248. மயில்போல் மருள்வேனோ?

பாடியவர் : காசிபன் கீரனார்.
திணை : முல்லை.
துறை : பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவம் மறுத்தது.

[(து.வி.) கார்ப்பருவம் வந்தது; அவர்தாம் வந்தார் அல்லர் என்று வாடி நலனழிந்த தலைவிக்கு, 'இது உண்மையான கார்காலத்தின் தொடக்கம் அன்று' எனத் தோழி கூறி, அவளைத் தெளிவிக்க முயல்வதுபோல் அமைந்த செய்யுள் இது.]


சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ
பொறிவரி நன்மான் புகர்முகங் கடுப்பத்
தண்புதல் அணிபெற மலர வண்பெயல்
கார்வரு பருவம் என்றனர் மன்இனிப்
பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் 5
அன்பின் மையிற் பண்பில பயிற்றும்
பொய்யிடி யதிர்குரல் வாய்செத்து ஆலும்
இனமயில் மடக்கணம் போல
நினைமருள் வேனோ? வாழியர், மழையே!

தெளிவுரை : மேகமே! என் காதலர் வினைகருதி என்னைப் பிரிந்து சென்ற காலத்து, 'சிறு பூக்களையுடைய முல்லையின் தேன்மணம் கமழ்கின்ற பசிய மலர் எல்லாம், புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட நல்ல யானையின் புள்ளி பொருந்திய முகம்போலத் தோன்றியவாகத், தண்மையான புதர்கள் தோறும் அவை அழகுபெறுமாறு மலர்ந்திருக்கும், மிகுதியான பெயலையுடைய கார்முகில் எழுதரும் பருவமே யான் வரும் பருவம்' என்றனர். அங்ஙனமாகவும், பெருந்துன்பத்தாலே எனது உள்ளம் இப்போது நடுங்குதலைக் காணும் பொருட்டாக, என்பால் நினக்கு அன்பு இல்லாமையாலே, பண்பினுக்கு இயல்பல்லாத நிலையிலே ஒலிக்கின்ற பொய்யான இடியது அதிரும் குரலினையும் மெய்யானதே எனக் கொண்டு ஆரவாரிக்கின்ற, இனஞ்சூழ்ந்த மயில்களினது அறிவில்லாத கூட்டத்தைப்போல, யானும் நினைக் கார்ப்பருவத்து மேகமாகக் கொண்டு மயங்குவேனோ? யான் மயங்கேன் கண்டாய்!

சொற்பொருள் : சிறுவீ–சிறியவான பூக்கள். பசுவீ–பசுமையான புதுப் பூக்கள். பொறி–புள்ளி. வரி–கோடு. புகர்–புள்ளி. அஞர்–துன்பம். பண்பில–பண்பில்லாத் தன்மையோடும் கூடியதாக. வாய்–வாய்மை. ஆலும்–ஆரவாரிக்கும். மடக்கணம்–அறிவற்ற கூட்டம்.

விளக்கம் : மழையை வாழ்த்தியது இகழ்ச்சிக் குறிப்பு. தன் தலைவன் பொய்யுரை புகலா வாய்மையன் ஆதலின், அவன் குறித்துச்சென்ற கார்ப்பருவத்தின் தோற்றத்தையே பொய்த் தோற்றம் என்று இகழ்கின்றாள் தலைவி. இதனைக் கேட்டுத் தோழி, தலைவன் உறுதி பொய்த்தான் எனக்கூற முற்பட்டவள், தலைவியின் கற்புச் செவ்வியை அறிந்து அதனைக் கூறாளாய், தலைவியின் பொறையைப் போற்றுகின்றனள் என்றும் கொள்க.

புதரிற் படர்ந்த முல்லையின் சிறுபூக்கள். யானைமுகம் போலத் தோற்றும் என்றது, அவ்வாறே நீயும் எனக்குத் துன்பத்தாலே தோன்றினை என்பதாம். வண்பெயலால் தண்புதல் அணிபெற்றாற்போல, அவர் வரவால் யானும் அழகுபெறுவேன் என்கின்றாள் தலைவி.

பொய்யிடியைக் கார்காலத்து இடியாம் மெய்யெனக் கருதி ஆரவாரிக்கும் இனமயில் மடக்கணம்போல, நின்வரவை உண்மையான காலத்தின் வரவு எனக்கொண்டு இவ்வூர்ப் பெண்டிர் பலரும் அவரைப் பழித்து ஆரவாரிப்பர் என்பதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/248&oldid=1698416" இலிருந்து மீள்விக்கப்பட்டது