255. இன்றவர் வாராராயின் நன்று!

பாடியவர் : ஆலம்பேரி சாத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறுபார்த் துற்றது.

[(து.வி.) தன்னைத் தலைவன் வரைந்து மணந்து கொண்டு சென்று, தன்னுடனே கூடி இல்வாழ்க்கை நடத்துதலைப் பெரிதும் விரும்புகின்றாள் தலைவி. அதனைத் தலைவனுக்குச் சொல்ல விரும்புகின்றவள், அவன் வந்து ஒருசார் நிற்பதறிந்து, தோழிக்குச் சொல்வாளேபோல, அவன் கடந்து வரும் வழியின் கொடுமைக்குத் தான் அஞ்சுவதாகக் கூறுகின்றாள். இவ்வாறு தலைவி சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.]


கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே
உருகெழு மரபின் குறிஞ்சி பாடிக்
கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார்
வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை
கன்முகைச் சிலம்பிற் குழூஉ மன்னோ 5
மென்தோள் நெகிழ்ந்துநாம் வருந்தினும், இன்றவர்
வாரா ராயினோ நன்றுமன் தில்ல
உயர்வரை யடுக்கத் தொளிறுபு மின்னிப்
பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள்
திருமணி அரவுத்தேர்ந் துழல 10
உருமுச்சிவந் தெறியும் ஓங்குவரை யாறே!

தெளிவுரை : பேயினங்கள் காற்றோடும் கலந்தவையாய் இயங்குகின்றன; ஊரவர் அனைவரும் செயலொழிந்து உறங்கியிருக்கின்றனர்; கேட்போருக்கு அச்சத்தைத் தருதலையுடைய குறிஞ்சிப் பண்ணைப் பாடியபடியே, காவல் மேற்கொண்டிருக்கும் கானவர்களும் துயில்வாரல்லர். வலிமிகுந்த களிற்றினோடும் போரிட்டதான வாள்போலுங் கோடுகளைக் கொண்ட வேங்கைப் புலியானது, மலையிடத்தேயுள்ள கல்முழைஞ்சினுட் கிடந்ததாய் முழக்கமிடுகின்றது! ஐயகோ! உயர்ந்த மலைப் பக்கத்தே விளக்கமோடே மின்னலைச் செய்தபடியே காற்றும் மழையுமாகக் கலந்து பெய்த இரவுப்பொழுது கழிந்துபோன நடுயாமத்திலே, இடிமுழக்கத்திற்கு அஞ்சியபோதும் தான் இழந்துவிட்ட மணியைத் தேடியபடி பாம்பினம் வருந்தியிருக்க, அவற்றை மேலும் அச்சுறுத்துவதுபோல இடிகள் மிகவும் முழங்கி அதிருகின்ற தன்மையது, உயர்ந்த மலைப்பக்கத்து வழியும் ஆகும். மென்மையுடைய நம் தோள்கள் தளர்வுற்றுப் போக நாம் வருத்தமுற நேரினும், இன்றிரவுப் போதில் அவர் இவற்றைக் கடந்து இங்கு வாராதிருத்தலே மிகவும் நல்லதாகும்!

சொற்பொருள் : கழுது–பேய். கால்–காற்று. கிளர–எழுந்து வீசாநிற்ப. ஊர்மடிதல்–ஊரவர் செயலவிந்து உறங்கிக் கிடத்தல். குறிஞ்சி–குறிஞ்சிப்பண். உருகெழு மரபின் குறிஞ்சி' என்றது, கானவர் முருகயர்தற்கும் வேட்டம்போவதற்கும் இயக்கும் பண் ஆதலினால். குறிஞ்சி பாடுதல்–குறிஞ்சிப் பண்ணிலே பாட்டுப் பாடுதல். கடி–காவல். நகர்–பெருமனை. ‘கானவர்' என்றது, மனைக் காவலரை. 'முகை' என்றது மலைச்சரிவிலுள்ள பாறையிடுக்குகளை 'தோள் நெகிழ்தல்' அவரை நாம் அடையப் பெறாமையால். பெயல்–மழை. கால்–காற்று. பெயல் கால் மயங்கிய–காற்றோடு கலந்து பெருமழையும் பெய்ய. 'பொழுது கழி பானாள்' என்றது, இரவின் நடுயாமப் பொழுதினை. திருமணி –அழகியமணி. உருமு–இடிக்குரல். ஓங்குவரை யாறு–உயர்ந்த வரைப்பக்கத்தே அமைந்த வழி.

விளக்கம் : "யாமத்துவரின் பேயணங்கும் என அஞ்சுவேம், ஊரவர் துயின்று ஊரரவம் ஓய்ந்ததாகலின் அவன் வரவைக் காவலர் எளிதிற் காண்பரெனக் கலங்குவேம், அன்றி அவரும் துயிலாராதலின் அவரால் அவனுக்கு ஏதமுறுமோவென நடுங்குவேம், வழியிடையே களிறுக்குத் தோற்ற வேங்கையாலும் மணி தேடி உழலும் அரவாலும் துன்புறலும் நேருமோவெனவும் கலங்குவேம், இடியும் மழையும் காற்றுங் கூடிய இந்நள்ளிரவில் உயர்வரையிடத்து வழியும் தெளிவாகத் தோன்றாதே எனவும் திகைப்பேம், ஆதலின் இன்று அவர் வாராதிருத்தலே நல்லது. அவர் நினைவாலே வருந்தி எம் தோள்கள் நலியினும் நலியட்டும்" என்று மனநொந்து கூறுகின்றாள் தலைவி.

இதனால், அவன் தமக்கு இன்றியமையாதவன் என்பதும், அவனுக்கு ஏதமெனில் தாம் உயிர்வாழாத் தன்மையேம் எனவும் உணர்த்தி, இந்நிலையினை ஒழித்தற்கு அவன் தன்னை விரைய மணந்துகொள்ளலே நன்மை தருவதாகும் என்பதும் புலப்படுத்தினாள். இதன் பயன் வரைவு வேட்டல் ஆகும். மேற்கோள் : 'இரவுக்குறி வரலால் தலைவி வருந்துவள் என்றது' என இச்செய்யுளை, 'நாற்றமும் தோற்றமும்' (தொல். பொருள் 114) என்னும் சூத்திரத்து, 'ஆற்றது தீமை யறிவுறு கலக்கமும்' என்னும் பகுதியின் உரையிடத்தே ஆசிரியர் நச்சினார்கினியர் காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/255&oldid=1698425" இலிருந்து மீள்விக்கப்பட்டது