266. குறுங்காற் குரவின் குவியிணர்!

பாடியவர் : கச்சிப்பேட்டு இளந்தச்சனார்.
திணை : முல்லை.
துறை : தலைமகனைச் செலவுடன் பட்டது (1); கடிநகர் வரைப்பிற் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் த தோழி 'நும்மாலே யாயிற்று' என்று சொல்லியதூம் ஆம் (2).

[(து-வி.) தலைமகன் வினைவயிற் பிரியக் கருதியதறிந்த தோழி, அவனை நெருங்கி, தாம் அவனது செலவுக்கு உடன்பட்டு ஆற்றியிருப்பதாகக் கூறி, அவனைக் கவலையற்றுச் சென்று வருமாறு உறுதிமொழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது (1); தலைமகன், வரைவிடைப் பிரிந்து சென்றவன், தலைவியை மணம்வேட்டுச் சான்றோருடன் அவள் இல்லத்துக்கு வந்தபோது, தோழி, 'இத்திருமணமானது நுமது முயற்சியாலேயே நடந்தது' என அவனைப் பாராட்டுவாளாக மகிழ்ந்து கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.]


கொல்லைக் கோவலர் குறும்புனஞ் சேர்ந்த
குறுங்காற் குரவின் குவியிணர் வான்பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலு லாங்கண் சீறூ ரேமே
அதுவே சாலுவ காமம் அன்றியும் 5
எம்விட் டகறிர் ஆயின் கொன்னொன்று.
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே!

தெளிவுரை : ஐயனே! நீவிர் வாழ்வீராக! புன்செய்க் காட்டிடத்தே வாழ்பவர் ஆப் பயன் கொள்வாரான கோவலர். அவருக்குரித்தான குறுகிய புனங்களுக்கு அயலாகக் குறுகிய அடிமரத்தையுடைய குராமரங்கள் குவிந்த கொத்தாகிய வெண்பூக்களைப் பூத்திருக்கும். ஆடுகளை மேய்ப்போனாகிய இடையன் அவற்றைத் தன் தலையிலே சூடிக் கொள்வான். அவ்விடத்தாகிய அகன்ற உள்ளிடங்கொண்ட மனைகளையுடைய சிற்றூரிடத்தே வாழ்ந்திருப்பவர் யாம். அங்ஙனம் வாழ்வதொன்றுமே எம் விருப்பத்திற்குப் பொருந்துவதாயிருக்கும். அல்லாமலும், எம்மை இவ்விடத்தேயே தனித்து இருக்குமாறு நீர்தாம் பிரியக் கருதுவீராயின், நுமக்கு ஒன்றைச் சொல்லுகேன். ஆயமும் தாயருமாகிய எம் பிறந்தகத்துச் சூழலினின்றும் வேறுபடுத்தி எம்மைக் கொணர்ந்து, நுமது இல்லத்தின் கண்ணே இருக்கச் செய்த பொழுதிலே, யாமும் வருந்தியவிடத்து, பெருங்குடியிலே நிலவும் அந்நிலைமைகள் எக்காலத்தும் பெருமை குன்றுவனவாகும் அல்லவோ!

சொற்பொருள் : கொல்லை – புன்செய்ப் பகுதியாகிய தோட்டக்கால்கள். கோவலர் – பசுநிரை மேய்ப்போர். குறும் புனம்–குறுகிய அளவுள்ள தினைப்புனம். குறுங்கால்–குறுகிய அடிமரத்தையுடைய. குரவு–குராமரம். ஆடுடை இடை மகன்–ஆடுகளை மேய்க்கின்றவனாகிய இடைக்குலத்தான். அகலுள்–அகன்ற மனைப்பகுதி. சீறூர்–சிற்றூர். வேறுபட்டு–தாயரும் ஆயருமாகிய பிறந்தகச் சூழலின்று வரைந்து கொண்டு, தன் மனையகத்தே வேறுபட்ட சூழ்நிலையிலே இருக்கச் செய்த நிலை. இரியின்–வருந்தின்.

விளக்கம் : குரவு நெடுமரமன்று; குறுமரவகை சார்ந்தது என்பதனால் 'குறுங்கால் குரவு'என்றனர். ஆடுடை இடையன் என்றது, ஆடுகளை உடைய இடையன் என்றும், களித்து ஆடுகின்ற ஆட்டத்தை உடையவனாகிய இடையன் என்றும் பொருள் தரும். 'சிற்றூரே மாதலின்' என்று கூறியது, யாம் ஒருவர்க்கொருவர் உதவுகின்ற கலந்துறை வாழ்விலே கூடியிருப்பவராவேம் என்றதாம். சிற்றூருள் ஒருவர்க்கு வரும் இன்பதுன்பங்களை அனைவருமே கலந்து மகிழ்ந்தும் வருந்தியும் ஏற்பது இயல்பு.

இரண்டாவது கூறிய துறைக்கு ஏற்பப் பொருள் கொள்ளுங் காலத்தே:—

வரைவிடை வைத்துப் 'பிரிந்தபோது, யாம் எம் சிற்றூரின் கண்ணுள்ள எம் பெற்றோர் இல்லின் கண்ணே இருந்தேமாய் ஆற்றியிருந்தனம். நீர்தாம் நும் முயற்சியாலே இதுபோது மணவினைக்கு முயன்று வந்துள்ளீர். அனைத்தும் நும்மாலே ஆயிற்று. நும்மை மணந்து நும் இல்லம் புகுந்து இல்லறம் ஏற்கும் தலைவி, நும் பேரில்லத்தின் கண்ணும் நும்குடிப்பெருமைக்குக் குறை ஏற்படாவண்ணம் நடந்து கொள்வாள் என்னும் கருத்துப்படப் பொருளைக் கூட்டி உரைத்துக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/266&oldid=1698451" இலிருந்து மீள்விக்கப்பட்டது