256. கார்ப்பெயல் செய்த காமர்மாலை!

பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாலை.
துறை : 'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது.

[(து-வி.) தலைவன் பொருள் தேடிவருதலைக் கருதினான்; தன்னைப் பிரிந்து போதலையும் எண்ணினான் எனக் கலங்கியழிந்தனள் தலைவி. அவளுக்கு, அவன், தான் போகப் போவதில்லை என தெளிவிப்பதுபோல அமைந்த செய்யுள் இது.]


நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிப்
பல்குறப் பெருநலத் தமர்த்த கண்ணை!
காடே, நிழல்கவின் இழந்த அழல்கவிர் மரத்த
புலம்புவீற் றிருந்து நலஞ்சிதைந் தனவே;
இந்நிலை தவிர்ந்தனம் செலவே; வைந்நுதிக் 5
களவுடன் கமழப் பிடவுத்தளை அவிழக்
கார்ப்பெயல் செய்த காமர் மாலை
மடப்பிணை தழீஇய மாவெருத் திரலை
காழ்கொள் வேலத் தாழ்கிளை பயந்த
கண்கவர் வரிநிழல் வதியும் 10
தண்படு கானமும் தவிர்ந்தனஞ் செலவே!

தெளிவுரை : நீதான். புகழ்மைந்த, குற்றந்தீர்ந்த சிற்றடிகளை உடையை! பல்கிய பெரிதான நலங்களமைந்த அமர்த்த கண்களையும் உடையை! காடோ, நிழலாலே உண்டாகின்ற அழகினை இழந்து போனதும், வேனிலது வெம்மையாலே கரிந்துபோய்க் கிடப்பதுமான மரங்களை உடையது. மாவும் பிறவும் வழங்குதலற்றுத் தனிமை நிலை பெற்றதாய்த் தன் பொலிவழிந்து போயுமிருக்கின்றது! இந்நிலையைக் கருதினமாதலின், நின்னையும் உடன் கொண்டு போதற்கு இயலாமையினால், யாமும், எம் செலவினைக் கோடைக்காலத்தே கைவிட்டனம்.

கூர்மையான நுனியையுடைய களாவின் அரும்புகள் ஒருங்கே மலர்ந்து மணங்கமழும்; பிடவினது அரும்புகள் கட்டவிழ்ந்து இதழ்விரிந்து மலர்ந்திருக்கும்; இங்ஙனமாகப் கார்காலமும் தனக்கு உரியதான பெயலைச் செய்தது. இனிதான இக்காலத்தின் மாலைப்பொழுதிலே, இளைய பிணையினைத் தழுவியின்புற்ற கரிய பிடரினைக் கொண்ட கலைமானானது, வயிரமேறிய வேலமரத்தினது தாழ்ந்து கிடக்கும் கிளைகள் பயந்த, காண்பார் கண்களைக் கவர்கின்ற வரிப்பட்ட நிழலிடத்தே சென்று தங்கியிருக்கும் குளிர்ச்சி பொருந்திய காட்டிடத்தே, நின்னைக் கூடியிருப்பதற்குரியதான இக்கார்காலத்துச் செல்வதனையும் யாம் கைவிட்டனம். எனவே, நின்னைப் பிரிவேனேன நினைந்து நீயும் நலிவது வேண்டாதது காண்!

சொற்பொருள் : அமர்த்தல்–மதர்த்தல். அழல்–கோடையின் வெப்பம். கவர்தல்–சுட்டெரித்தல். புலம்பு–தனிமை; அது மாவும் பிறவும் வழங்குதல் அற்றுப்போன தன்மை. நலம்–காடுதரு பொருள்களாலும் பசுமையாலும் விளங்கிய பொலிவு. களவு–களாமரம். பிடவு–பிடாமரம். எருத்து–பிடரி. இரலை–கலைமான். காழ்–வயிரம். தண்படுகானம்–குளிர்ச்சிப்பட்ட காடு.

விளக்கம் : கோடைகாலத்தே நின் சிற்றடிகள் காட்டின் வெம்மையைத் தாங்காவெனக் கருதியும், நின் கண்களின் அழகெலாம் கெடுமெனக் கருதியும், யாம் செலவைக் கைவிட்டனம். இக்கார்காலத்தேயோ மானினம் கூடிக் கலத்தலைக் கண்டு, யாமும் நின்னைப் பிரிந்து போதற்கு விரும்பாதே, நின்னோடும் இருத்தலையே விரும்பினமாதலின் செலவைக் கைவிட்டனம் என்கின்றான்.

இதன் பயனாகத் தலைவியும், தன் துயரத்தை விட்டாளாய்த் தலைவனோடு கூடிக்கலந்து இன்புறுவள் என்பதாம்.

'பல்குறப் பெருநலத்து அமர்த்த கண்ணை' எனக் கண்களை வியந்தது, அவள் கண்கலங்கி நீர் சொரிய நின்றது கண்டு, அவளைத் தேற்றுவானாகக் கூறியதாகும். 'பாடல் சான்ற பழிதபு சீறடி' என அடியை வியந்தது, அவள் தெளியாளாக அடிதொட்டுச் சூளுரைப்பான் சொல்வதாகும்.

'மடப்பிணை தழீஇய மாவெருத்திரலை' என்றது, அவ்வாறே தானும் தழுவியிருத்தலையே நினைப்பதன்றிப் பிரிந்து போதலை நினையாதான் என்று கார்காலத்தைக் காட்டிக் கூறுகின்றானும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/256&oldid=1698426" இலிருந்து மீள்விக்கப்பட்டது