265. கலாவத்தன்ன ஒலிமென் கூந்தல்!

பாடியவர் : பரணர்.
திணை : குறிஞ்சி.
துறை : பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.

[(து-வி.) தலைவியைத் தோழியின் ஒத்துழைப்போடு அடைதலை விரும்பினான் தலைவன். அவள், அவன் நிலைகண்டு, 'இவன் யாதோவொரு குறையுடையவன் போலும்!' என உய்த்து உணருவதற்கு முன்பே, தலைவனின் ஏக்கம் மிகுதியாகிறது. அவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


இறுகுழல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
அள்ள லாடிய புள்ளி வரிக்கலை
வீளை யம்பின் வில்லோர் பெருமகன்
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத் தன்ன வார மார்பின் 5
சிறுகோற் சென்னி ஆரேற் றன்ன
மாரி வண்மகிழ் ஓரி கொல்லிக்
கலிமயிற் கலாவத் தன்ன விவள்
ஒலிமென் கூந்தல் நம்வயி னானே.

தெளிவுரை : காய்ந்துபோன புல்லை மேய்ந்ததனாலே உதிர்ந்த முதிர்ந்த கொம்பினை உடையதும், புள்ளியையும் வரியையும் உடையதுமான கலைமானானது, சேற்றிலே கிடந்து புரண்டு தன் வெம்மையைத் தீர்த்துக்கொள்ளும். அத்தகைய, ஒலியோடு செலுத்தப்படும் அம்பினைக் கொண்டவரான வில்வீரர்களின் தலைவனும், பொலிவு பொருந்திய தன் தோளிலே கவசம் பூட்டியிருப்போனுமாகிய மிஞிலி என்பவன், பேணிக் காத்துவரும் பாரம் என்னும் மலைநாட்டூரைப் போன்றதும்,

ஆத்திமாலை சூடிய மார்பினனான சோழன், தன் கையிற் சிறிதான செங்கோலைக் கொண்டபடி சிற்றரசரை வரவேற்கும், 'ஆரேற்று' என்னும் அருளைப் போன்றதும்,

மாரிபோல வழங்கும் கொடை மிகுதியும் கள்ளுணவு முடைய ஓரி என்பானின் கொல்லி மலையிடத்துள்ள செருக்கிய மயிலைப் போன்றதுமான,

அழகினையுடையவள் இவள் ஆவாள். இவளது தழைத்த மென்கூந்தலானது நமக்கே உரியவாகும் அல்லவோ!

சொற்பொருள் : இறுகுபுல்–காய்ந்துபோன கரட்டுப்புல்; தரை ஈரமற்று இறுகிப் போகப் புல்லும் கரடுபட்டுப் போயிற்று என்க. அதனை மேய்தலாலே கோடு தரையிற் பட்டுப்பட்டுத் தெரித்து வீழ்தலின் 'அறுகோட்டு' என்றனர். முற்றல்–முதிர்ச்சி; கலையின் கோடு முதிர்ச்சியடைந்ததும் கழன்று வீழும்! அதுபோது உண்டாகும் நோவைத் தீர்த்துக்கொள்ள, அது சேற்றிலே ஆடியது என்று கொள்க. அதுவும் அச்சமின்றி வாழும் சிறப்புடையது மிஞிலி காக்கும் பாரம்!

'சிறுகோல்' என்றது செங்கோலினை; அது செங்கோன்மையின் அடையாளமாகச் சோழன் கையிலே திகழ்வது. 'ஆரேற்று' என்றது, சோழன் தனக்கு உட்பட்ட தலைவர்களை வரவேற்றுப் பாராட்டி ஆத்திமாலை சூடிப்போற்றும் ஒருவகை விழாக் கோலம்.

கலிமயில் – செருக்கிய மயில்.

விளக்கம் : நோயுற்றுத் தன் கழன்ற கோட்டைவிட்டு எஞ்சிய பகுதியைச் சேற்றிலாட்டியபடி இருக்கும் கலைமானுக்குத் துன்பஞ் செய்யாது ஏகும் வீளை அம்பின் வில்லோர் என்று, அவரது அருளுடைமையைக் கூறினர்.

தனக்கு உட்பட்டாரையும் வரவேற்றுப் போற்றி, அவர்க்கும் தனக்கு ஒப்ப ஆத்திசூடி மகிழும் சோழனின் சிறந்த அருளுந் தன்மையையும் கூறினர்.

மாரிபோல வழங்கும் வண்மையும், மகிழ்வூட்டும் கள்வளமும் கொண்ட கொல்லிமலையிலே செருக்கித் திரியும் மயிலின் எழிலையும் கூறினர்.

இதனால், தலைவியது குடிச்சிறப்பும், அருள்தல் உள்ளமும் காட்டி, அவள் தனக்கே உரியவள் என்பதும் கூறுகின்றான் தலைவன்!

போற்றப்பட்டோர் : கொண்கான நாட்டு நன்னனின் படைத்தலைவருள் ஒருவனாகிய மிஞிலி என்பவன்; 'சென்னி' என்பான் கரிகாலனின் தந்தையாகிய இளஞ்சேட் சென்னி; ஓரி கொல்லி மலைக்குத் தலைவன்.

'கூந்தல் நம்வயினானே' என்றது, அது தன் ஒருவனாலேயே தீண்டற்கு உரியதென்னும் உரிமை பற்றியாம்! கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே' என வரும் குறுந்தொகையும் இதனை விளக்கும் (குறுந். 225). கணவரை இழந்த மகளிர் கூந்தலை மழித்து விடுவது இயல்பான பண்டைய மரபு. இதனைக் 'கொய்ம் மழித்தலையொடு கைம்மையுற' எனவரும் புறப்பாட்டடியாலும் அறியலாம் (புறம். 261).

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/265&oldid=1698439" இலிருந்து மீள்விக்கப்பட்டது