடலே தக்கது எனவும், 'சிறுகுடி அலற' என்றது, அலவற் பெண்டிர் நடுங்கி வாயடங்குமாறு செய்து எனவும், 'பலவின் பழம் மிசையும்' என்றது, வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்தி இன்பம் துய்ப்பாயாக எனவும் உள்ளுறை பொருளாகக் கொண்டு கூறினளாகக் கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/232&oldid=1698396" இலிருந்து மீள்விக்கப்பட்டது