264. ஐதுவிரித்த அணிகிளர் கலாவம்!

பாடியவர் : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்.
திணை : பாலை.
துறை : உடன் போகாநின்ற தலைமகன் தலைமகளை வற்புறீஇயது (1); உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதும் ஆம் (2).

[(து.வி.) உடன் போக்கிலே தலைவியோடு செல்லும் தலைவன்; அவளது வருத்தங்கண்டு, அவளைத் தேற்றி, விரையச் செல்லுமாறு நயமுடன் கூறி வற்புறுத்துவதாக அமைந்த செய்யுள் இது (1); அவன் தன் ஊர் அணிமைக் கண் வந்தது எனக் காட்டி அவளை விரைவுபடுத்தியதும் ஆம் (2).]


பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு
வான்தளி பொழிந்த காண்பின் காலை
அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும்
மணிபுரை எருத்தின் மஞ்ஞை போலநின்
வீபெய் கூந்தல் வீசுவளி உளர 5
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே!
வேய்பயி லிரும்பிற் கோவலர் யாத்த
ஆபூண் தெண்மணி இயம்பும்
உதுக்காண் தோன்றுமெம் சிறுநல் லூரே!

தெளிவுரை : மடந்தையே! பொழுதும் ஒளிகுறைவுற்றதாய் மறையத் தொடங்குகின்றது. மூங்கில் செறிந்துள்ள குறுங்காட்டுப் புறங்களிலே, கோவலர்கள் பசுக்களுக்குக் கட்டியுள்ள அழகிய தெளிவான ஓசைகொண்ட மணிகளும் ஒலிக்கத் தொடங்கின. அவ்விடத்தே காண்பாயாக! எம் சிறிய நல்ல ஊரும் அதோ தோன்றுகின்றது. பாம்பு அச்சமுற்றுத் தனது புற்று வளையிடத்தே சென்று பதுங்குமாறு முழக்கமிட்டபடி, வலமாக மேலெழுந்து வானமும் மழையைப் பொழிந்தது; அதனாலே நிலப்பரப்பு எங்கணும் காண்பதற்கு இனிதான செடி கொடிகளாலே பசுமை பெற்றுத் தோன்றும் கார்ப்பருவமும் வந்தது; அக்கார்ப் பருவத்திலே, அழகு விளங்குகின்ற தன் தோகையைப் பைய விரித்தபடியே ஆடலைத் தொடங்கும், நீலமணியைப் போல விளங்கும் கழுத்தைக்கொண்ட மயிலைப்போல, நினது பூச்சூட்டப் பெற்றிருக்கின்ற கூந்தலானது வீசுகின்ற காற்றாலே அசைந்தாட, முற்பட நீயும் செல்வாயாக!

சொற்பொருள் : அளை–பாம்புப் புற்றாகிய வளை. செறிய– பதுங்கிக்கொள்ள. வலனேர்பு–வலமாக மேலெழுந்து. தளி–மழை. காண்பு இன் காலை–காட்சிக்கு இனிதான பொழுது; இது கார்ப்பருவம். அணிகிளர் கலாவம்–அழகு சுடரிடுகின்ற தோகை. ஐது விரித்து – பைய விரித்து; வியக்கும்படி விரித்தும் ஆம். மணி– நீலமணி. உளர–அசைந்தாட பொழுது எல்லின்று–ஞாயிறும் ஒளிகுன்றப் பொழுதும் சாய்ந்தது. இரும்பு–குறுங்காடு, தெண்மணி – தெளிவான ஓசையுடைய மணி. சிறுநல் ஊர்–சிறிய நல்ல ஊர்.

விளக்கம் : தலைவிக்கு மயிலையும் விரிந்து ஆடும் அவள் கூந்தலுக்குத் தோகையையும் உவமித்தனர். 'கொடிச்சி கூந்தல் போலத் தோகை அஞ்சிறை விரிக்கும்' என ஐங்குறு நூற்றும் (ஐங். 300), விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக்கலாவ மஞ்ஞையின் காண்வர இயலி' எனப் புறநானூற்றும் (புறம். 133) வருதல் காண்க.

தன்னூர் மிகமிக அணிமைக் கண்ணேயே உளது என்பான் ஆபூணும் மணியின் ஒலியைக் ஒலியைக் கேட்குமாறு உரைத்தான். விரைந்து செல்வாயாக எனச் சொல்வான் கூந்தல் வளியுளர ஏகுதி என்கின்றான். அப்படி ஏகுகின்ற காட்சியைக் கண்டு தானும் இன்புறுதலைக் கூறுவான், அவளது எழிலை வியந்தானாக, 'அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல–ஏகுதி' என்கின்றான்.

இதனைக் கேட்ட அவளும், தன் அயாவொழிந்தாளாக, மனத்தே ஊக்கமும், தன் காதலனது ஊரைச் சென்றடையும் விருப்பமும் மேலெழ, விரைந்து நடத்தலைச் செய்வாள் என்பது இப்படிச் சொல்வதன் பயனாகும். கார்ப்பருவம் கூறியது உடனுறைந்து மகிழ்தற்கு உரிய பருவம் அதுவாதலால். ஊர் அணிமைத்தாதலின் அச்சமின்றிச் செல்லலாம் என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/264&oldid=1698438" இலிருந்து மீள்விக்கப்பட்டது