247. எஃகுறு பஞ்சின் எழிலி!

பாடியவர் : பரணர்.
திணை : குறிஞ்சி
துறை : .... 'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.

[(து-வி.) வரைவிடை வைத்து வேந்துவினைமேற் பிரியக்கருதிய தலைவனை நெருங்கி, 'நின்னைப் பிரியின் இவள் மெலிவுற்று அழிவாள்' எனக் கூறி, 'விரைந்து வரைந்து கொள்க' எனத் தோழி வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


தொன்றுபடு துப்பொடு முரண்மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங்கோடு கழாஅ
வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி
எஃகுறு பஞ்சிற் றாகி வைகறைக்
கோடுயர் நெடுவரை ஆடும் நாட! நீ 5
நல்காய் ஆயினும் நயனில செய்யினும்
நின்வழிப் படூஉம்என் தோழி நன்னுதல்
இருந்திறை கூடிய பசலைக்கு
மருந்துபிறி தின்மைநன்கு அறிந்தனை சென்மே!

தெளிவுரை : பழைமையுற வந்த வலிமையோடும் மாறுபாடும் மிக்கெழலாலே சினங்கொண்டு, புலியைக் கொன்ற களிற்றினது சிவந்த கோட்டினைக் கழுவுமாறு. இரவிலே வீழ்கின்ற மழையைப் பொழிந்தது, இனிய இடிக்குரலையுடைய மேகம். அதுதான், பிற்றைநாளின் வைகறைப் பொழுதிலே, இருப்பு வில்லாலே அடிக்கப்பட்டு நொய்ம்மையாகிப்போன பஞ்சைப் போலவாகிப் பரந்து, உச்சியுயர்ந்த நெடிதான மலைப்பக்கத்தே இயங்கியபடியிருக்கும் நாட்டிற்கு உரியவனே! நீ இவளை வரைந்துகொண்டு இவளுக்கு அருளிச்செய்யாய் ஆயினும், நின் தலைமைக்குப் பொருந்தாத செயல்களையே செய்தாய் ஆயினும், நின் உள்ளஞ் சென்ற வழியே தான் நடக்கும் பண்பினள் என் தோழியாவாள். இவளுடைய நல்ல நெற்றியினிடத்தே நிலையாகத் தங்குதலை மேற்கொண்ட பசலை நோய்க்கு மருந்து நின்னையன்றிப் பிறிதொன்று யாதும் இல்லையாதலை நன்கு அறிந்தனையாகி, அதன்மேல் நீயும் நின் வினைமேற் செல்வாயாக!

சொற்பொருள் : தொன்றுபடு துப்பு–பழைமையுற வந்த வலிமை. முரண்–மாறுபாடு. பழைய வலிமையோடு முரணும் மிகுதியாகிச் சினமும் எழவே அதன் வன்மை அளவிடற்கரிதாயிற்று என்பதாம். செங்கோடு–சிவந்த கோடு; சிவந்தது புலியின் குருதி படிந்ததால். எஃகு–பஞ்சு கொட்டும் இரும்புவில். வைகறை–விடியற்காலம்.கோடு–உச்சி. நயனில–தகுதிக்கு மாறுபட்டன; இது அடைந்தார்க்கு அருளாமையும், அவர்க்குத் தன்னாலே வருத்தம் தோன்றச் செய்தலும். இருந்து இறைகூடிய பசலை–நிலையாகத் தங்கியிருந்து படர்ந்த பசலைநோய்; 'விருந்திரை' எனவும் பாடம்.

விளக்கம் : பெயல் நீங்கிய மேகங்கட்கு அடிக்கப்பட்டு நொய்தான பஞ்சை உவமையாகக் கூறினர். வரைவிடை வைத்துப் பிரியலுற்ற தலைமகனுக்குச் சொல்பவளாதலின் தான் தலைவிக்குத் தேறுதல் பலகூறித் தெளிவித்தமை தோன்ற, 'நிள் வழிப் படூஇம் என் தோழி' என்றனள்.

இதனால், அவன் சென்று வினைமுடித்து விரைந்து வந்து தலைவியை வரைந்து இல்லற வாழ்வில் இன்புறுத்தல் வேண்டும் என்பதாம். 'பசலைக்கு மருந்து பிறிதின்மை நன்கு அறிந்தனை சென்மே' என்றது, நின்னையன்றி இவளைக் காப்பவர் பிறர் யாருமில்லை என்றதாம். இவள் நோய் பிறரால் அறியப்பட்டுப் பழியுரைக்கு ஏதுவாக, அதனால் இவள் உயிர்தரியாளாதலும் கூடும் என்றும் சொன்னதாம்.

இதனைக் கேட்டலுறுபவன், தலைவியை வரைந்து கொள்ளுதற்கே முதற்கண் முற்பட்டவனாகத் தான் வினைமேற் செல்லுதலையும் சிலகாலம் தள்ளிப்போடுபவனாவான் என்பதாம்.

உள்ளுறை : புலியைக் கொன்ற களிற்றின் கோட்டைக் கழுவும்படி இரவில் மழைபொழிந்த மேகம், வைகறையில் வரைமீது நொய்மையுற்ற பஞ்சினைப்போல் இயங்கும் என்றது, வேற்றரசை வெல்லுதல் குறித்த போரிலே நீ பட்ட புண்களை எல்லாம், இவள்தான் தன் தழுவுதலாலே போக்கி விட, நீயும் எளியையாய் இவளோடு கூடியவனாக இல்லிலேயே இருப்பவனாவாய் என்றதாம். இரவில் பெய்த கார் மேகம் வைகறையில் விளர்த்துப் போவதைப்போல, நின்னாலே தலையளி செய்யப்பெற்றுப் பூரிப்படைந்த இவள் மேனியின் எழில் நலம், வைகறையில் நீ அகலவும், கெட்டு வெளுத்துப் போதலும் நிகழும் என்றதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/247&oldid=1698414" இலிருந்து மீள்விக்கப்பட்டது