278. கோடுதோறும் நெய்கனி பசுங்காய்!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.

[(து.வி.) வரைபொருள் குறித்துப் பிரிந்து சென்றோனாகிய தலைவன், குறித்த காலத்து வந்தானில்லை. அதனாலே தன் நெஞ்சத் துயரம் மிகுந்தாளாய் மெலிந்து வாடினாள் தலைவி. அதுகாலை அவன் பலரும் அறியுமாறு வருதலைக் கண்ட தோழி, அவன் வரைவொடு வருதலை உணர்ந்து, தலைவிபாற் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


படுகாழ் நாறிய பராரைப் புன்னை
ஆடுமரல் மொக்குளின் அரும்புவாய் அவிழப்
பொன்னின் அன்ன தாதுபடு பன்மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய்கனி பசுங்காய் தூங்குந் துறைவனை 5
இனியறிந் திசினே கொண்கன் ஆகுதல்
கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
குளம்பினுஞ் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதைவெண் மணலே.

தெளிவுரை : தானே வித்து வீழ்ந்து முளைத்த பருத்த அடியை உடையதான புன்னையது, அடுத்ததாக வளர்ந்துள்ள மரலின் பழம்போலும் அரும்புகள், வாய்திறந்த வாய் இதழ் விரிந்தன. அங்ஙனம் மலர்ந்த, பொன்போல விளங்கும் மகரந்தமிக்க பலவாகிய அம்மலர்களிடத்தே, சூடுவோர் கொய்ததுபோக எஞ்சியுள்ள மலர்கள், கிளைகள் தோறும் நெய்கனியும் பசுங்காய்களாக முதிர்ந்து தூங்கும். இத்தகைய துறைக்கு உரியவனான நம் தலைவனை, நினக்கு உரிய கணவனாதலையும், இப்பொழுது யான் அறிந்து கொண்டேன். கடற்கழியின் சேற்றிடத்தே வந்தமையால் சேறுபடிந்த திரண்ட கால்களைக் கொண்ட கோவேறு கழுதையின் குளம்பின் எப்புறமும் சிவந்த இறா மீன்கள் உள்ளொடுங்கப் பட்டவாய் அழிந்தன. மற்று, அவன்றன் கோதையிடத்தும், அணிந்த உடை முதலிய யாவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய நுண்மணல் சென்று படிந்துள்ளது!

கருத்து : 'இதனால், அவன் நின்னை மணந்து கொள்வதனாலே, நீயும் இனி இன்புற்றிருப்பாயாக' என்று வாழ்த்தியதாம்.

சொற்பொருள் : படுகாழ் – தானே வீழும் வித்து; யாரும் போடாதது என்பது கருத்து. நாறுதல் – முளைத்து வளர்தல். பராரை – பருத்த அடிமரம். அடுமரல், புன்னையை அடுத்து வளர்ந்துள்ள மரல். 'மரல்' கள்ளி வகையுள் ஒன்று. மொக்குள் –மொட்டு; பூவரும்பு சூடுநர் – பூச்சூடுவாரான மகளிர். நெய் – எண்ணெய். பசுங்காய் – பசிய காய்கள்; வெண்முகை இதழ் விரிந்து பொன்னிறத் தாதோடு விளங்கி இப்போது பசுங்காயாயும் ஆயிற்று என்க, கொண்கன் – கணவன். கழி – உப்பங்கழி. ஊதை – ஊதற்காற்று.

விளக்கம் : அவன் விரைந்து வருகின்றான் என்பதும், பலரறிய வருகின்றான் என்பதும் தோன்ற இறா அத்திரியின் குழம்பில் ஒடுங்கினதும், கோதை முதலாயவற்றுள் ஊதை மணல் ஓடுங்கினதும் கூறினளாம். இதனால், அவன் பகற் போதிலேயே பலரறிய வந்தனன் என்பதும், அதுதான் வரைவொடு வந்தது என்பதும் உணர்த்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/278&oldid=1698483" இலிருந்து மீள்விக்கப்பட்டது