நற்றிணை-2/249
249. அலரெழச் சென்றது தேர்!
- பாடியவர் : உலோச்சனார்.
- திணை : நெய்தல்.
- துறை : வரைவிடை மெலிந்தது.
[(து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்து சென்றான் தலைவன். அதனாலே மிகச்சோர்ந்து மெலிவுற்றாள் தலைவி. அவளுடைய மனத்தெழுந்த கலக்கத்தின் காரணமாக அவள் புலம்புவதுபோல அமைந்த செய்யுள் இது.]
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத் தன்ன பாசிலை அகந்தொறும்
வெள்ளி யன்ன விளங்கிணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தா துதிரப்
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல்
5
வரிவண் டூதலின் புலிசெத்து வெரீஇப்
பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகைவரை நில்லா ஆங்கண்
மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி
அம்பல் மூதூர் அலரெழச்
10
சென்றது அன்றோ கொண்கன் தேரே!
தெளிவுரை : இரும்பைப்போன்று விளங்கும் கரிய கிளைகளையுடையது புன்னைமரம். அதன் பசுமையான இலைகள் நீலம்போலத் தோன்றும். அவ்இலைகளுக்கு உள்ளிடந்தோறும் வெள்ளியைப் போல வெண்ணிறம் கொண்ட அதன் பூங்கொத்துக்கள் விளங்கித் தோன்றும். அப்பூக்களிலுள்ள பொற்றுகள் போன்ற நரிய தாது மணல்மேட்டிலே உதிரும். புலியின் பொறிபோலும் புள்ளிகளைக் கொண்டதாக மணங் கமழும் நிறம்பெற்ற அம்மணல்மேடு தோன்றும். வரியமைந்த வண்டுகள் அவ்விடத்தே மொய்த்து ஊதா நிற்கும். அதனைக் காணும் விரைந்த செலவையுடைய குதிரைகள், அதுதான் புலிபோலும் என மயங்கி அச்சங் கொள்ளும். பலமுறை இழுத்து நிறுத்தவும் நிறைக்கு அடங்கி நில்லாவாய்ப் பந்து போலத் தம் கால்களால் தாவிக் குதிக்கும். அதனைக் கண்டு வளப்பமிக்க நம் சேரியின்கண் உள்ளாரெல்லாம், கல்லென்னும் ஆரவாரத்தோடு அவ்விடத்தே சென்றனர். அம்பல் கூறுவார் வாழ்கின்ற நம் மூதூரிடத்தும் அதனாலே நம்மைக் குறித்த பழிச்சொற்கள் எழுந்தன. இவ்வாறு, வந்தும் நமக்கு அருளாதபடி சென்றது அல்லவோ நமது கொண்கனின் தேர்! அவன்தான் இனி மீண்டும் இவ்வூரிடத்தே வந்து நம்மையும் வரைந்து மணந்து கொள்வானோ? யான் எவ்வாறு உயிர் வாழ்வேன்?
சொற்பொருள் : பாசிலை–பசிய இலைகள். இணர்–பூங்கொத்து. பூ நாறு–பூமணம் கமழும். குரூஉச் சுவல்–நிறம் கொண்ட மணல்மேடு. புலிசெத்து–புலிபோலும் என மயங்கி. பரி–விரைந்த செலவு. வயங்குதாள்–வலியமைந்த கால்கள். தகைவரை–நிற்கும் எல்லைக்கண். மல்லல்–வளமை. கொண்கன்–நெய்தல்நிலத் தலைவன்.
விளக்கம் : பூமணங் கமழ நிறம்பெற்று விளங்கும் மணல்மேட்டின் மேலாகப் புன்னையின் பூந்தாது உதிர்ந்து கிடந்ததனைப் புலிபோலும் எனக் கொண்டு அஞ்சிய குதிரைகள், கட்டுக்கு அடங்காவாய்ப் பந்துபோலத் துள்ளிக் குதித்தன என்க. இதனால் ஊரவர் வந்து கூடி ஆர்ப்பரிக்க, ஊரிடத்தே பழியும் எழலாயிற்று. இதனால் அவமானம் அடைந்தான் அவன். அவன் இனியும் இவ்வூரிடத்தே வந்து என்னையும் வரைந்து மணந்து கொள்வானோ என்று ஏங்குகின்றாள் தலைவி.
'சேரி' என்பது ஊரின் புறத்தே ஒரு சாரார் சேர்ந்து இருப்பது. அதனைக் கடந்து சென்றால் உயர்குடியினர் வாழும் மூதூர் இருக்கும். வெருவிய குதிரைகள், சேரியினுள்ளே, சேரி கல்லெனப் புகுந்து சென்று, அம்பல் மூதூர் அலர் எழுமாறு அதனுள்ளும் போயினதாகச் சென்று மறைந்தது என்பதும் கருத்தாகும்.