246. வருதும் என்ற பருவம்!

பாடியவர் : காப்பியஞ் சேந்தனார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீ இயது.
[(து-வி.) பிரிந்துறை வாழ்விலே மெலிவுற்ற தலைமகளை நோக்கி, 'அவன் இன்னே வருகுவன்' என்று வலியுறுத்திக் கூறித் தெளிவிக்க முயலுகின்ற தோழியின் கூற்றாக அமைந்த செய்யுள் இது. பிரிவுத் துயரத்தின் மிகுதியாலே பெரிதும் நொந்து நலிவும் மெலிவும் அடைந்த தலைவியின் மனம் பெரிதும் சோர்ந்து போகின்றது. அவளுக்குக் கார்காலத்து வரவைக் காட்டியபடி தோழி இவ்வாறு தேறுதல் உரைப்பதாகக் கொள்க.]


இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்
மனைமர நொச்சி மீமிசை மாச்சினை
வினைமாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்
உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீந்திச் 5
செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்,
வரூவர்—வாழி தோழி—புறவில்
பொன்வீக் கொன்றையொடு பிடவுத்தளை யவிழ்
இன்னிசை வானம் இரங்குமவர்
'வருதும்' என்ற பருவமோ இதுவே? 10

தெளிவுரை : வாழ்வாயாக தோழீ! நாம் குறிப்பிட்ட இடங்களிலே இனிய சொல்லும் செயலுமே நற்குறிகளாக நிகழ்கின்றன. நெடிய சுவரிடத்தே இருக்கும் பல்லியும் நம் பக்கத்தேயாய் அமைந்து நம்மைத் தெளிவிக்கின்றது. மனையிடத்தே வேலியாக அமைந்துள்ள நொச்சிமரத்தின் மேலாக, உயரமாக வளர்ந்துள்ள மாமரத்துக் கிளையிலிருந்தபடியே, இனிமையுண்டாகக் கூவுதலிலே தேர்ந்த கருங்குயிலும் தன் குரலினை எடுத்துக் கூவாநிற்கும். திட்பம் கொண்ட உள்ளத்தோடே பலவான சுரங்களையும் கடந்து சென்று, பொருளைச் செய்தலைக் குறித்து நம்மை விட்டுப் பிரிந்து போனவர் நம் தலைவர். ஆயினும், அவர் தாம் குறித்துச்சென்ற காலத்தைப் பொய்ப்பதிலர்; உறுதியாக வந்து சேர்வர். காட்டினிடத்தே நிற்கும் பொன்னிறப் பூக்களைக் கொண்டவரான கொன்றை மரங்களோடு, பிடாமரங்களும் அரும்பு முகிழ்த்து மலர்தலைச் செய்கின்றன. இனிதாக முழங்குதலையுடைய மேகமும் முழங்கா நிற்கும். அவர் 'வருவேம்' எனக் குறித்த பருவமும் இதுவேயாகும். அவர் இன்னே வருவர்காண்!

சொற்பொருள் : இடூஉ ஊங்கண்–குறிப்பிட்ட இடங்கள். இனிய படூஉம்–இனிய குறிகள் தோன்றும். பாங்கில்–நம் பக்கமாக; நமக்கு ஆதரவாக. மனைமர நொச்சி–மனைக்கு வேலியாக அமைந்துள்ள நொச்சிமரம். மாச்சினை–மாமரக்கிளை. வினைமாண்–தன்வினையிலே மாண்புடைய; அது இனிமை பயப்பக் குரலெடுத்துக் கூவுதலாகிய செயல். உரம் – உள்ளத் திண்மை; அது காதலியைப் பிரியத் துணிதலும், சுரநெறிக்கண் துணிவோடு சென்று கடத்தலுமாகிய மனத்திட்பம். நீந்தி–முயற்சியோடு கடந்து சென்று. புறவு – காடு. இன்னிசை வானம் – இனிதாக முழங்கும் மேகம்; முழக்கம் இனிதாதல், இது அவர் வருவதாகக் குறித்த பருவத்தினது வரவை அறிவித்தலால்.

விளக்கம் : கட்டுக் காணுதலும், பல்லி சொல்லுக்குப் பலன் காணலும் பண்டைய வழக்கம் என்பது இச்செய்யுளால் அறியப்படும். 'மனைவயிற் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன, நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே' எனக் கலித்தொகையுள்ளும் (கலி 11) இவ்வழக்கம் கூறப்படும். செய்தற்கு உரிய பொருளைச் செய்பொருள் என்று கூறினாள். 'அவர் தவறாதே வருவர்; நீயும் அதுவரை பொறுத்திருப்பாயாக' என்று தெரிவிக்கின்றாள் தோழி. இதனைக் கேட்கும் தலைவியும் தன் துயரத்தை ஆற்றியிருப்பாளாவள் என்பது இதன் பயனாக விளங்குவதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/246&oldid=1698413" இலிருந்து மீள்விக்கப்பட்டது