273. எவ்வங்கூர்ந்த ஏமுறு துயரம் !

பாடியவர் : மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகனது வரவுணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக அவள் வேலனைக் கூவி வெறியயரும்' என்பதுபடச் சொல்லியது.

[(து-வி.) இப்படிக் கூறுவதனாலே தலைவன் தெளிவு அடைந்தவனாகத் தலைமகளை விரைவிலே மணந்து கொண்டு இல்லறமாற்றுதலைப் பற்றிய முடிபினைக் கொள்பவனாவான் என்று கொள்க.]


இஃதெவன் கொல்லோ தோழி, மெய்பரந்து
எவ்வங் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையில் தான்வருத் துறீஇ நம்வயின்
அறியா தயர்ந்த அன்னைக்கு வெறியென
வேல னுரைக்கும் என்ப வாகலின் 5
வண்ண மிகுத்த அண்ணல் யானை
நீர்கொள் நெடுஞ்சுனை யமைந்துவார்ந் துறைந்தென்
கண்போல் நீலம் தண்கமழ் சிறக்குங்
குன்ற நாடனை உள்ளுதொறும்
நெஞ்சுநடுக் குறூஉம் அவன் பண்புதரு படரே. 10

தெளிவுரை : தோழி! நின்னது மெய்யனைத்துமே பரந்ததாகித் துன்பத்தை உறுவித்த நம்முடைய வருத்தத்தை நம் அன்னையும் கண்டனள். நம்பாலுள்ள விருப்பத்தினாலே தானும் வருத்தமுற்றவளாகினள். நம்பால் நிகழ்ந்ததனை ஏதும் அறியாதாளாக, முருகவேளுக்கு வெறியினையும் எடுத்தனள். அதன்கண் வெறியாடும் வேலனும், 'முருகுதான் நின்னை அணங்கிற்று' என்று கூறுவான் என்பர். ஆதலினாலே,

வண்ணத்தாலே அழகு மிகுதியாகப் பெற்ற பெரிய யானையானது, நீர் முகந்து கொள்ளுகின்ற நெடுஞ்சுனையின் கண்ணே அமைந்து நெடிதாகத் தங்கியிருக்கின்ற அவ்விடத்தே, என்கண்போல மலர்கின்ற நீலமலர்கள், தண்ணியவாய், மிகுதியாக மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்றது மாகிய குன்றத்துக்குரிய நாடனாகிய நம் தலைவனை எண்ணுந்தோறும், அவன் பண்பு தருகின்ற வருத்தமானது, எனது நெஞ்சத்தையே நடுக்கமுறச் செய்யும் தன்மையாகிறதே! இதுதான் எவ்வாறு இனி முடியுமோ தோழி?

சொற்பொருள் : மெய் பரந்து–மெய்யினிடத்தே பரவி. எவ்வம்–துன்பம். வெம்மை–விருப்பம். அறியாது–உண்மை அறியாது. நம்வயின் அறியாது–நம்மிடத்தே வினவி உண்மை அறியாது எனலும் ஆம். அயர்ந்த–வெறியயர்ந்த. அயர்ந்த அன்னை–வருந்தித் தளர்ந்த அன்னையும் ஆம். வெறி–வெறியாட்டு. வண்ணம்–நிறம். இது முகத்தில் தோன்றும் புள்ளிகளால் உண்டாவது. அண்ணல்–தலைமைப்பாடு. பெரிய பண்பு–சால்பு; இது முன்பு செய்த தலையளியை நினைந்து கூறியது.

விளக்கம் : அவன் நமக்குச் செய்த தலையளி எல்லாம் இதுபோது எவ்வங்கூர்ந்த ஏமுறு துயரமாகவே விளைந்தது என்றனள். இஃது அவன் வரைந்து கொண்டு இல்லறம் இயற்றுங் கருத்திலனாகக் களவு உறவிலேயே நீடித்த விருப்பினனாக விளங்கியமையை நினைந்து வருந்திக் கூறியதாகும். 'வெம்மையில் தான் வருத்துறீஇ' என்றது, அன்னை நம் துயரத்தைக் கண்டதும் நம்பாலுள்ள அன்பினாலே வருத்தமடைந்தனள். அவன் அன்பிலனாதலின் அதனைக் குறித்து ஏதும் கருதிற்றிலன் என்றதாம். 'அயர்ந்த அன்னை' இது எதனால் உற்றதென அறியாளாக மயங்கித் தளர்ந்த அன்னை என்றதாம். 'வெறியென வேலன் உரைக்கும் என்ப' என்றது, 'முருகே அணங்கிற்று; வெறியாடி முருகை வழிபடுக' என்பான் வேலன் என்று சொல்லுவார்கள் என்றது, பிறர் உரைப்பதைக் கேட்டுக் கூறியதாம்.

'அமைந்து வார்ந்து உறைந்து என் கண்போல் நீலம் தண்கமழ் சிறக்கும்' என, நீலத்தின் செறிவை உரைத்ததாகவும் கொள்ளலாம். பண்பு படர் தருவதன்று எனினும், அதுதான் இதுபோது படர்தருகின்றதே; இதுதான் இனி என்னவாக முடியுமோ என்பதுமாம்.

'யானை நீர் கொள்ளும் தண்சுனையிடத்து நீலம் தண்கமழ் சிறக்கும் என்றது, தலைவன் தலைவியைக் கொள்ளக்கருதித் தலைவியின் மனையிடத்து வேட்டுவருங் காலத்தே, அவளது இல்லத்தாரும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதாம்.

'என்னவாகுமோ?' என்று கவலையுற்றது, தலைவியின் களவுக் காதல் உறவினைக் கருதியாகும்.

உள்ளுறை : நீர் உண்ணும் அண்ணல் யானை தலைவனாகவும், அது உண்ணும் சுனை தலைவியது குடியாகவும், நீர் தலைவியாகவும், நீலம் தண்கமழ் சிறத்தல் அவளைப் பெற்ற பெற்றோரும் பிறரும் மகிழ்தலாகவும் உள்ளுறை பொருள் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/273&oldid=1698469" இலிருந்து மீள்விக்கப்பட்டது