243. அறத்தினும் பொருள் அரியது!

பாடியவர் : காமக்கணி நப்பசலையார் திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.

[(து.வி.) தலைவனின் பிரிவிடையே மெலிந்த தலைவியானவள், அறமும் பொருளுமாகிய வாழ்க்கைக்கு உறுதிப் பொருள்கள் பற்றிய சிந்தனையிலே ஈடுபட்டு நோகின்றது போல அமைந்த செய்யுள் இது.]


தேம்படு சிலம்பின் தெள்ளறல் தழீஇய
துறுகல் அயல தூமணல் அடைகரை
அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப்
பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில்
கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கையிட்டு 5
அகறல் ஓம்புமின் அறிவுடை யீரெனக்
கையறத் துறப்போர்க் கழறுவ போல
மெய்யுற இருந்து மேவர நுவல
இன்னா தாகிய காலைப் பொருள்வயின்
பிரிதல் ஆடவர்க்கு இயல்பெனின்
அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே! 10

தெளிவுரை : தேன் உண்டாகின்ற பக்கமலை; அதனிடத்தே தெளிவான நீர் சூழ்ந்துள்ள ஒரு வட்டக் கற்பாறை; அந்தப் பாறைக்கு அயலதாகத் தூய மணல் பரந்து கிடக்கும் அடைகரை; அதனிடத்தே, அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துள்ள நறிய மாமரங்கள் மிகுந்த சோலை; அந்தச் சோலையின்கண்ணுள்ள மரங்களின் இலைச்செறிவு கொண்ட பகுதிகள் தோறும் அழகிய கண்களையுடைய கருங்குயில்கள் தங்கியிருக்கும். அவை, 'சூதாட்டக் காயானது உருண்டு போவது போன்றதான நிலையில்லாத வாழ்க்கை இது; இதனை முன்னிட்டுப் பொருளாசையாலே நும் துணையாவாரைப் பிரிந்து போகாதிருத்தலைப் பேணுவீராக; நீர்தாம் அறிவு உடையீர்!' எனப் பிரிவுத் துயரத்தாலே செயலறும்படியாகக் கைவிட்டுப் போக நினைப்பார்க்குக் கடிந்து உரைத்து, அவர் போக்கை விலக்குவது போலக் கூவாநிற்கும். 'மெய்யொடு மெய்யானது பொருந்துமாறு தன் பெடையுடன் கூடியிருந்தபடியாக, நம் உள்ளத்தேயும் விருப்பமுண்டாகக் கூவாநிற்கும். நமக்குத் துன்பந் தருவதாகிய இக்காலத்தினும் (இளவேனிற் காலத்தினும்) பொருள் குறித்துத் தம் மனைவியரைப் பிரிதல் ஆடவர்க்கு இயல்பென்று கூறப்படுமானால், அறத்தைக் காட்டிலும் பொருள் தான் பெரிதும் அருமையுடையது போலும்!

சொற்பொருள் : தேம்படு சிலம்பு – தேன் கூடுகள் பலவற்றையுடைய பக்கமலை. தெள்ளறல் – தெளிந்த நீர். துறுகல் – வட்டக்கல். அலங்கு சினை – அசையும் கிளை. பொதும்பு –இலைச் செறிவு, பூங்கண் – அழகிய கண்; சிவந்த கண்ணும் ஆம். கவறு – சூதாடு காய்; இஃது உருண்டோடுதலின், சூதினை உருளாயம் என்று குறளினும் உரைப்பர் (குறள். 933). கையற – செயலற. மேவர – விருப்பம் உண்டாக.

விளக்கம் : தெள்ளறல் தழீஇய துறுகல் அயல் தூமணல் அடை கரையாவது, மலையிடத்துச் சுனையைச் சார்ந்த அடைகரை என்க. மழைநீர் சுனையை நோக்கி ஓடி வந்து வந்து தூயமணல் அப்பகுதியிற் செறிந்திருக்கும் என்பதாம். 'ஊடினீர் எல்லாரும் உருவிலான் தன்னாணை, கூடுமின் என்று குயில் சாற்ற' எனப் பிறரும் குயிற்குரலுக்கு இவ்வாறு பொருள் கொள்வர். 'அகறல் ஓம்புமின் அறிவுடையீர்' என்றலின், அகன்று போதலைச் செய்பவர் அறிவிலர் என்பதும் பெற வைத்தனர்.

‘மேவர நுவல' என்பது கூடியிருப்பார்க்கு அக்குரல் தான் பெரிதும் இன்பந் தருதலின், அவர் விரும்பும்படியாகக் கூவி என்றும் பொருள் கொள்ளப்படும். 'இன்னாவாகிய காலை' என்றது 'பிரிதற்கு உரியதல்லாத காலத்தினை. 'அரிது மன்றம்ம அறத்தினும் பொருளே' என்று ஆடவரைக் குறித்துக் கூறியது, அது பெண்டிர்க்கு என்றும் இயல்பாகாது என்பதனாலுமாம்.

பிரிவிடத்தும் அவனை நோவாமல், ஆடவரது இயல்பைக் குறித்தே மனம் வெதும்பும் தலைவியது உள்ளச் செவ்வியை எண்ணி உணர்ந்து இன்புறல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/243&oldid=1698410" இலிருந்து மீள்விக்கப்பட்டது