நற்றிணை-2/272
272. அலர்வாய் அம்பல் மூதூர் !
பாடியவர் : முக்கல் ஆசான் நல்வெள்ளையார். திணை : நெய்தல். துறை : (1) வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; (2) தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய்ச் சொல்லியதூஉம் ஆம்.
[(து-வி.) மணந்து கொள்வதிலே மனஞ் செலுத்தாமல், களவு உறவினையே தலைவன் விரும்பினவனாக நெடுங்காலம் வந்து ஒழுகி வருகின்றான். அவனை விரைய மணந்து கொள்வதற்குத் தூண்டும் வகையால், அவன் கேட்டு உணருமாறு தலைமகள் தோழிக்குச் சொல்லுவாள் போலச் சொன்னதாகவோ (1), அல்லது தோழி தலைவிக்குச் சொல்லுவாள் போலச் சொன்னதாகவோ (2) அமைந்த செய்யுள் இது.]
கடலம் காக்கைச் செவ்வாய்ச் சேவல்
படிவ மகளிர் கொடிகொய் தழித்த
பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக்
கடுஞ்சூல் வதிந்த காமர் மேடைக்கு
இருஞ்சேற் றயிரை தேரிய தெண்கழிப்
5
பூவுடைக் குட்டந் துழவுந் துறைவன்
நல்கா மையின் நசைபழு தாகப்
பெருங்கை யற்றவென் சிறுமை யலர்வாய்
அம்பன் மூதூர் அலர்தந்து
நோயா கின்றது நோயினும் பெரிதே!
10
தெளிவுரை : நோன்பு மேற்கொண்டவரான மகளிர்கள் கொடிகளைக் கொய்து அழித்து இடம்செய்துள்ள நெருங்கிய அடும்பின் கொடிகளைக் கொண்டதான் வெண்மணற் பாங்கின் ஒருபக்கத்தே, நிரம்பிய சூலுடனே சென்று தங்கியிருந்தது, கடற்காக்கைப்பேடை ஒன்று. தன்னாலே விரும்பப்படுகின்ற அந்தத் தன் பேடைக்கு உணவாகக் கரிய சேற்றினிடத்தே உள்ளதான அயிரைமீனைத் தேர்ந்தெடுத்துக் கொணர விரும்பியது, கடலியங்கு நீர்க்காக்கையுள் சிவந்த வாயினதான அதன் சேவல். அதுதான் அதன்பொருட்டாகத் தெளிந்த நீரையுடைய கழியிடத்தேயுள்ள பூக்களையுடைய ஆழமான இடத்தினைச் சென்று துழாவியபடி இருக்கும். இத்தன்மைத்தான கடற்றுறைக்கு உரியவன் நம் தலைவன். அவன் நமக்குத் தலையளி செய்யாமையினாலே நாம் அவனோடுங் கூடியிருந்து இல்லறம் பேணுவோம் என்னும் நம்முடைய விருப்பமும் பழுதாகி விட்டது. அதனாலே பெரிதும் செயலிழந்து போயின என் காமநோயாகிய சிறுமைப் பாடானது பழிகூறுதலே இயல்பாகவுடைய அலருரைக்கும் பெண்டிர் வாழும் எம்மூதூரிடத்தே அலரையும் கொண்டு தந்தது. அதுதான், அவரைப் பிரிதலாலுண்டாகிய நோயினுங் காட்டில் பெரிதும் நோய் செய்வதாகின்றது, தோழி!
சொற்பொருள் : கடலம்காக்கை–கடலைச் சார்ந்து வாழ்வதாகிய கடற் காக்கை. படிவமகளிர்–நோன்பு மேற்கொண்ட மகளிர்; பொம்மல்–செறிவு. சிறை–பக்கம். கடுஞ்சூல்–நிறைசூல்; முதற்சூலும் ஆம். வதிந்த–தங்கிய; தங்குதல் தன்னாற் பறந்து சென்று இரைதேட வியலாத தளர்ச்சி மிகுதியினால். தெண்கழி– மேலே தெளிந்த நீரைக் கொண்ட கழிப்பகுதி. பூவுடைக்குட்டம்–நீர்ப்பூக்களை உடையதான ஆழமான இடம். துழவும்–துழாவித்தேடும். நசை–விருப்பம்; இஃது இல்லுறை மனைவியாக அமைந்து அறம் பேணும் வாழ்க்கையிலே கொண்ட விருப்பம். பெருங்கையற்ற–பெரிதும் செயலழிந்த. சிறுமை–களவுறவால் மேனியின் வண்ணம் மாறிச் சிறுமையுற்ற தன்மை.
விளக்கம் : 'படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறை' என்றதனால், அந்நாளைய மகளிர் கடல் தெய்வத்தை வேட்டு நோன்பு பூண்டு, அதனைக் கழிக்கும் நாளிலே பொங்கலிட்டுப் பூசனை செய்வதற்கு வசதியாகச் செய்யப்பெற்ற வெண்மணல் மேட்டின் ஒரு பக்கம் என்றும் கொள்க. மணந்து இல்லறமாற்றும் பெருமையை விரும்பியவள், அதுதான் நேராமையின் நொந்து வாடி நலிவுற்று, அதனால் ஊரவர் பழிதூற்றச் சிறுமையும் எய்தினள் என்பதாம். இதனைக் கேட்டலும் தலைவன், அதுதான் தன்னாலே உண்டாயது என்பது உணர்ந்தானாய், விரைவில் அவளை மணக்கக் கருதுவான் என்பதுமாம். காக்கைப் பேடைக்குச் சேவல் அன்போடு செய்யும் அது தானும், அவர் நம் மாட்டுச் செய்யக் கருதிலரே என்று நினைந்து நொந்ததுமாம்.
உள்ளுறை : காக்கைச் சேவலானது கடுஞ்சூலோடு வதிந்த தன் பேடைக்கு அயிரை மீனைத் தேடும் என்றது அவ்வாறே தலைவனும் பொருளீட்டி வந்து பெற்றோருக்கு அளித்துத், தன்னை மணந்து இன்புறுத்தல் வேண்டும் என்றதாம்.
கடுஞ்சூலோடு வெண்மணல் ஒருசிறை வதியும் பேடைக்கு அங்குள்ள அடும்பு பயன்படாமை போலத், தான் பிறந்த இல்லிடத்தே வாழும் தலைவிக்கு, அங்குள்ள வளன் எல்லாம் பயன் தருவதின்று; தலைவனின் தலையளியே இன்பந்தருவது, பயன்தருவது என்றதுமாம்.
'படிவமகளிர்' என்றது தாமும் அவ்வாறே நோன்பு பூண்டு தெய்வத்தைத் தம் காதலனோடு கடிமணம் புணர்க்குமாறு செய்கவென வேட்டதனைக் குறிப்பால் உணர்த்தியதுமாம். அன்றிப் பிரிவுத் துயரால் வருந்தி உண்ணாமையும் ஒப்பனைசெய்யாமையும் மேற்கொண்டதனால், 'படிவமகளிர்' போலத் தோன்றியதனாலும் ஆம்.